Thursday 23 June 2016

நல்லதோர் வீணை செய்தேன் - வரலொட்டி ரெங்கசாமி



சென்னையில் மழை வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடக்க வேண்டிய புத்தகத் திருவிழா சற்றுத் தாமதமாக ஜூன் மாதம் நடந்து முடிந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் ஸ்டைலில் படு பிரமாண்டமாகவே இருந்தது. லட்சக்கணக்கான புத்தகங்களில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக கடினம் என்பது என்னைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் புத்தகக் கடலிலிருந்து ஒரு சில முத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் வாங்கிய முத்துக்களில் முதலில் எதை வாசிப்பது என யோசித்தப்போது நான் தயங்காமல் தேர்ந்தெடுத்தது வரலொட்டி ரெங்கசாமி எழுதிய நல்லதோர் வீணை செய்தேன்.

Tuesday 3 May 2016

கமலாம்பாள் சரித்திரம்



நம் வரலாற்றை அறிய வரலாற்று நூல்கள் மட்டும் போதாது. வரலாறு முக்கியமானவர்களைப் பற்றியேக் குறிப்பிடும். சாமானிய மனிதனைப் பற்றி அறிய அது உதவாது. மாறாக சாதாரண மக்களின் வாழ்க்கை முறையை அறிய கலை இலக்கியமே நல்ல தேர்வு. பல காலகட்டங்களில் எழுதப்படும் கதைகள், கட்டுரைகள் என நாம் வாசிக்க வாசிக்க நம் அறிவு விரிவடைவதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்ற தெளிவான வடிவமும் கிடைக்கும். கமலாம்பாள் சரித்திரமும் அந்த வகையை சேர்ந்ததுதான்.

Saturday 2 April 2016

ஆலய பிரவேசம் - ஒப்பிலியப்பன் கோயில்


’உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது வழக்கு. உப்பில்லா சாப்பாட்டை நம்மால் ஒரு கவளம் கூட எடுத்து வாயில் வைக்க முடியாது. ஆனால் மனதிற்கு பிடித்த பெண்ணை மணப்பதற்காக உப்பில்லாமல் சாப்பிட சம்மதித்துப் பல யுகங்களாக உப்பில்லாமலேயே சாப்பிட்டு வரும் திருவிண்ணகரப்பன் என்னும் ஒப்பிலியப்பன் எழுந்தருளியிருக்கும் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு பிரவேசித்து அவரின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக்கொள்வோம்.

Friday 25 March 2016

மாட்டுத்தாவணி




நாலாபக்கமும் நாம் சுற்றும்போது பல ஊர்களையும் கடக்கிறோம். பல ஊரின் பெயர்கள் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கும். ஊர் சுற்றும்போது அதுப் போன்ற பெயர்களைப் பார்க்கும்போது அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என விவாதித்துக் கொண்டே செல்வது வழக்கம். சில ஊர்களுக்கு பெயரைக் கேட்டதும் நமக்குப் பொருள் அல்லது காரணம் விளங்கிவிடும். சில பெயர்கள் நாளடைவில் மருவி இன்று சம்பந்தமேயில்லாமல் வேறு ஏதோ ஒரு அர்த்தத்தை சுமந்து கொண்டு நிற்கும்.

சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி



எப்பொழுதும் படிப்பதற்கு ஏதேனும் ஒரு நல்ல புத்தகம் இருக்கவேண்டும். ஒன்று முடிந்தால் அடுத்தது தயாராக இருக்கவேண்டும். ஆனால் படிக்கும் புத்தகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பேன். படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் படிக்கும் புத்தகம் கதையானாலும், கட்டுரையானாலும் சுவையாகவும் இருக்க வேண்டும் அல்லவா! அதனால் புத்தகங்கள் வாங்குவதில் ஏனோதானோ என்றில்லாமல் அக்கறையுடன் வாங்குவது வழக்கம். அன்று தி.ஜானகிராமனின் மரப்பசு படித்து முடிக்கும் தருவாயில் அடுத்தப் புத்தகம் வாங்க அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். அது சின்ன கடைதான். அதிக புத்தகங்கள் இருக்காது. இருக்கும் புத்தகங்களில் பார்வையை ஓட்டினேன். எதிலும் சுவாரசியம் தட்டவில்லை. கடைசிப் புத்தகமாக இருந்தது நா.பார்த்தசாரதியின் சமுதாய வீதி.

Wednesday 23 March 2016

முதுமலை காட்டினிலே...


என் நண்பர்கள் என் சொந்த ஊர் என்ன முதுமலைக் காடா எனக் கேட்டுக் கிண்டல் செய்வார்கள். அந்த நேரத்தில் விளையாட்டாக சண்டை போட்டாலும் சில சமயங்களில் அதுவும் சரிதானோ எனத் தோன்றும். ஏனெனில் ஊட்டி சென்றால் முதுமலை போகாமல் வருவதில்லை. அது ஒரு அனுபவம். டிஸ்கவரி, அனிமல் பிளானட் போன்றச் சேனல்கள் பிரபலமடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்

Friday 18 March 2016

உறவினர்கள் என்றாலே தொல்லையா?




சீறும் பாம்பை நம்பினாலும் சொந்தக்காரனை நம்பாதே! நண்பன் மட்டுமே போதும்; சொந்தங்கள் என்றும் வேண்டாம். சொந்தக்காரனிடமிருந்து தூர விலகு. என உறவினர்களைப் பற்றி விதவிதமான புதுமொழிகள் வந்த வண்ணம் இருக்கிறது. நண்பர்கள் மட்டுமே சிறந்தவர்கள், நட்பே உயர்ந்த உறவு என இன்னொருப் பக்கம் நட்பை உயர்த்தியும் உருகி வருகின்றனர். அப்படியா! உண்மையில் சொந்தக்காரர்கள் என்றால் அவ்வளவு மோசமானவர்களா? உண்மையில் உறவினர்களை நாம் கிட்ட நெருங்க விடக்கூடாதா?

Tuesday 15 March 2016

கலோரி என்றால் என்ன?




எடை குறைக்க வேண்டும் என சொன்னதும் உடனே அனைவரும் ஏதோ ஃபார்முலா சொல்வது போல ’கம்மியா சாப்பிட்டு, வாக்கிங் போனா எடைக் குறைந்திடும்...’ என்கிறார்கள். இது சரிதான் ஆனால் என்ன, ஏன், எவ்வளவு, எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என அறிந்து சாப்பிட வேண்டும். இவ்வகையில் யார் சாப்பிட வேண்டும் என கேட்கவே தேவையில்லை. நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எடை அதிகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைவரும் சாப்பிடும் முறை அறிந்து உண்ண வேண்டும். பெரும்பாலானேர் என்ன உண்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் உண்டு விட்டு பின் அவதிப்படுகிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாடு என்றால் வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும், அதிக எடை உள்ளோருக்கு மட்டுமே உரித்தானது என நினைத்து கண்டப்படி உணவருந்தி நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். நாம் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்து வருமுன் காத்தல் நல்லதல்லவா!

Monday 7 March 2016

கண்களின் எதிரி கிளாக்கோமா பற்றி அறிவோம்



உலக க்ளகோமா கூட்டமைப்பும், உலக க்ளகோமா நோயாளிகளின் கூட்டமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் ஒரு வாரத்தை தேர்ந்தெடுத்து "உலக க்ளகோமா வாரம்” என்று கடைபிடிக்கின்றனர்.
க்ளகோமா நோயைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ளவும், ஒரு தனிப்பட்ட விழிப்பு உணர்வை மேம்படுத்தவும் அதன் மூலம் க்ளகோமா மூலம் ஏற்படும் பார்வை இழப்பினைத் தடுப்பதற்கும் விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தவும் செய்கின்றனர்.

Thursday 3 March 2016

அய்யா வைகுண்டர்




ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி ஆன்மீக சீர்திருத்தவாதியும், கடவுள் அவதாரமாக கருதப்படுபவருமான, அய்யா வைகுண்டர் அவதார தின விழா தலைமை பதி அமைந்துள்ள சாமித்தோப்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழ்நாட்டில் அவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் மற்றப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் அந்த அய்யா வைகுண்டர்?

Wednesday 2 March 2016

ஊட்டி ரயில் பயணம்



நீலகிரி மாவட்டம் எனக்கு ஏன் பிடிக்கும் என்பதை எழுதிவிட்டு எங்கள் டூர் பற்றி எழுத மிகுந்த இடைவெளி எடுத்துக் கொண்டுவிட்டேன். வேறு சில பணிகள் இருந்தது ஒரு காரணமாக இருந்தாலும் கூட என்னுடைய சோம்பேறித்தனத்தையும் நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இனியும் தாமதித்தால் ஊட்டி டூர் சென்று வந்தது கூட மறந்துப் போய்விடும் எனக்கும் உங்களுக்கும். அதனால் இன்று இதை எழுதி முடித்துவிடுவது என்ற தீர்மானத்துடன் களமிறங்கிவிட்டேன்.

Tuesday 1 March 2016

மரப்பசு - தி. ஜானகிராமன்



மரப்பசு நேற்றுப் படித்து முடித்தேன். பழைய எழுத்தாளர்களில் என்னுடைய பேவரிட் கல்கி. அவருக்கு அடுத்தப்படியாக அகிலன். அவ்வரிசையில் தி.ஜானகிராமனின் எழுத்தும் எனக்குப் பிடித்தமானது.

அவரது எல்லாப் படைப்புகளிலும் தஞ்சாவூர் பிராமண சமுதாயத்தைப் பின்புலமாக வைத்து எழுதும் நடை எனக்குப் பிடிக்கும். பிராமாண பாஷை பிரவாகமாக ஓடும். அதில் அவரை மிஞ்ச ஆளில்லை.

கிமு கிபி - மதன்





நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் எல்லோரும் கேட்ட, “அடுத்து என்ன க்ரூப் எடுக்கப் போற?” என்ற கேள்விக்கு அன்று நான் அளித்த பதில். “எந்த க்ரூப்பா இருந்தாலும் வரலாறு இருக்கக் கூடாது.”  என்ன படிக்கப்போறோம் என்பதை விட என்ன படிக்கக்கூடாது என்பதில் மிகக் குறிப்பாக இருந்தேன். வரலாறு மேல் எனக்கு அவ்வளவு காதல். ஆனால் இன்று வரலாற்றுப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கிறேன். முதல் காரணம் பொன்னியின் செல்வன் என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்ததாக முக்கியக் காரணம் மதன்.

முன்னுரை







என்றோ பெய்த மழையில் இன்று நனைந்தும் ரசித்துக் கொண்டும் இருக்கும் என்னுடைய வாசிப்பில் என் பார்வையில் நான் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய ஒரு விமர்சனம். 

Sunday 28 February 2016

ஆலயபிரவேசம் - உச்சிப் பிள்ளையார் கோயில்

           

இந்தியா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது பல கோடி ஆண்டுகள் பழமையான இமாலய மலைத்தொடர். ஆனால் அதை விடவும் பழமையான ஒரு சிறு மலைக்குன்று அதுவும் நம் தமிழ்நாட்டில் இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? திருச்சிராப்பள்ளியின் மத்தியில் அமைந்திருக்கும் 83மீட்டர் உயரமுள்ள ஒரு சிறிய மலைக்குன்று உலகின் மிகப் பழமையான மலைகளில் ஒன்று. இது கிட்டதட்ட 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதனால் அதன் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகதானோ என்னவோ முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மலையுச்சியில் எழுந்தருளியிருக்கிறார்.  மலைக்கோட்டை என மக்களால் பிரபலமாக அழைக்கப்படும் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்தான் அந்த பெருமைக்குரியது.

Tuesday 23 February 2016

ரொம்ப போரடிக்குதா உங்களுக்கு?



எப்பொழுதும் நேரமில்லை எனப் புலம்புவோர் ஒருபுறம் இருக்க, “ரொம்ப போரடிக்குது!” என அலுத்துக்கொள்வோர் இன்னொரு பக்கம். இப்பக்கத்தில் ஆண், பெண், சிறுவர்கள், முதியவர்கள் என எந்தவித பாரபட்சமுமில்லாமல் ஒரு பெரிய கூட்டமே உள்ளது. வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் பரபரப்பாக ஏதோ ஒன்று செய்துக் கொண்டிருக்க இவர்கள் மட்டும் எதற்கெடுத்தாலும் போரடிக்கிறது போரடிக்கிறது எனக் கூறி சுற்றி உள்ளவர்களை போரடிப்பர். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் உள்ள குழந்தைகளும், வயதானவர்களும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை இது. முன் போல் இல்லாமல் இப்பொழுது எத்தனையோ பொழுதுப்போக்கு அம்சங்கள் வந்துவிட்டது. இருப்பினும் அவர்களுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு. அதிருப்தி.

ஆலய பிரவேசம் - வடபழனி முருகன் கோவில்

             


தமிழ்நாட்டின் சிறப்புகள் என்று எத்தனையோ இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது தமிழ் கடவுள் முருகன் தான். ராமன் எத்தனை ராமனடி என திரைப்படப் பாடல் இருக்கிறது அதுப் போல முருகன் எத்தனை முருகனடி என்றே பாடலாம். தமிழ்நாட்டில் அத்தனை முருகன் பெயர்கள் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் கடைப் பெயர்களை கவனித்துக் கொண்டு வந்தால் முருகனுக்குத் தான் எத்தனை பெயர்கள் என பிரமிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் அறுபடைவீடுகள் இருப்பது மட்டுமின்றி நிறைய பிரபலமான முருகன் கோயில்கள் இருக்கிறது. அதில் ஒன்று வடபழனி முருகன் கோயில்.

Thursday 4 February 2016

பாம்புக் கடி மருந்து

பாம்பென்றால் படையும் நடுங்கும். பழைய மொழி தான் என்றாலும் பாம்பின் பாம்புக் கடியின் தீவிரத்தை உணர்த்தக் கூடிய பழமொழி. பாம்புக் கடித்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது என்ன பாம்புக் கடித்தது என கேட்பதுண்டு. அதனால் சிலர், அடித்தப் பாம்பையும் கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வருவதுண்டு.   

இன்று நமக்கு 'இந்தி'யனே அந்நியன்

விஜய், அஜித் யாருக்கு ரசிகர்கள் அதிகம்? யாருடைய எந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் நம்பர் 1?
இன்று நாட்டில் நடக்கும் பலப் பிரச்சினைகளுக்கு யார் காரணம்? கடந்த திமுக ஆட்சியின் அராஜகமா அல்லது ஆளும் அதிமுகவின் மெத்தனப் போக்கா? அடுத்த தேர்தலில் வெல்லப்போவது யார் அதிமுகவா, திமுகவா? அல்லது இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓட வைத்த பாஜக வா?
இதுப் போன்ற நம் விவாதங்கள் தொடர்ந்து சுபிட்சமாக நடக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் வாழ்க்கை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டும்.

Thursday 21 January 2016

நீலகிரி மாவட்டம்





பரந்து விரிந்த இந்த பூமியில் எத்தனை எத்தனையோ நாடுகள், நகரங்கள், கிராமங்கள்.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். தன் வாழ்நாளில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் எந்த ஒரு மனிதனாலும் பார்த்து விட முடியாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அனைவரும் அவர்களால் முடிந்த அளவிற்கு பல இடங்களைப் போய் பார்த்து வருவது நல்லது. சுற்றுலா, டூர், பிக்னிக், ஊர் சுற்றுதல் என எந்த வார்த்தையைப் பிரயோகப்படுத்தினாலும் அந்த செயல் நல்ல விஷயம்தான்.

Tuesday 19 January 2016

ஆப்பிள் சாலட்



ஆப்பிள் பழம் உடலுக்கு மிகவும் நல்லதாம். தினமும் சாப்பிட்டால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியம் இல்லையாம். இது நான் சிறு வயது முதலேக் கேட்டு வரும் சொல். என் சிறு வயதில் என் அம்மா இதைத்தான் சொல்லி என்னை ஆப்பிள் சாப்பிட வைக்க முயற்சிப்பார்கள். ஆனால் எனக்கென்னவோ ஆப்பிள் பழங்கள் மீது ஈர்ப்பு இல்லை.

திருமழிசை பெருமாள் கோயில்கள்

திருமழிசை ஜகன்னாத பெருமாள் கோயில்


’மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெரிசு’ என ஒரு பழமொழி உண்டு. அதாவது உருவம் சிறிதானாலும் புகழ் பெரியது என்று அர்த்தம். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ சென்னையை அடுத்து இருக்கும் சிறிய கிராமமான திருமழிசைக்கு மிகவும் பொருந்தும். அதன் பெருமைகள் அப்படி வானளாவி நிற்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் 4 மாபெரும் நகரங்களில் ஒன்றான சென்னையிலிருந்து 25 கிமி தொலைவில் உள்ளது இந்த சிறிய கிராமமான திருமழிசை. ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலமாதலால் அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.

அடிக்கடி சளி காய்ச்சல் வராமல் தடுக்க



“அவனுக்கு ஆரஞ்சு பழம் கொடுக்காதீங்க. அத சாப்பிட்டா உடனே அவனுக்கு சளி பிடிச்சிக்குது. கூடவே ஜுரம் வேற வந்துடுது. ஸ்கூலுக்கு அடிக்கடி லீவுப் போட்டா அவன் மிஸ் வேற திட்டறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல.” என புலம்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அது ஏனோ பெரும்பாலானோர் ஆரஞ்சு திராட்சை பழங்கள் உண்பதையேத் தவிர்க்கின்றனர். இருமல், நெஞ்சுக்கட்டு வருகிறது என விதவிதமாக காரணங்களை அடுக்குகின்றனர். ஆனால் உண்மையில் அடிக்கடி சளி இருமல் போன்ற தொந்தரவுகள் அண்டாமல் இருக்க இந்த பழங்களை அதிகம் உண்ண வேண்டும்.

Wednesday 13 January 2016

இந்தியாவின் பால்வளத்தை சூறையாட சதி



ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய வீர விளையாட்டு மட்டுமல்ல. நம் இந்திய பால் சந்தையின் ஆணி வேரும் கூட. இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கும் மேலான அளவு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் வியாபாரம் நடைப்பெற்று வருகிறது. அதற்கு தேவையான 85 சதவீதத்திற்கும் அதிகமான பால் தேவையை நம் இந்திய விவசாயிகளே வழங்குகின்றனர். அதனால் பால் வணிகத்தில் நுழைய விரும்பும் அயல்நாட்டு நிறுவனங்களால் இந்திய பால் சந்தைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.

Monday 11 January 2016

முதுமையில் இளமை

முதுமையில் இளமை




வயது ஏற ஏற நோய்களும் வந்து சேரும். 40 வயதைத் தாண்டினாலே சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு என விதவிதமான நோய்கள் வர ஆரம்பித்துவிடும். இப்பொழுது இன்னும் நல்ல முன்னேற்றமடைந்து 20 களிலேயே வர ஆரம்பித்துவிட்டது.

"என்ன பண்றது? வயசாச்சு. வயசான எல்லா வியாதியும் வரத்தானே செய்யும்?" என சலித்துக்கொண்டு நோயுடன் வாழப் பழகிக் கொண்டுவிடுகின்றனர். நோய்கள் வர முக்கியக் காரணம்

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 30

பாசுரம் 30



"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்."

பொருள்:

பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்.

விளக்கம்:

திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு
பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 29

பாசுரம் 29



"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அதிகாலைப் பொழுதில் இங்கு வந்து உன்னை வணங்கி உன் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாங்கள் போற்றுவதன் காரணத்தை கேட்பாயாக! மாடு மேய்க்கும் ஆயர் குலத்தில பிறந்த நீ, நாங்கள் செய்யும் சிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வாயாக! கோவிந்தனே நாங்கள் உன்னிடம் அருள் வேண்டி இன்று மட்டும் வரவில்லை இனி என்றும், ஏழேழு பிறவிக்கும் உன்னோடு உறவு கொள்வோம், உனக்கு மட்டும் நாங்கள் பணி செய்வோம், இதை தவிர எங்கள் மற்ற விருப்பங்களை நீ மாற்றி விடு.

விளக்கம்:

அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை.

காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 28

பாசுரம் 28



"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று காடுகளில் நாங்கள் ஒன்று கூடி உண்போம்.அதிகம் அறிவை பெறாத ஆயர்குலத்தை சேர்ந்தவர்களான எங்களுள் ஒருவனாக நீ பிறந்த புண்ணியம் செய்தவர்கள் நாங்கள். குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே நமக்குள் இருக்கும் இந்த உறவானது உன்னாலும், எங்களாலும் என்றும் ஒழிக்க முடியாதது. ஒன்றும் அறியாத பிள்ளைகளான நாங்கள் அன்பினால் உன்னை சிறு பெயரிட்டு அழைத்தால் எங்கள் மீது கோபம் கொள்ளாதே இறைவனே! நாங்கள் வேண்டும் பறை எங்களுக்கு அளிப்பாயாக.

விளக்கம்:

இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 27

பாசுரம் 27



"கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகைவரை வெல்லக்கூடிய வலிமையுடைய கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடிப் புகழ்ந்து உன் அருளை பெற வேண்டியதால் நாங்கள் பெறும் சன்மானங்கள் யாதெனில்,சூடகம்(வளை), தோள்வளைகள்(வங்கி),தோடுகள்,பூவின் வடிவில் இருக்கும் ஆபரணங்கள், காலில் அணியப்படும் ஆபரணங்கள் ஆகியவை. அதோடு மட்டுமல்லாமல் புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உள்ளம் குளிர உண்டு மகிழ்வோம்.

விளக்கம்:

பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும்.

ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் பால் சோறு மறையும் அளவுக்கு அதில் நெய் ஊற்றி சேர்த்து உண்போம். அனைவரும் கூடி அதை சாப்பிடும்போது எங்கள் முழங்கை வரை நெய் ஒழுகும். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 26

பாசுரம் 26



"மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அடியாருக்கு எளியவனான திருமாலே! நீலமணி போன்ற நிறமுடையவனே! மார்கழி நீராடி பாவை நோன்பை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம், அதற்கு எங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாதெனில், உலகத்தையெல்லாம் நடுங்கச்செய்யும் ஒலி உடையதும், பால் வண்ணமும் கொண்ட உன் பாஞ்சசன்னியத்தை போன்ற சங்குகளும், பெரியதான வாத்தியங்களும்(பறை), பல்லாண்டு பாடுபவர்களும், மங்கல தீபங்களும், கொடிகளும், பல்லக்கு,தேர் போன்றவை மேலே கட்டியிருக்கும் பட்டுத்துணிகளும்(விதானம்) ஆகியவையே. ஊழிக் காலத்தில் ஆலிலை மீது பள்ளிக் கொள்பவனே! இவற்றை நீ எங்களுக்கு தந்துருள வேண்டுகிறோம்.

விளக்கம்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 25

பாசுரம் 25



"ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

தேவகிக்கு மகனாய் அவதரித்து பின் அதே இரவில் யசோதையின் மகனாய் மாறி கம்சனின் கண்ணில் படாமல் வளர்ந்து வந்தவனே! தனக்கு தெரியாமல் வளர்ந்து வருவதை அறிந்ததும் பின் நடக்க போவதை அறியாமல் உனக்கு தீங்கு நினைத்த கம்சனின் நினைப்பை தவறாக்கி அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! உன்னை பிரார்த்தித்து வந்த எங்களின் குறிக்கோளை நிறைவேற்றினால் உன் பிராட்டியான லட்சுமி ஆசைப்படும் செல்வத்தையும், அதை காக்கவல்ல உன் வீரியத்தையும் நாங்கள் பாடி எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்!

விளக்கம்: 

ஓர் நள்ளிரவில் கம்சனின் சிறையில் வாசுதேவனுக்கும், தேவகிக்கும் நீ மகளாக பிறந்தாய். அதே இரவில் ஆற்றைக் கடந்து யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டு செல்லப்பட்டு ஆயர்பாடியில் நந்தகோபனின் மனைவி யசோதையின் மகனாக மறைந்து வளர்ந்தாய். உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய். 

அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. நாங்கள் நினைத்த வரத்தை தந்தால் அதனைப் பெற்று எல்லா செல்வங்களையும் விட அதைப்பெரிதாக கருதி உனது பெருமையை கருதி உனது பெருமையை நாங்கள் பாடி மகிழ்வோம். எங்கள் துயரங்கள் மறைந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 24

பாசுரம் 24



"அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று படைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாபலி சக்ரவர்த்தியிடம் இரந்து பெற்று அன்று இந்த உலகத்தையே அளந்த திருவடிகளை போற்றுகின்றோம், சீதையை மீட்க இலங்கைக்கு சென்று இராவணனை வென்ற உன் தோள் வலிமையை போற்றுகின்றோம், சகடாசுரனை உதைத்து அழித்த உன் புகழை போற்றுகின்றோம், கன்று வடிவில் வந்த அசுரனை எறிதடியாய் கொண்டு கபித்தாசுரன் என்னும் அசுரனின் மீதெறிந்து இருவரையும் அழித்தவனே உன் திருவடிகளை போற்றுகின்றோம், இந்திரனின் கோபத்திலிருந்து இடையர்களை காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை குடையாய் பிடித்தவனே உன் குணத்தைப் போற்றுகின்றோம், பகைவர்களையெல்லாம் வெல்லும் உன் கையில் உள்ள வேலை போற்றுகின்றோம். இவ்விதம் உன் புகழை என்றென்றும் பாடி உன்னிடம் அருள் பெற இன்று வந்துள்ள எங்களுக்கு அருள் புரிவாயாக!

விளக்கம்: 

கண்ணன் பாலகனாக இருந்தபோது செய்த வீரதீர சாகசங்களையும், வாமன அவதாரம் எடுத்தபோது, ராமாவதாரத்தின் போதும் செய்த செயல்களையும் போற்றி பாடுகிறாள் ஆண்டாள்.

மகாபலி இந்த உலகத்தை ஆண்ட போது தேவர்களுக்காக வாமன் அவதாரம் எடுத்து மூவடியால் உலகை அளந்தவனே உன் பாதங்களை போற்றுகிறோம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்தைப் போற்றுகிறோம். சக்கர வடிவம் எடுத்து சகடா சூரன் அழியும் படி காலால் உதைத்தவனே உன்னுடைய புகழை போற்றுகிறோம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 23

பாசுரம் 23



"மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத் திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மழைக்காலத்தில் மலைக்குகையில் தன் துணையோடு உறங்கி கிடந்த சிங்கமானது விழித்துக் கொண்டு தன் எதிரிகளை அழிக்க, கண்களில் தீப்பொறி பறக்க, பிடரி மயிர் சிலிர்த்துக் கொள்ள, உடலை உதறி நிமிர்ந்து கர்ஜனையிட்டுக் கொண்டே குகையிலிருந்து வெளி வருவது போல, காயாம் பூ போன்ற நிறமுடைய நீயும் உன் கோயிலிலிருந்து வெளியே வந்து இங்கு எழுந்தருளி அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் இங்கு வந்துள்ள காரணத்தை கேட்டு எங்களுக்கு அருள் செய்வாயாக!

விளக்கம் :

மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் திப்பொறி பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வரும். அதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக. காயாம்பூ போன்ற நிறமுடைய மணிவண்ணா. நீ உன்னுடைய கோவிலில் இருந்து இங்க வா. அழகிய அரியணையில் வந்து அமர்ந்து எங்களின் குறைகளை கேட்டு அருள்புரிவாயாக என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 22

பாசுரம் 22



"அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அகன்ற பூமியை ஆண்ட அரசர்கள் எல்லாரும் தங்கள் அகங்காரத்தையெல்லாம் விட்டு உன் கட்டிலின் அடியில் வந்து காத்திருப்பது போல் நாங்களும் உன் அன்பை வேண்டி வந்து காத்திருக்கிறோம். சலங்கையின் மணி போல, பாதி மலர்ந்த தாமரைப் பூப்போன்ற உன் அழகிய சிவந்த கண்கள் சிறிது சிறிதாக திறந்து எங்கள் மீது உன் பார்வை விழக்கூடாதா? சந்திரனும், சூரியனும் ஒரே சமயத்தில் தோன்றுவது போல் உன் அழகிய இரண்டு கண்களாலே எங்களை நோக்கினால் நாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடாதோ?

விளக்கம்: 

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். கிங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாயா சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே என்று கூறி கண்ணனை எழுப்புகின்றனர். கண்ணனின் பார்வைக்கு அத்தனை சக்தி இருக்கிறது என்று கேட்கிறாள் ஆண்டாள்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 21

பாசுரம் 21



"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்ற மாய்நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்"

பொருள்:

கலங்களில்(பாத்திரங்களில்)கறந்த பாலானது பொங்கி வழியும் அளவிற்கு இடைவிடாது பால் சுரக்கும் நல்ல வளமை மிக்க பசுக்களை உடைய நந்தகோபருடைய மகனே! பொழுது விடிந்ததை அறிவாயாக! வலிமைமிக்கவனே! அனைவருக்கும் பெரியவனே! இவ்வுலகில் தோற்றமளிக்கும் ஒளி படைத்தவனே! துயிலெழு! பகைவர்கள் உன் வலிமையை அறிந்து தங்கள் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து உன் வாசலில் வந்து உன் திருவடிகளை பணிவது போல் நாங்களும் உன்னை போற்றி புகழ வந்துள்ளோம்.

விளக்கம்: 

நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும் பாடல். பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி, அந்த பாத்திரங்களிலிருந்து பால் பொங்கி வழியுமாறு, பால் கறப்பவர்கள் சிறுவர்களாயினும் பெரியோர்களாயினும், தங்களது தன்மையில் மாற்றம் ஏதுமின்றி, வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் போன்று பால் சுரக்கும் பெருமை மிகுந்த பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே, நீ உறக்கம் தெளிந்து எழுவாயாக; வேதங்களால் புகழப்படுபவனே, வேதங்களும் அளக்க முடியாத பெருமை வாய்ந்தவனே, உலகத்தவர் கண்டு மகிழும் வண்ணம் உலகில் தோன்றியவனே, ஒளி மிகுந்து பிரகாசிப்பவனே, நீ துயிலெழுவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள் வாயாக.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 20

பாசுரம் 20



"முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்"

பொருள்:

முப்பத்து மூன்று தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே அவர்கள் நினைத்த இடத்திற்கு சென்று அவர்களின் நடுக்கத்தை போக்கும் வலிமையுடையவனே! உன் உறக்கத்திலிருந்து எழுந்திராய்! தன்னிடம் அடைக்கலம் என்று வந்தோரை காப்பவனும்,வலிமையுடையவனும் அவர்களின் பகைவருக்கு துன்பம் கொடுப்பவனுமான தூய்மையானவனே எழுந்திராய்! கலசம் போன்ற மென்மையான முலைகளையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும், அழகிய சிறு இடையினையும் கொண்ட நங்கை நப்பின்னையே! திருமகளே! நீ துயிலெழுந்து வந்து எங்கள் நோன்புக்கு தேவையான விசிறியும்(உக்கமும்),கண்ணாடியும்(தட்டொளி) கொடுத்து உன் மணாளனான கண்ணனும் நாங்களும் நீராட வழி செய்வாயாக!

விளக்கம்: 

கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக. கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 19

பாசுரம் 19



"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்"

பொருள்:

குத்து விளக்குகள் நாற்புறமும் சுடர் விட்டெரிய யானைதந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலில், மென்மையான சயனத்தில்(படுக்கையில்), கொத்து கொத்தாக பூக்களை கூந்தலில் சூடிக்கொண்டு உறங்குகின்ற நப்பினையின் மார்பில் தலை வைத்து படுத்துறங்கும் கண்ணா நீ வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசு! மை பூசியுள்ள அழகிய கண்களை உடைய நப்பின்னையே! அவனை விட்டு சிறிது நேரமும் பிரிய மனமில்லாததால் எவ்வளவு நேரமாகியும் கண்ணனை துயிலெழுப்பாமல் இருக்கிறாயே, இது உன் குணத்திற்கு தகுமோ?

(முந்திய பாடலில் நப்பின்னையை எழுப்பிவிட்டு இப்பாடலில் அவள் மேல் படுத்துறங்கும் கண்ணனை எழுப்புகின்றனர்)

விளக்கம்: 

நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 18

பாசுரம் 18



"உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்.
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:

மதநீர் பெருகும் யானையை போல் வலிமையும் பகைவரை கண்டு அஞ்சி ஓடாத வலிமையான தோள்களையும் உடையவனான நந்தகோபனின் மருமகள் நப்பின்னையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே கதவை திற! பொழுது விடிந்து நாற்புறமும் கோழிகள் கூவுகின்றன, குருக்கத்திக் கொடிகளில்(மாதவி பந்தல்) மீது குயில்கள் அமர்ந்து கூவுவதைக் கேள்!
பந்து பொருந்திய விரல்களை உடையவளே நாங்கள் கண்ணனின் பேர் பாட வந்துள்ளோம். உன் தோள் வளைகள் ஒலி எழுப்ப நீ எழுந்து வந்து, உன் செந்தாமரை கையால் கதவை திறவாய்!

விளக்கம்:
இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்துவந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். அதனால்தான், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

Sunday 10 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 17

பாசுரம் 17



"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"

பொருள்:

அழகிய ஆடைகளும் தண்ணீரும் சோறும் தானம் கொடுக்கும் பெருமானே எங்கள் தலைவரே நந்தகோபாலா எழுந்திராய்! கொம்பை ஒத்த வதனத்தையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! எங்கள் குலவிளக்கே யசோதையே எழுந்திராய்!ஆகாயத்தையும் தாண்டி வளர்நது அனைத்துலகையும் அளந்தவனே எழுந்திராய்! செம்மையான பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவரே நீரும் உம் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்திரும்!

(இப்பாடலில் யசோதையையும்,கண்ணனையும்,அவன் சகோதரன் பலதேவனையும் எழுப்புகிறாள்)

விளக்கம்: 

திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத் திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும்" என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 16

பாசுரம் 16

"நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாசல்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மாநீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இடைக்குலத்தை சேர்ந்த எங்களுக்கு தலைவனாய் இருக்கும் நந்தகோபரின் வீட்டைக் காப்பவனே, அழகிய கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளை திறவாய்! அந்த மாயம் புரிபவன்,மணிவண்ணன் ஆயர்குல(இடைக்குலம்) சிறுமிகளான எங்களுக்கு வேண்டுவன தருவதாய் சொல்லியிருக்கிறான், அதனால் நாங்கள் தூய்மையாய் வந்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன்முதலில் நாங்கள் வந்துள்ள இந்த நேரத்தில் உன் வாயால் மறுக்காதிருந்து இந்த நிலைக்கதவின் தாள் நீக்குவீர்!

(முந்தின பாடல் வரையில் தன் தோழியை எழுப்பும் ஆண்டாள் இப்பாடலில் ஆயர்பாடியில் இருக்கும் இடையர்குல தலைவனான நந்தகோபனின் மாளிகையில் வாயில் காப்போனை எழுப்புகிறாள்)

விளக்கம்:

கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீ நந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் காப்பானையும், வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும் போது ஒருவரை தடுக்கக்கூடாது.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 15

பாசுரம் 15



"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இளமை கொண்ட கிளியின் இனிமையான சொல்லுடையவளே இன்னும் உறங்குகிறாயோ? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு 'சிலுகு சிலுகு என்று கூச்சலிட்டு ஏன் எழுப்புகிறீர்கள் இதோ வருகிறேன்' என்று நீ சொல்லவும் 'சாமர்த்தியமான உன் பேச்சுகளையும் உன் கட்டுக்கதைகளையும் நாங்கள் அறிவோம்'என்று நாங்கள் சொல்ல, 'நீங்கள் தான் பேசும் திறனில் வல்லவர்கள் நானும் அப்படியே இருந்து விட்டு போகிறேன்' என்று சொல்லி உடனே எங்களோடு வந்து சேர்ந்துக்கொள். உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எல்லாரும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாயே, இதோ நீயே வந்து எண்ணிக் கொள். வலிமை மிக்க குவலயப்பீடமென்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களின் புகழை அழிக்க வல்லவனுமாகிய அந்த மாயவனை புகழை நாம் பாட நீயும் வருவாயாக!

விளக்கம்: 

ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள். ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.

Thursday 7 January 2016

நலம் வாழ - க்ரீன் டீயின் நற்பலன்கள்



சினிமா பத்திரிகைகளில் எந்த நடிகையிடம் "உங்க அழகின் ரகசியம் என்ன?" என்று வழக்கமானக் கேள்வியைக் கேட்டாலும், பல ரகசியங்களுடன் சேர்த்து, "நான் தினமும் க்ரீன் டீ குடிக்கிறேன்" என்ற வழக்கமான பதிலும் நிச்சயம் வரும். அது என்ன உண்மையில் கிரீன் டீயில் அவ்வளவு நன்மைகள் உள்ளதா என்றால், ஆம் அது முற்றிலும் உண்மை. கிரீன் டீயில் பல நன்மைகள் இருந்தாலும் எடை குறைவதற்கும், சருமப் பொலிவிற்கும் உலகப் புகழ் வாய்ந்தது க்ரீன் டீ. ஆனால் அது மட்டுமே இல்லாமல் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை க்ரீன் டீ அளிக்கும் நன்மைகள் ஏராளம்.
க்ரீன் டீயின் நன்மைகள்:
1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
6. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
14. சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்கிறது.
15. பருக்கள் வராமல் தடுக்கிறது.
15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
இப்படி எண்ணற்ற நன்மைகள் நாம் பெற வேண்டுமானால் க்ரீன் டீயைத் தொடர்ந்து குடிக்க வேண்டும். அதே சமயத்தில் ஒரு நாளுக்கு ஓரிரு கப் க்ரீன் டீயே போதுமானது. நற்பலன்கள் ஏராளமாக உள்ளதால் அளவிற்கதிகமாக பருகும்போது பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாயிற்றே!  தினமும் அளவோடு க்ரீன் டீ பருகி வளமோடு வாழ்வோம்.