Tuesday 29 December 2015

பொது கட்டுரைகள் - வாஸ்து மீன் வாங்கப் போறீங்களா?



நாம அல்லும்பகலும் கஷ்டப்பட்டு உழைச்சு நாயா பேயாத் திரிஞ்சு ரத்தம் சிந்தி உழைச்சதனால ஆபிஸ்ல பிரமோஷன் குடுத்துருப்பாங்க. ஆனா நாமளோ போன மாசம் வாஸ்து சாஸ்திர படி வீட்டை மாத்திக் கட்டினதாலதான் இந்த பிரமோஷன் கிடைச்சுதுன்னு சொல்லுவோம். இது ரைட்டா தப்பா, வாஸ்து வேணுமா வேண்டாமான்னு ஆராய்ச்சி பண்ணப்போறதுல்ல. வாஸ்துல  கலர்ஃபுல்லான ஒரு விஷயத்தப் பத்திதான் பேசப்போறேன்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 14

பாசுரம் 14



"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்"

பொருள்:

உங்கள் புழக்கடை தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் விரிந்து ஆம்பல் மலர்கள் குவிந்து விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான பற்களை உடையவருமான தவம் செய்யும் துறவிகள் தங்கள் திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை 'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்ட நங்கையே!எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும் இல்லாதவளே ,நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியுள்ளவனும், முழங்காலளவு நீண்ட கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!

விளக்கம்:

உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் எல்லாம் பூத்து விட்டன. ஆம்பல் மலர்களின் இதழ்கள் குவிந்து வாய் மூடி விட்டன. பொழுது விடிந்து விட்டதே. அது உனக்கு இன்னும் புரியவில்லையா? தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர். உங்களுக்கு முன்பு நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று வாய் சவடால் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நீண்ட நாவுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை பாடுவோம், வா!

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 13

பாசுரம் 13



"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகாசுரன் என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், மற்ற பொல்லாத அரக்கர்களை அழித்தவனும், இராவணின் பத்து தலைகளையும் புல்லை கிள்ளி எறிவது போல் எறிந்தவனுமானவனின் புகழைப் பாட நாங்கள் எல்லாரும் கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்)உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது.

பறவைகள் எல்லாம் இரை தேட புறப்பட்டு விட்டன, அழகிய தாமரை மலரில் மீது வண்டுகள் உறங்குவது போன்ற கண்களை உடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில் கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!

விளக்கம்:

நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 12

பாசுரம் 12




"கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்: 

இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால் வடிய அதனால் வீடே சேறாகும் செல்வனின் தங்கையே எங்கள் தலையில் பனி விழ உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை கோமானை) கொன்ற மனதுக்கினிய இராமனை நாங்கள் பாடி புகழ, நீயோ வாய் திறவாமல் இருக்கிறாய். பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.

விளக்கம்:

 இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும்

வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே! மார்கழி மாதத்து பனி எங்கள் தலையின் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய ராவணனை கோபத்தினால் அழித்த ராமபிரானை, ராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை அனைவரும் வாயாறப் பாடுகின்றோம். அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக் கிடக்கின்றது உனக்கு? எழப் போகிறாயா இல்லையா?

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 11

பாசுரம் 11



"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து, பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள் ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில் திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும் அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

விளக்கம்:

கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுக்களை வைத்துப் பராமரித்து பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற மெல்லிய வயிற்றை உடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே! நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று முகில் வண்ணன் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 10

பாசுரம் 10



"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். "

பொருள்:

பாவை நோன்பிருந்து சுவர்க்கம் அடைய உன்னை எழுப்பினால் வாசல் கதவை திறக்காதவளே நீ பேசவும் மாட்டாயோ? மணங்கமழும்(நாற்றம்) துளசி(துழாய்) மாலையை அணிந்திருக்கும் நாராயணின் புகழை நாம் போற்றினால் அவன் நமக்கு வேண்டியன தருவான். அன்றொரு(பண்டொரு) நாள் எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் ,உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ? என்று சொல்லும் படி உறங்குபவளே, எங்களுக்கு அணியாய் இருப்பவளே தடுமாறாமல் தெளிவாய் வந்து கதவை திறப்பாயாக.

விளக்கம்:

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

Thursday 24 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 9

பாசுரம் 9



"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:


அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.

விளக்கம்:

பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 8


பாசுரம் 8



"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:

காலை புலர்ந்து விட்டது,கீழ்வானம் வெளுத்து விட்டது. புல் மேய்வதற்காக எருமைகள் செல்வதை காண்பாயாக! உன்னை தவிர பாவை நோன்பை மேற்கொள்ள போகின்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னை அழைக்க உன் வாசலிலே நிற்கின்றோம்! பெண்ணே எழுந்திராய்! குதிரை வடிவில் வந்த ஒரு அசுரனை இரண்டாய் பிளந்தவனை, மல்லர்களை கொன்றவனை அந்த தேவாதி தேவனின் புகழ் பாடி நாம் அவனை சேவித்தால் அவன் நம் மீது 'ஐயோ' என்றிரங்கி நம் குறைகளை கேட்டு அருள் செய்வான்.

விளக்கம்:

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 7

பாசுரம் 7



"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப்பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலையில் ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் கீசுகீசு என்று தமக்குள்ளே பேசும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ பெண்ணே? கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கலகலவென்று ஒலியெழுப்ப, நறுமணமுள்ள கூந்தலை உடைய இடையக்குல(ஆய்ச்சியர்) பெண்கள் மத்தினால் தயிர்கடையும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ? நாராயணனான கேசவனின் புகழ் பாடுவதை கேட்டும் நீ இன்னும் உறங்குகிறாயோ பெண்ணே? நீயே எழுந்து வந்து கதவை திறவாய்!

விளக்கம்:

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 6

பாசுரம் 6



"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ் சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலை நேரம் பறவைகளும் இரை தேட புறப்பட்டன. கருடனின்(புள்ளரையன்) தலைவனான இறைவனின் கோவிலில் வெண்மையான நிறம் கொண்ட சங்கின் ஒலி(பேரரவம்) கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்திரு! முலைப் பால் கொடுத்து தன்னை கொல்ல வந்த பூதனையை மடித்து திருப்பாற்கடலில் துயிலில் அமர்ந்தவனை உள்ளத்தில் கொண்டு எழுந்து 'அரி,அரி' என்று முனிவர்களும்,யோகிகளும் அழைக்கும் அரவம் நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது.

விளக்கம்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா?
பேய் வடிவம் எடுத்து தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

Monday 21 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் - 5

பாசுரம் -5



"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாயங்கள் புரிபவனை வட திசையில் உள்ள துவாரகையின் அரசனானவனை, தூய்மையான நீர் விளங்கும் யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கினை, யசோதையின் வயிற்றில் தோன்றி அவள் வயிற்றை பிரகாசிக்க செய்த தாமோதரனை, நாம் தூய்மையோடு மலர் தூவி தொழுது, அவன் பெயரினை பாடி, மனதினால் அவனையே சிந்தித்தால் இது வரை செய்த பிழைகளும் இனி வரப் போகும் பாவங்களும் தீயிலிட்ட தூசியாய் அழிந்துவிடும்

விளக்கம்:

பாற் கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை என்ன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோர் புகழும்படி செய்த தாமோதரன். அப்படிப்பட்ட அந்தப் பெருமாளை நாம் தூய மனதுடன், நல் மலர்கள் தூவி வாழ்த்தி வணங்குவோம், மனதால் அவனை நினைப்போம். காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரக் காத்திருக்கும் பிழைகளும் கூட தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கிப் போய் விடும். ஆகவே, அந்த தூய பெருமானின் புகழ் பாடுவோம், அவன் குறித்தே பேசுவோம்..

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 4

பாசுரம் 4


"ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்"


பொருள்:

மழைக்கு அதிபதியான வருணனே, நீ சிறிதும் ஒளிக்காமல்(கைகரவேல்) நடுக்கடலில்(ஆழியுள்)புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு(முகந்து) ,மேலே ஆகாயத்தில் ஏறி எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான இறைவனின் உருவம் போல் கறுத்து, அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம்(ஆழி) போல் மின்னலடித்து, சங்கு(வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல், உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக.

விளக்கம்:

கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணப் பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு. பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.

Friday 18 December 2015

மெட்ராஸ் ஐ தடுப்பது எப்படி?

சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் என வந்து ஊரையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இப்பொழுது இயல்பு நிலை மெள்ளத் திரும்பிக்கொண்டிருந்தாலும் மழை வெள்ளத்தின் நண்பர்கள் இப்பொழுது படையெடுத்துக் கொண்டுள்ளனர். ஆம். பல மழைக்கால நோய்கள் பரவி வருகிறது. அதில் ஒன்று மெட்ராஸ் ஐ.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 3

பாசுரம் 3


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய நெய்தல் மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி இடையர்கள் குடம் குடமாக பால் கறக்கும் பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க வேண்டும்.

விளக்கம்:
இந்தப் பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்கிறாள் ஆண்டாள்.

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 2

பாசுரம் 2


"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே,நாம் பாவை நோன்புக்கு செய்யும் செயல்களை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும்,பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுப்போம்.


விளக்கம்: பாவை நோன்பு நோற்பவர்களுக்கு இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் தெரிவிக்கிறாள். கண்ணன் பிறந்த இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே, திருப்பாற்க்கடலில் துயிலும் அந்த பகவானின் நாம சங்கீர்த்தனங்களை அன்புடன் பாடி, நெய் உண்ணாது, பால் பருகாது, அதிகாலையில் நீராடி, கண்களுக்கு மை இடாமல், மலர்களை நாம் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாது பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற அளவு வழங்கி, நாம் உய்யும் வகையை நாடி, மகிழ்ந்து, நாம் நோன்பு நோற்கவேண்டும் என்கிறார் ஆண்டாள் நாட்சியார்.

Wednesday 16 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 1


பாசுரம் 1
மார்கழி(த்) திங்கள் பாடல் வரிகள்:
மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:
மார்கழி மாதமும் முழு நிலா நாளுமான இன்று செல்வப் பெருக்கையுடைய ஆய்ப்பாடியில் செல்வம் நிறைந்த இளம்பருவ பெண்களே நீராட வருவீர். கூர்மையான வேலும், கண்ணனுக்கு தீங்கு நினைப்பவருக்கு கொடியவனுமான நந்தகோபனுடைய குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கம், மேகம் போல உடல், செந்தாமரையை ஒத்த கண்கள், கதிரவன் போன்ற ஒளியையும் சந்திரனை போன்ற முகம் கொண்டவனான நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்(பறை தருவான்). எனவே உலகோர் புகழ இந்நோன்பில் ஈடுபடுவோம்.

விளக்கம்
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

எல்லாமே நம் கையில் - எதற்கும் நேரமில்லை



"லேட்டஸ்டா என்ன சினிமா பார்த்த?" "ஹையோ! சினிமாவா எனக்கு அதுக்கெல்லாம் ஏதுப்பா நேரம்?", "தினமும் வாக்கிங் போறியோ?" "போகனும்னுதான் ஆசை. ஆனா நேரமே கிடைக்க மாட்டேங்குது."
"இன்னிக்கு மழை வரும்னு நியூஸ்ல சொன்னான்."
"பார்த்தா அப்படித்தான் தோணுது. ஆனா நா நியூஸெல்லாம் பாக்கல. நேரம்தான் பிரச்சினை."
"சரி, கையிலதான் ஆண்டிராய்டு போன் வச்சிருக்கியே, அதுல பாத்திருக்கலாமே. ஆமா நீ ஏன் பேஸ்புக், வாட்ஸ் ஆப் எது பக்கமும் வரமாட்டேங்குற?"

Sunday 13 December 2015

யார் இவர்கள்? B.K.S ஐயங்கார்


      இன்று (14/12/2015), B.K.S ஐயங்காரின் பிறந்த நாள். கூகுள் தன் முதல் பக்கத்தில் அவரது யோகாசனங்களைப் போட்டு கௌரவித்து வருகிறது.



          சரி யார் இவர்? அவரது முழுப்பெயர் பேளூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங்கார். இவர் கர்நாடக மாநிலத்தில் 1918ம் ஆண்டு ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 13 பேர். இருப்பினும் பிழைத்தவர் 10 மட்டுமே. ஐயங்காரும் இளமையில் மிகவும் நோஞ்சானாகவே இருந்தார்.

Friday 11 December 2015

ஆலய பிரவேசம் - நாராயணவனம்

ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம். 




பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,

Wednesday 9 December 2015

நலம் வாழ - எலுமிச்சையின் நற்பலன்கள்


 பழங்காலத்தில் யாராவது பெரிய மனிதர்களை சந்திக்க செல்லும்போது ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து செல்வார்கள். காரணம் அவர்கள் எவ்வளவு

கோபத்துடன் இருந்தாலும் அதை முகர்ந்துப் பார்த்தால் கோபம் பஞ்சாய் பறந்துவிடும். ஆனால் இப்பொழுது யாரும் அப்படி செய்வதில்லை. மேலும் இன்று பழச்சாறுக் குடித்தால் கூட எலுமிச்சையை யாரும் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச்சாறுகளையே பெரும்பாலும் உட்கொள்கின்றனர்.

எலுமிச்சையின் பலன்களை அறிந்தால் இனி யாருக்கும் எலுமிச்சையைப் புறக்கணிக்க மனம் வராது.

1. எலுமிச்சை பழம் உடல் நலத்துடன், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு உகந்தது

2. எலுமிச்சைப் பழச்சாறை தினம் குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்

3. செரிமானம் மற்றும் வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் சாறு பிழிந்து குடித்தால் பிரச்சினை தீரும்.

4. இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது

5. பெண்கள் எலுமிச்சைச் சாறை தினம் குடித்து வந்தால் மார்பகப் புற்றுநோய் வராது

தினசரி சமையல் - முட்டைகோஸ் சாதம் (1- 2 நபருக்கு)




தேவையானப் பொருட்கள்: 

அரிசி - 1 கப்

முட்டைகோஸ் - 1/4 கிலோ

வெங்காயம் - 2

எண்ணெய் - 2 1/2 மேசைக் கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

மசாலா அரைக்க: 

தேங்காய் துருவல் - 1/4 கப்

பொட்டுக் கடலை - 2 மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 6 - 8

இஞ்சி - 1/2 அங்குல துண்டு

கொத்துமல்லி -1 சிறிய கட்டு

தாளிக்க: 

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 2

முந்திரிப்பருப்பு - (விருப்பப்பட்டால்)

மேலே அலங்கரிக்க:

அரிந்த கொத்துமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

செய்முறை: 

1. வேக வைத்த அரிசியை ஒரு அகலமான பாத்திரத்தில் பரப்பி ஆற வைக்கவும்.

2. மேலேக் குறிப்பிட்ட மசாலாப் பொருட்களை சிறிதளவே தண்ணீர் தெளித்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பின்னர் அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4. வெங்காயம் பொன்னிறமானதும் அரிந்த முட்டைகோஸை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

5. கோஸ் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து வாசனை வரும் வரை கலக்கவும்.

6. அதில் ஆற வைத்த சாதத்தையும், உப்பையும் சேர்த்து கலக்கவும். கடைசியாக கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

-எல்லோரா விஜயா


சிறு தகவல்கள் - வட கிழக்கு பருவமழை எப்படி உருவாகிறது?


வருடந்தோறும் நாமும் ”கேரளாவுல மான்சூன் செட் ஆயிடுச்சு. இனிமே மழை ஆரம்பிக்கும். வட கிழக்கு பருவ மழை பெய்யுது.” இது மாதிரி பேசிக் கொள்வது சகஜம். மழை வருதா இல்லையா? நம் துணிகள் காய்கிறதா இல்லையா? என்பதைத் தாண்டி அது எப்படி உருவாகிறது என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.

ஆலய பிரவேசம் - திருப்பதி





நாம் குழந்தைகளாக இருக்கும்போது அம்மா கதை சொல்லியிருப்பார். அதில் விலை மதிக்கமுடியாத புதையல் ஒன்று ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும். அதை மிக சிரமப்பட்டு போய் எடுக்க வேண்டும் என கதை நீளும். அது சொல்லும் நீதி எப்பவுமே மிக அரியப் பொக்கிஷம் சுலபமாக கிடைத்துவிடாது. மிக முயற்சி செய்து ஏழு மலை தாண்டி சென்றால்தான் கிடைக்கும். அந்தக் கருத்து கூட மிக சரிதான் போலிருக்கிறது.