Tuesday 3 May 2016

கமலாம்பாள் சரித்திரம்



நம் வரலாற்றை அறிய வரலாற்று நூல்கள் மட்டும் போதாது. வரலாறு முக்கியமானவர்களைப் பற்றியேக் குறிப்பிடும். சாமானிய மனிதனைப் பற்றி அறிய அது உதவாது. மாறாக சாதாரண மக்களின் வாழ்க்கை முறையை அறிய கலை இலக்கியமே நல்ல தேர்வு. பல காலகட்டங்களில் எழுதப்படும் கதைகள், கட்டுரைகள் என நாம் வாசிக்க வாசிக்க நம் அறிவு விரிவடைவதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்ற தெளிவான வடிவமும் கிடைக்கும். கமலாம்பாள் சரித்திரமும் அந்த வகையை சேர்ந்ததுதான்.



பி.ஆர்.ராஜமய்யர் பி.ஏ 19 ஆம் நூற்றாண்டின் கடைசியில் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாம் நாவல் என எண்ணப்படுகிறது. முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் 1876ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில நாவல்கள் வந்தாலும் சில காரணங்களால் கமலாம்பாள் சரித்திரமே (1896) இரண்டாம் நாவலாகக் கருதப்படுகிறது. மேலை நாடுகளில் அதற்கு முன்னரே நாவல் இலக்கியம் புகழ் பெற்றிருந்தாலும் தமிழகத்தில் நாவல்கள் வெளிவர ஆரம்பித்தது இந்தக் காலகட்டத்தில்தான். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் முதல் நாவலாக இருந்தாலும் நாவலுக்குரிய அனைத்து லட்சணங்களுடன் இருப்பதால் கமலாம்பாள் சரித்திரமே தமிழின் முதல் நாவல் எனக் கொண்டாடுபவர்களும் உண்டு. இதுப் போன்ற பல பெருமைகள் கொண்ட கமலாம்பாள் சரித்திரம் வாசிக்கக் கிடைத்தது என அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல 19ம் நூற்றாண்டின் கடைசியில் தமிழ்நாட்டில் அதுவும் மதுரை அருகே உள்ள ஒரு சிற்றூரில் வாழ்க்கை எப்படி இருந்தது என அறிய இந்நூல் ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகம். இன்று நாம் எதிர்ப்பார்ப்பது போல பல திருப்புமுனைகளுடன் கூடிய வித்தியாசமான கதைக்களம் கொண்ட நாவலெல்லாம் இல்லை. மிக எளிமையான குடும்பக் கதைதான். பொதுவாக எனக்கு குடும்ப நாவல்கள் படிக்கப் பிடிக்காது. மாமியார் மருமகள் அவர்களது பிரச்சினைகள், ‘டிகாஷன் சொட் சொட்டென்று இறங்கிக் கொண்டிருந்தது.’ போன்ற வர்ணனைகள் என எந்த வகையிலும் என்னை ஈர்க்காத அம்சங்கள் நிறைந்தது குடும்ப நாவல்கள். ஆனால் இந்தக் குடும்பக் கதை என்னை ஈர்த்தது. காரணம் இதன் காலம்.

முத்துஸ்வாமி ஐயரும், அவரது மனைவி கமலாம்பாளும்தான் கதை. இன்று நம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் நாம் மிஞ்சிப்போனால் ஒரு ஹாய் சொல்லுவோம். ஆனால் அக்காலத்தில் ஒரு ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களும் எப்படி பின்னிப்பிணைந்திருந்தன. அதனால் எத்தனை விதமான வம்புகள் சரளமாக கரைப்புரண்டோடின. அதனால் முத்துஸ்வாமி ஐயரும், கமலாம்பாளும் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டனர் என இயல்பாகவும், சுவாரசியமாகவும் விவரிக்கிறார் ராஜமய்யர். ஆங்க்காங்கே வர்ணனைகளும், நகைச்சுவையும் உண்டு. கதையின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் என தனியான குணாதிசயங்கள் இருக்கிறது. இந்நாவலை கல்லூரி பாடமாக்கினால் இதைப் பற்றி மாணவர்கள் விலாவாரியாக எழுத நிறையவே விஷயம் உண்டு,

அப்பொழுது இருந்த திருமண முறை, குழந்தை திருமணமாக இருந்தாலும் அப்பொழுது அவர்களுக்கு இருந்த மனநிலை, அன்றைய குழந்தைகள் அப்பொழுது திருமணத்தை எப்படி எதிர்கொண்டனர், கணவன் மனைவி உறவு, பெற்றோர் குழந்தைகள் என ஒவ்வொருவரும் அப்பொழுது எப்படி இருந்தனர், வம்பு பேசும் மஹா வம்பர் சபையினர் அவர்களை எப்படிக் கலங்கடித்தனர் என சற்றும் சுவாரசியம் குறையாமல் விவரிக்கிறது கமலாம்பாள் சரித்திரம்.

சில விஷயங்கள் இன்று நாம் படிக்கும்போது நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் அது எழுதப்பட்ட காலத்தை மனதில் கொள்ளவேண்டும். அதை மனதில் நிறுத்தி வாசித்தோமானால் ரசித்துப் படிக்கலாம். 19. நூற்றாண்டைச் சேர்ந்த தென் தமிழ்நாட்டின் கிராமத்தில் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என செவ்வென அறியலாம்

No comments:

Post a Comment