Thursday 23 June 2016

நல்லதோர் வீணை செய்தேன் - வரலொட்டி ரெங்கசாமி



சென்னையில் மழை வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடக்க வேண்டிய புத்தகத் திருவிழா சற்றுத் தாமதமாக ஜூன் மாதம் நடந்து முடிந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் ஸ்டைலில் படு பிரமாண்டமாகவே இருந்தது. லட்சக்கணக்கான புத்தகங்களில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக கடினம் என்பது என்னைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் புத்தகக் கடலிலிருந்து ஒரு சில முத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் வாங்கிய முத்துக்களில் முதலில் எதை வாசிப்பது என யோசித்தப்போது நான் தயங்காமல் தேர்ந்தெடுத்தது வரலொட்டி ரெங்கசாமி எழுதிய நல்லதோர் வீணை செய்தேன்.



மதுரை வாழ் ஆடிட்டரான வரலொட்டி ரெங்கசாமியின் சிறுகதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்கள் படித்தால் கூட முழு கதையையும் படித்து முடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அந்தளவிற்கு எளிமையாகவும், சுவையாகவும், யதார்த்தமாகவும் இருக்கும் என்பதால் வார மாதப் பத்திரிகைகளில் அவர் பெயர் பார்த்தால் அந்தச் சிறுகதையைப் படிப்பதுதான் என் முதல் வேலையாக இருக்கும். ஆனால் அவர் எழுதிய புத்தகங்களை நான் வாசித்ததில்லை. இருப்பினும் வரலொட்டியாரின் மேல் உள்ள நம்பிக்கையில் வாங்கினேன். என் நம்பிக்கை வீண் போக வில்லை. சரி விஷயத்திற்கு வருகிறேன்.

நல்லதோர் வீணை செய்தேன் எதைப் பற்றியது? இது ஒரு சுயசரிதை நூல் என்றே முன்னுரையில் இருக்கிறது. ஆனால் நான் படித்த சுயசரிதைகள் பெரும்பாலும் தான் இன்று இருக்கும் நிலைக்கு வர என்னவெல்லாம் பாடுப்பட்டார்கள் என விளக்கும் சுயபச்சாதாப வாக்குமூலங்கள் நிறைந்த நூல்களாகவே இருக்கும்.

அதனால் நல்லதோர் வீணை செய்தேனை ஒரு சுயசரிதை நூல்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. ஏனெனில் இதில் அந்த மாதிரியான முயற்சிகள் எதுவும் இல்லை. மாறாக நல்ல சிந்தனை இருக்கிறது. நம் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கும் போது அதன் பாதிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் நாம் விரும்பியப்படி நடக்கவில்லை என்றால் நமக்குக் கோபமே மேலோங்கியிருக்கும். வரலொட்டியாருக்கும் முதலில் கோபமே வருகிறது. மனிதன் தானே! ஆனால் அவர் இந்நூலில் தன் வாழ்வில் நடந்த பழைய நினைவுகளையும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் புதிய சம்பவங்களையும் ஒப்பிட்டு வாழ்கையின் அரிய தத்துவங்களை விளக்குகிறார். அதில் நகைச்சுவையும் இழையோடுகிறது.

உதாரணத்திற்கு தன் விடலைப் பருவத்தில் தான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் பல வருடங்களாக அடிமனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. பல வருடங்கள் கழித்து ஒருநாள் அந்தப் பெண் சந்தையில் காய்கறி வியாபாரி ஒருவனோடு ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்! ‘அப்பாடா நல்லவேளை! தப்பித்தோம்’ என ஒரு நிம்மதி பெருமூச்சு வருகிறது. ’எது நடந்தாலும் நன்மைக்கே’ என்ற தத்துவம் மிகப் பிரபலம். ஆனால் நமக்குக் கஷ்டம் வரும்போது அதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. இதுப் போன்ற தத்துவங்களுக்கும், நற்சிந்தனைகளுக்கும் தன் வாழ்விலிருந்தே உதாரணங்களைத் தந்திருக்கிறார். அதனால் முதலில் எல் கே ஜி படித்தேன் அடுத்து யூகேஜி படித்தேன் என காலவரிசைப்படி சம்பவங்களை அடுக்காமல் மற்றவர்களின் நல்வாழ்விற்கு தேவையான நல்ல விஷயங்களை விளக்க அத்தியாவசியமான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

அப்படியென்றால் இது ஒரு ஆன்மீக நூலா? அப்படியும் கூறலாம். புத்தகப் பிரியையான நான் இதுவரை பல புத்தகங்கள் படித்துள்ளேன். குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் எல்லா தலைப்புகளும் படிக்கும் ஆர்வத்தில் வரலாறு, அறிவியல், புவியியல் எந்தத் தலைப்பாக இருந்தாலும் சுவையாக இருந்தால் படிப்பேன். தலையணை போன்ற கனமான சரித்திர நாவல்களையும் மிக விரும்பி படிப்பதுண்டு. இருப்பினும் ஏனோ ஆன்மீக நூல் என்றால் அலர்ஜி.

ஆன்மீகம் என்பதால் அதை எழுதுபவர்கள் துணிக்குப் போடும் கஞ்சியை ஒரு டம்ளர் குடித்து விட்டு வந்து எழுதுவார்கள் போல! அந்தளவிற்கு விறைப்பாக சீரியஸாக இருக்கும். அதில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கூட கேஷுவலாக இல்லாமல் சற்று மிரட்டலாக இருக்கும். ஆனால் நல்லதோர் வீணை செய்தேனில் அதுப்போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை. ஜீவாத்மா, பரமாத்மா என்று பயமுறுத்தவில்லை. என்னைப் போன்ற சாதாரண பாமரனும் படித்து இன்புறும் வண்ணம் எளிமையான ஆன்மீகம் நிறைந்துள்ளது. புத்தகம் நெடுக வடிவேலு சந்தானம் காமெடிகளின் மேற்கோள்கள் வேறு! “உன் ரிலையன்ஸ் சிம் கார்டை பத்து ரூபாய்க்கு ‘டாப் அப்’ செய்ய விரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம். அம்பானியே உன்னிடம் வந்து பத்து ரூபாயைப் பெற்றுக் கொண்டு டாப் அப் செய்து
கொடுப்பாரா என்ன?” என்பது போன்ற சமகால உதாரணங்களுடன் களைக்கட்டுகிறது இந்த ஆன்மீக நூல்.

வழக்கமான ஆன்மீகம்தானா என நாத்திகர்கள் எள்ளி நகையாடிவிட்டு இந்நூலைப் புறக்கணிக்க முடியாது. வரலொட்டியாரின் சிந்தனைகள் நாத்திகர்களும் ஏற்க கூடிய வகையில் அமைந்துள்ளது சிறப்பு. இதற்கு உதாரணமாக அவரது நண்பர் நாத்திகரான மாறனுடன் நடக்கும் சம்பவங்களைக் கூறலாம். அச்சம்பவத்தின் முடிவில், ‘ஆம் இப்பொழுதும் கூறுகிறேன். கடவுள் இல்லை’ என நாத்திக நண்பர் மாறனால் கூறியிருக்க முடியுமா?

சுயசரிதை என்றாலும் இந்நூலில் கவிதை உண்டு, சிறுகதையும் உண்டு. பல சிறுகதைகளுக்கு ஈடான எண்ணற்ற சுவையான சம்பவங்களும் உண்டு. ஆன்மீக நூலாக இருந்தாலும் நாவல் போல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும், அதில் ஒரு தொடர்ச்சியும் இருப்பது சுவையூட்டுகிறது. இருந்தாலும் கீர்த்தியும் ராஜனும் அநியாயத்திற்கு மனதைக் கவர்கின்றனர்.

’கேளடி கண்மணி’ திரைப்படத்தில் வரும் ‘மண்ணில் இந்த காதல்...’ போன்ற பாடல்கள் ஆரம்பத்தில் மிக எளிமையாக நாம் கூட பாத்ரூமில் ஹம் செய்து
கொண்டே குளிக்கலாம் என நினைக்கும் வகையில் இருக்கும். ஆனால் போக போக படு பிரமாண்டமாய் விரிந்து நம்மை வாய் பிளக்க வைக்கும். அது போல
சினிமா பாடல்கள் மேற்கோள்களுடனும், காமெடி வசனங்கள் ஒப்பீடுகளுடன், சின்ன சின்ன சம்பவங்களுடன் எளிமையாய் செல்லும் நடை, கடைசி
அத்தியாயத்தில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. வாழ்கையின் மிகப் பெரிய தத்துவங்களை மானிட அறிவுக்கு உட்பட்டு விளக்குகிறார். ஏன் ’மானிட அறிவுக்கு உட்பட்டு’ எனக் கூறுகிறேன் என்றால் ஆன்மீகத்தில் சில விஷயங்கள் இப்படித்தான் என்று நம்மால் நிச்சயம் கூற முடியாது. உதாரணத்திற்கு நாம் பிறப்பதற்கு முன்னும், இறந்த பின்னும் எங்கிருக்கிறோம் என்று யாராலும் நிச்சயமாக கூறமுடியாது. மரணத்திற்கு பின்  இதுதான் நடக்கிறது என செத்தவனால் மட்டுமே கூற இயலும். ஆனால் நாம் அதைப் பற்றி சிந்திக்கலாம். நம் புத்தி ஏற்றும் கொள்ளும் அளவிற்கு ஒரு விளக்கத்தைக் கண்டறியலாம். வரலொட்டி ரெங்கசாமி மிகச் செழுமையாக சாதாரணர்கள் மட்டுமின்றி யோகிகளும், ஞானிகளும் கூட ஏற்றும் கொள்ளும் வகையில் தரமாக சிந்திக்கிறார் என்பதற்கு கடைசி அத்தியாயம் ஒரு அக்மார்க் அத்தாட்சி.

வெளியே முள்ளோடு கரடு முரடாக காட்சியளித்தாலும் உள்ளே இனிப்பான சுளைகளைக் கொண்டிருக்கும் பலாப் பழ உதாரணமே மிகப் பிரபலமானது. ஆனால் வெளியில் மிக எளிமையாகவும், நகைச்சுவையோடும் காட்சியளித்து உள்ளே கனமான சீரிய சிந்தனைகளோடு இருப்பதற்கு எதை உதாரணமாய் கூறுவது.!

நீங்களே ஒருமுறை வாசித்துப் பாருங்கள் நண்பர்களே. பின்னர் எதனோடு ஒப்பிடலாம் என சேர்ந்து யோசிப்போம்.
நல்லதோர் வீணை செய்தேன். எழுதியவர் -
வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ. 225/-

1 comment:

  1. அன்று புத்தகக்காட்சியில் என்னைச் சந்தித்து எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். இன்று இந்தப் பதிவின் மூலம் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியையே கொடுத்துவிட்டீர்கள். நல்லதோர் வீணை செய்தேன் வேண்டிய அளவு விற்குமா என்றெல்லாம் ஒரு காலத்தில் கவலைப்பட்டேன். சிறுநகரக் கணக்கனாகவும் சிறிய எழுத்தாளனாகவும் இருக்கும் ஒரு 58 வயதுக்காரனின் சொந்தக் கதை சோகக் கதையைப் படிக்க இந்த உலகம் ஆர்வம் காட்டுமா என்று யோசித்ததுண்டு. இனி அந்தக் கவலையும் யோசனையும் எனக்குத் தேவையில்லை. விஜா வெங்கடேஷ் போன்ற ஒரு எழுத்தாளரின், ஒரு நல்லமனிதரின் நல்ல விமரிசனத்தை பெற்றுவிட்டது இந்த நூல் என்றால் இது லட்சம் பிரதிகள் விற்றதற்குச் சமம். ஒரு வெள்ளிவிழாப் படத்தைக் கொடுத்த இயக்குனரின் மனநிலையை எனக்குக் கொடுத்துவிட்டீர்கள். நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா நலனும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete