சீறும் பாம்பை நம்பினாலும் சொந்தக்காரனை நம்பாதே! நண்பன் மட்டுமே போதும்; சொந்தங்கள் என்றும் வேண்டாம். சொந்தக்காரனிடமிருந்து தூர விலகு. என உறவினர்களைப் பற்றி விதவிதமான புதுமொழிகள் வந்த வண்ணம் இருக்கிறது. நண்பர்கள் மட்டுமே சிறந்தவர்கள், நட்பே உயர்ந்த உறவு என இன்னொருப் பக்கம் நட்பை உயர்த்தியும் உருகி வருகின்றனர். அப்படியா! உண்மையில் சொந்தக்காரர்கள் என்றால் அவ்வளவு மோசமானவர்களா? உண்மையில் உறவினர்களை நாம் கிட்ட நெருங்க விடக்கூடாதா?
இதைப் பற்றி யோசிக்கும் முன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை சற்று அலசினால் இதுப் போன்ற எண்ணங்களுக்கும் காரணம் புரிந்துவிடும்.
1. உறவினர்கள் நாம் தேர்ந்தெடுத்து வருபவர்கள் அல்ல. ஆனால் நண்பர்கள் நம் தேர்வு.
2. உறவினர்களில் குழந்தையிலிருந்து வயதானவர்கள் வரை ஏகப்பட்ட வயதுப் பிரிவினர் உண்டு. ஆனால் நண்பர்களில் ஏறக்குறைய ஒரே வயதினராக இருக்கின்றனர்.
3. நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முன் திறந்த மனதுடன் ஒருவரின் குறை நிறைகளை கவனிக்கிறோம். ஆனால் உறவினர்கள் தானாக வருவதால் உறவினர்களே சரியில்லை எனும் ஒரு முடிவுக்கு நாம் ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறோம்.
இவை அடிப்படை வித்தியாசங்கள். அஸ்திவாரமே இவ்வளவு வலுவாக இருப்பதால் பிரச்சினைகளும் நன்கு தாராளமாக கபடி ஆடுகிறது. சொத்துப் பிரச்சினை. துரோகம் செய்துவிட்டனர் இதுப் போன்ற பெரிய விஷயங்கள் பற்றி ஆராயாமல் சாதாரணமாக உள்ள உறவினர்கள் கூட நண்பர்கள் அளவு ஒற்றுமையாய் இருப்பதில்லையே ஏன் என அடிக்கடி நான் யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் என் உறவினர்களுடன் நல்லுறவு பேணுவதால் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் எளிதில் சீர்தூக்கி பார்க்க முடிந்தது.
1. முதலில் நண்பர்கள் நம் தேர்வு என்பதால் விட்டுக்கொடுக்கிறோம். ஒருவேளை நண்பர்கள் ஏதேனும் சண்டைப் போட்டுக்கொண்டாலும் விரைவில் ஈகோ பார்க்காமல் பேசிக்கொள்கின்றனர்.
2. தவறியும் நண்பர்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசுவதில்லை. நண்பனிடம் தவறே இருந்தாலும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்கமாட்டோம்.
3. நண்பனிடம் எது பேசினால் சண்டை வரும் என்பது நமக்கு நன்குத் தெரியும். அவர்களுக்குப் பிடிக்காததை நாம் பேசுவதில்லை. ஒருவேளை நல்வழிப்படுத்துவதற்காக ஏதாவது சொன்னாலும் நல்ல நண்பர்களாக இருந்தால் அதை நல்ல விதத்தில் புரிந்துக்கொள்வர். அதுவும் மனம் நோகாதப்படி குறையைச் சுட்டிக்காட்டும் பக்குவம் இருக்கும்.
4. நண்பர்களைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறோம். நம்மை புரியவைக்கவும் முயற்சிக்கிறோம். இவை அனைத்துமே திறந்த மனதுடன் நடைபெறுகிறது.
ஆனால் உறவினர்களிடத்தில் இது அனைத்துமே நேர்மாறாக இருப்பதால் பிரச்சினை வருகிறது.
1. உறவினர்கள் ஒருவரைப் பற்றி இன்னொருவர் வம்பு பேசுகின்றனர். அது நம் காதுக்கு வரும்போது அதை நேரடியாக விசாரிக்கவும் மனம் வருவதில்லை. அடுத்த நொடி நாமும் இரண்டு வார்த்தை அவர்களைப் பற்றி தூறுகிறோம். இது ஒன்றே போதும் பிரிவினைக்கு.
2. உறவினர்கள் பற்றி மற்றொரு உறவினரிடம் நிச்சயமாக கருத்துப் பரிமாறிக்கொள்ள முடியாது. ஏனெனில் அந்த இருவரும் கூட உறவினர்களே! அதனால் நிச்சயம் அவரிடம் சொல்லிவிடுவார்கள். ஆனால் அதே உறவினரைப் பற்றி ஒரு நண்பனிடம் குறைக் கூறினால் அவனுக்கு அவர் யாரென்று தெரியாது, தெரிந்தாலும் அவரிடம் போய் தன் நண்பன் தன்னிடம் கூறியதைக் கூறமாட்டான்.
அதனால் அடிப்படையில் வம்பு பேசுதலே உறவினர்களுக்குள் பிரச்சினை வரக் காரணமாயிருக்கிறது. நான் என் உறவினர்கள் யாரைப் பற்றியும் மற்றொரு உறவினரிடம் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் பெருமையான விஷயங்களையே எடுத்துக்கூறுகிறேன். அவர் மிக கெட்டிக்காரர், நல்லவர், நன்கு சமைக்கிறார், ஓவியம் வரைகிறார் என அனைத்து நல்ல விஷயங்களையும் பரப்பத் தயங்குவதில்லை. இதுக் குறித்து ஒருவேளை அந்த இரு உறவினர்களும் பேசிக்கொண்டாலும் எங்கள் ஒற்றுமை மேலும் வளருமேத் தவிர நிச்சயம் பாதிக்காது.
குறைகளை முடிந்தால் நாசூக்காக அவர்களிடமே சொல்லிவிடுவது அல்லது சூழ்நிலைக்கேற்ப நடந்துக்கொள்வது. என் உறவினர்கள் யாராவது மற்றவர்களைப் பற்றி புறம்பேசினால் தப்பித்தவறியும் என் கருத்தைக் கூறுவதில்லை. அட கொக்கமக்கா! அது என் தலையிலேயே வந்து விடியும் என எனக்குத் தெரியாதா என்ன? எப்பொழுது பார்த்தாலும் வம்பு பேசுவதையே குலத்தொழிலாகக் கொண்டு வம்பு பேசுபவர்களாக இருந்தால் தயங்காமல், “அவர்களிடம் என்னைப் பற்றியும் இப்படித்தானே பேசுவீர்கள்?” எனக் கேட்பேன். திமிர் பிடித்தவள் என என் பின்னால் பேசுவார்கள். அதைப் பற்றி யாருக்குக் கவலை! அவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருப்பது. அல்லது வம்பு பேச இடம்கொடுக்காமல் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு நகர்ந்துவிடுவது.
ஆனால் நாளடைவில் என்னிடம் யாரும் வம்பு பேசுவதில்லை. ஆனால் யாராவது சீரியசாக தங்கள் மனக்கஷ்டத்தை என்னிடம் கூறினால் என்னால் முடிந்த அளவு அவருக்கு நல்வழிக்காட்டுவேன். ஆனால் தப்பித்தவறியும் யாரிடமும் அதைப் பற்றி விவாதிக்க மாட்டேன். அதனாலேயே நிறைய உறவினர்கள் என்னிடம் வம்பு பேசாமல் மனம் விட்டுப்பேசுவதுண்டு.
அதற்காக நான் எப்பொழுதும் முறைத்துக்கொண்டும் நிற்பதில்லை. எல்லா உறவினர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷத்திற்கு அவர்களை அழைத்து வாழ்த்துக்கூறுகிறேன். அவ்வப்போது போன் செய்து நலம் விசாரிக்கிறேன். அதனால் எங்கள் உறவு வலுப்படும். நேரம் கிடைக்கும்போது அவர்கள் வீட்டிற்கு சென்று தங்கி நட்புப் பாராட்டுகிறோம். தேவையானதை மட்டும் பேசி பரஸ்பரம் மரியாதை செலுத்துவதால் என் நண்பர்களைப் போலவே உறவினர்களும் என்னிடத்தில் மிகவும் அன்பாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் சற்று சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் நாள்பட நாள்பட அவர்களுக்கும் என் குணம் பழகிவிட்டது. அவர்களிடம் குறைகள் அதிகம் இருந்தால் அதற்கேற்றப்படி நடப்பது.
”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
என்கிறார் தெய்வப்புலவர். ஒவ்வொரு மனிதனிடமும் குணமும் உண்டு குற்றமும் உண்டு. அதில் எது அதிகமாக இருக்கிறதோ அதை நாம் எடுத்துக் கொள்ளவேண்டுமாம். அதனால் நாம் திறந்த மனதுடன் குணம் குற்றம் இரண்டையும் ஆராய்ந்து நடந்துக்கொள்ள வேண்டும்.
நண்பர்களோ உறவினர்களோ யாராக இருந்தாலும் நாம் நடந்துக்கொள்ளும்விதத்தில்தான் நம் உறவு நீடிக்கும். நண்பர்களிடம் சென்று ஒரு நண்பனைப் பற்றி இன்னொருவனிடம் வம்பு பேசிப் பாருங்கள், உங்கள் நட்பு நிச்சயம் பிரிந்துவிடும். நட்பு என வரும்போது நாம் திறந்தமனதுடன் சிந்திக்கிறோம். நாம் எப்படி பழகினால் நட்பு நீடிக்கும் என சிந்தித்து செயல்படுகிறோம். ஆனால் உறவினர்களிடத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என நடந்துக்கொள்கிறோம். யாரிடமும் ஒரேடியாகக் குழையவும் வேண்டாம். தூர விலகவும் வேண்டாம். உன்னிலிருந்து எனக்கு எவ்வளவு தூரமோ என்னிலிருந்து உனக்கு அவ்வளவு தூரம் என புரிந்துக்கொண்டு செயல்பட்டாலே எல்லா உறவுகளும் இனிக்கும்.
No comments:
Post a Comment