Tuesday, 15 March 2016

கலோரி என்றால் என்ன?




எடை குறைக்க வேண்டும் என சொன்னதும் உடனே அனைவரும் ஏதோ ஃபார்முலா சொல்வது போல ’கம்மியா சாப்பிட்டு, வாக்கிங் போனா எடைக் குறைந்திடும்...’ என்கிறார்கள். இது சரிதான் ஆனால் என்ன, ஏன், எவ்வளவு, எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என அறிந்து சாப்பிட வேண்டும். இவ்வகையில் யார் சாப்பிட வேண்டும் என கேட்கவே தேவையில்லை. நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எடை அதிகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைவரும் சாப்பிடும் முறை அறிந்து உண்ண வேண்டும். பெரும்பாலானேர் என்ன உண்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் உண்டு விட்டு பின் அவதிப்படுகிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாடு என்றால் வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும், அதிக எடை உள்ளோருக்கு மட்டுமே உரித்தானது என நினைத்து கண்டப்படி உணவருந்தி நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். நாம் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்து வருமுன் காத்தல் நல்லதல்லவா!



முதலில் ஏன் எடை கூடுகிறது ஏன் நோய்கள் வருகிறது எனப் பார்போம். அதை எளிதில் புரிந்து கொள்ள மனித உடலை மோட்டார் வாகனத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு மோட்டார் பைக் ஓட அதற்கு முக்கியத் தேவை எரிபொருள். நாம் போடும் பெட்ரோல்தான் எரிசக்தியாக மாறி வண்டியை ஓடவைக்கிறது. அது போல மனித உடலை இயங்கவைக்கும் எரிபொருள் நாம் உண்ணும் உணவு. வாகனத்தின் பெட்ரோல் டாங்கிற்கு அளவு உண்டு. குறிப்பிட்ட அளவு லிட்டர் பெட்ரோல் போட்டால் டாங்க் நிரம்பிவிடும்; அதற்கு மேல் தேவையில்லை என்பது அனைவருக்கும்  தெரியும். அதே போல மனித உடல் இயங்க தேவையான உணவிற்கும் ஓரளவு உண்டு. அது பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. பெட்ரோல், டீசல் போன்றவற்றின் அளவு ”லிட்டர்” என குறிப்பிடப்படுவதுப் போல உணவின் அளவுகோல் ”கலோரி” என்ற அலகின் மூலம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாடல் வண்டிக்கும் அதன் டாங்க் கொள்ளளவு மாறுபடுவது போல ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரி அளவு மாறுபடுகிறது. (கலோரி அளவு என்பது வயிற்றின் அளவல்ல. நமக்கு தேவையான சக்தியின் அளவு. வயிறு நிறைதலுடன் இதை குழப்பிக் கொள்ள வேண்டாம்)

மோட்டார் வாகனத்திற்கும் மனித உடலுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. வாகனத்தில் பெட்ரோல் டாங்க் நிறைந்து விட்டால் அதற்கு மேல் போடமுடியாது. வழிந்தோடி வீணாகிவிடும் என்பதால் நாம் அளவறிந்து நிறுத்திக் கொள்வோம். ஆனால் மனித உடல் இயங்க தேவையான அளவு கலோரி கிடைத்தும் நாம் அதை அறியாமல் வயிறு நிரம்பும் வரை அல்லது முட்டும் வரை சாப்பிடுகிறோம். பெட்ரோல் போல வழிந்தோடாமல் மனித உடல் நாம் அதிகமாக உண்ணும் உணவினால் கிடைக்கும் சக்தியை சேமித்து வைத்துக் கொள்கிறது.

வாகனத்திற்கு நாம் பெட்ரோல் போடுவது அதை இயக்குவதற்காக. நாம் டாங்க் நிறைய பெட்ரோல் போட்டுவிட்டு மிக குறைந்த தூரமே ஓட்டி வந்தால் அந்த பெட்ரோலை நீண்ட நாட்களுக்கு வைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பெட்ரோல் இருக்கும்போதே மேன்மேலும் பெட்ரோல் போடமுடியாது என்பதால் நாமும் போட மாட்டோம். ஆனால் நாம் உண்ணும் உணவு நாம் நம் உடலுக்கு தரும் உழைப்பில்தான் எரிசக்தியாக மாறுகிறது. நாம் எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவு கரையும் (calorie burn). மற்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளும். நாம் உணவு உண்ணாதப் போது சேமித்து வைத்த சக்தி எரிபொருளாக மாறி நம்மை இயங்க வைக்கும். நாமோ இடைவெளியின்றி தினமும் அளவுக்கு அதிகமாக உண்டு, நொறுக்கு தீனிகள் வேறு தின்று தேவையான அளவு உடலை இயக்கவும் செய்யாவிட்டால் சேமிப்பு மட்டும் அதிகமாகி அதிகமாகி எளிதில் பூசணிக்காய் போலாகிவிடலாம்.

எவ்வளவு கலோரி தேவை? 

கலோரியின் அளவு மனிதனின் வயது, பாலினம், எடை, உயரம், உடலுழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுப்படும். நாம் மருத்துவரையோ அல்லது டயட்டீஷியனையோ அணுகி நமக்கு தேவையான கலோரி பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பிட்ட நோய் ஏதும் இல்லாவிட்டால் இணையதளத்தில் கூட நிறைய தளங்கள் நம் எடை, உயரம் போன்ற தேவையான விவரங்களை அளித்தால் நமக்கு எத்தனை கலோரி தேவை என கணக்கிட்டு சொல்லும். நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிற்கும் கலோரி அளவு உண்டு. அதேப் போல நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் குறிப்பிட்ட அளவு கலோரி எரிக்கப்படுகிறது. உதாரணமாக 100கிராம் எடையுள்ள ஆப்பிளில் 59 கலோரியும், பழுத்த வாழைப்பழத்தில் 116 கலோரியும் உள்ளன. இதே போல அனைத்து உணவுப் பொருட்களுக்கும் கலோரி உண்டு.

அதே போல நாம் செய்யும் வேலைகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட அளவு கலோரி எரிக்கப்படுகிறது. இந்த அளவு தனி மனிதனின் எடையின் அளவைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு 65கி எடையுள்ள மனிதன் ஒரு மணிநேரம் துரிதமாக நடைப்பயிற்சி செய்தால் 335 கலோரிகள் எரிக்கப்படுமென்றால் 90கி எடையுள்ள மனிதன் அதே அளவு நடந்தால் ஏறக்குறைய 460 கலோரிகள் எரிக்கப்படும். அதே மனிதன் ஒருமணி நேரம் ஜாக்கிங் செய்தால் 630 கலோரிகள் எரிக்கப்படும்.

நாம் எடையைக் குறைக்க வேண்டுமானால் முதலில் முக்கியமாக நமக்கு எவ்வளவு கலோரி தேவை என அறிந்து கொள்ளவேண்டும். பிறகு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அதில் எவ்வளவு கலோரிகள் குறைத்து உண்ணவேண்டும் எனவும் தெரிந்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒருவாரத்திற்கு எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டால் எத்தனை எடை குறையும் என்பதையும் அறிந்து நடைப்பயிற்சி, நீச்சல், ஓட்டப்பயிற்சி, கிரிக்கெட், டென்னிஸ்... என நமக்கு எது வசதியோ அதில் ஈடுப்பட வேண்டும். முடிந்தால் நேரமிருந்தால் இதுப்போன்ற பல்வேறு வேலைகளிலும் ஈடுப்படலாம். வீட்டிலிருக்கும் பெண்களானால் வீட்டுவேலைகள் கூட ஓரளவு கலோரிகளை எரிக்கும். லிஃப்ட்டை தவிர்த்து மாடிப்படி ஏறுதல், அருகிலுள்ள இடத்திற்கு நடந்தே செல்லுதல் போன்ற சின்னசின்ன உடலுழைப்புகள் கூட நம் கலோரியை எரிக்க உதவும். இவ்வாறு பல்வேறு பயிற்சிகளின் மூலம் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட அளவு கலோரியை எரித்தால் எடை நிச்சயம் குறையும்.

நாம் உண்ணும் உணவு மற்றும் செய்யும் வேலைகள் ஆகியவற்றை ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக் கொண்டால் நமக்கு கிடைக்கும் கலோரி மற்றும் எரிக்கப்படும் கலோரியின் அளவு நம் கட்டுக்குள் இருக்கும். இதைக் குறித்துக்கொள்ள, மற்றும் நமக்காக கலோரிகளை கணக்கிட ஏகப்பட்ட இணையதளங்கள் இருக்கிறது. அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment