Monday, 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 25

பாசுரம் 25



"ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

தேவகிக்கு மகனாய் அவதரித்து பின் அதே இரவில் யசோதையின் மகனாய் மாறி கம்சனின் கண்ணில் படாமல் வளர்ந்து வந்தவனே! தனக்கு தெரியாமல் வளர்ந்து வருவதை அறிந்ததும் பின் நடக்க போவதை அறியாமல் உனக்கு தீங்கு நினைத்த கம்சனின் நினைப்பை தவறாக்கி அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! உன்னை பிரார்த்தித்து வந்த எங்களின் குறிக்கோளை நிறைவேற்றினால் உன் பிராட்டியான லட்சுமி ஆசைப்படும் செல்வத்தையும், அதை காக்கவல்ல உன் வீரியத்தையும் நாங்கள் பாடி எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்!

விளக்கம்: 

ஓர் நள்ளிரவில் கம்சனின் சிறையில் வாசுதேவனுக்கும், தேவகிக்கும் நீ மகளாக பிறந்தாய். அதே இரவில் ஆற்றைக் கடந்து யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டு செல்லப்பட்டு ஆயர்பாடியில் நந்தகோபனின் மனைவி யசோதையின் மகனாக மறைந்து வளர்ந்தாய். உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய். 

அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. நாங்கள் நினைத்த வரத்தை தந்தால் அதனைப் பெற்று எல்லா செல்வங்களையும் விட அதைப்பெரிதாக கருதி உனது பெருமையை கருதி உனது பெருமையை நாங்கள் பாடி மகிழ்வோம். எங்கள் துயரங்கள் மறைந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்.

No comments:

Post a Comment