Friday 12 June 2020

உப்பு வேலி - ராய் மாக்ஸம் தமிழாக்கம்- சிறில் அலெக்ஸ்



நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதுதான் புதிய தலைமுறையில் வெளியான புகழ்பெற்ற ‘கொஞ்சம் சோறு;கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் கரு. அதை எழுதிய முகில் எழுதிய ‘உணவு சரித்திரம்’ படித்தபோதுதான் ‘உப்புவேலி’ வெளியானது. ஏற்கெனவே உப்பின் வரலாற்றை சுருக்கமாக படித்திருந்த எனக்கு இப்புத்தகம் வாங்கி படிக்கவேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆனால் ஏனோ எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. அதை இப்பொழுது ஒருவழியாக படித்துவிட்டேன்.

நான் படிக்க ஆசைப்பட்டது நியாயம்தான் என மகிழ்ந்தேன். இது Roy Moxham ஆங்கிலத்தில் எழுதிய ‘The Great hedge of India’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.

19ம் நூற்றாண்டில் இந்தியாவில் சீனப் பெருஞ்சுவர் போல நீ...ளமாய் ஒரு வேலி இருந்திருக்கிறது. இந்தியாவிற்கு குறுக்கே ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்த மாதிரி. அது இயற்கையான முள் மரங்களை மிக நெருக்கமாய் வளரவிட்டு அதையே சுங்கச்சாவடியாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். எதற்கு என்றால் அது நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு கடத்தலை கட்டுபடுத்த. அதை ஏன் கடத்த வேண்டும்? அதற்கு ஆங்கிலேயர்கள் விதித்த கொடூரமான உப்பு வரியே காரணம்.

இதை நமக்கு விளக்க மொகலாயர்கள் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர்கள் ஆட்சி துவங்கிய காலத்திலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறார் ராய் மாக்ஸம். ராபர்ட் க்ளைவ் போன்றவர்கள் அடித்த கொள்ளையெல்லாம் அதில் அடக்கம். ருசி கண்ட பூனை போல உப்பின் மீது வரி போட்டு அது ஈட்டி தந்த வருமானத்தின் சுவையை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அதை இன்னும் எப்படியெல்லாம் மெருகேற்றினர் என விவரிக்கிறார்.

நம் பாடப்புத்தகத்தில் கூட இல்லாத நாம் எங்குமே கேள்விப்பட்டிராத இந்த உப்புவேலி பற்றி அவர் எப்படி கேள்விப்பட்டார், அதற்காக எப்படியெல்லாம் பாடுபட்டுத் தகவல் சேகரித்தார், என்பதையும் சுவாரசியமாக விவரிக்கிறார். பின்னர் அதன் மிச்சச்சொச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என உத்தரபிரதேச கிராமங்களில் ஒரு வெளிநாட்டு ஆராய்ச்சியாளராக அவர் தேடி அலைந்ததை விவரிக்கும்போது ஒரு நல்ல பயணக்கட்டுரை படிப்பது போல் இருக்கிறது.

இந்த வேலியை எப்படி பராமரித்தனர், அதற்கு எவ்வளவு செலவு செய்தனர் என்பதில் தொடங்கி அரசின் வருமானம், மக்களின் சுமை எல்லாம் விளக்குகிறார்.

இன்று கூகுளில் போய் தேடினால் உப்பு உடல்நலத்திற்கு கேடு அனைவரும் உப்பை குறைக்கவேண்டும் எனத் தகவலே மிகுந்துள்ளது. அதனால் உப்பின் மீது வரி விதித்து ஆங்கிலேயர் இந்தியர்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார் என சில நண்பர்களின் கிண்டலையும் குறிப்பிட்டு, உப்பு நம் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு அத்தியாவசியமானது; உப்பில்லாமல் உண்டால் என்னென்ன கேடுகள் விளையும் என மிக விரிவாக ஆனால் எளிமையாக விளக்கியுள்ளார்.

மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய தகவல்களும் உண்டு. அதோடு நில்லாமல் சுதந்திர இந்தியாவில் உப்பைக்கொண்டு செய்த அரசியல் என எல்லாம் சொல்லி கிட்டதட்ட 2000 வது ஆண்டு வரையான உப்பின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறார். நாம் எடக்குமடக்காக கேட்கும் கேள்விகள் கேலி கிண்டல்கள் எல்லாவற்றிற்கும் அதில் பதில் இருக்கிறது.

இன்று எதற்கெடுத்தாலும் ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் இந்தியா முன்னேறியது, இப்பொழுது மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வரவேண்டும் என்றெல்லாம் முன்பின் யோசிக்காமல் பேசுபவர்கள் இப்புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.

நாம் தினசரி சேர்த்துக்கொள்ளும் உப்பிற்கு இவ்வளவு பெரிய துயர வரலாறு இருக்கிறதா என பிரமிக்க வைக்கிறது இப்புத்தகம்.

கற்பனையாக எழுதிய நாவல்கள் இல்லாமல் சுவாரசியமாக ஏதேனும் கட்டுரைகள் படிக்க விரும்புபவர்கள் உப்புவேலி படிக்கலாம். மிக அருமையான புத்தகம்.

Tuesday 24 April 2018

சிறுகதை – மன்மத லீலை



ன்று கூரியரில் வந்த திருமண பத்திரிக்கையைப் பார்த்ததும் வக்கீல் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக்கு என்ன பெயர் என்று அவருக்கேத் தெரியவில்லை.
     ”என்னங்க கூரியர்? யார்ட்டயிருந்து வந்திருக்கு?” எனக் கேட்டவாறு அவர் மனைவி கோகிலா வந்தாள்.

     ”என் ப்ரெண்ட் ராமமூர்த்தியோட பொண்ணுக்குக் கல்யாணமாம். பத்திரிக்கை அனுப்பியிருக்கான்.”
     ”நல்ல விஷயந்தான! அதுக்கு ஏன் பேயறஞ்ச மாதிரி நிக்கறீங்க?”
     ”ம். நல்ல விஷயந்தான், ஆனா இந்த ரெண்டு பேரும் ஏற்கெனவே கல்யாணமானவங்க.” ஆச்சர்யம் விலகாமல் பேசினார் விஸ்வநாதன்.
     ”என்ன உளர்றீங்க? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க…”
     ”அட! இந்த ரெண்டு பேரும் ஏற்கெனவே கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒருத்தருக்கொருத்தரு பிடிக்காமப் போயி விவாகரத்து செஞ்சிகிட்டாங்க. அவங்களுக்கு கல்யாணத்த ரத்து செஞ்சு வச்ச வக்கீலே நான் தான்.”

Thursday 23 June 2016

நல்லதோர் வீணை செய்தேன் - வரலொட்டி ரெங்கசாமி



சென்னையில் மழை வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடக்க வேண்டிய புத்தகத் திருவிழா சற்றுத் தாமதமாக ஜூன் மாதம் நடந்து முடிந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் ஸ்டைலில் படு பிரமாண்டமாகவே இருந்தது. லட்சக்கணக்கான புத்தகங்களில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக கடினம் என்பது என்னைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் புத்தகக் கடலிலிருந்து ஒரு சில முத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் வாங்கிய முத்துக்களில் முதலில் எதை வாசிப்பது என யோசித்தப்போது நான் தயங்காமல் தேர்ந்தெடுத்தது வரலொட்டி ரெங்கசாமி எழுதிய நல்லதோர் வீணை செய்தேன்.

Tuesday 3 May 2016

கமலாம்பாள் சரித்திரம்



நம் வரலாற்றை அறிய வரலாற்று நூல்கள் மட்டும் போதாது. வரலாறு முக்கியமானவர்களைப் பற்றியேக் குறிப்பிடும். சாமானிய மனிதனைப் பற்றி அறிய அது உதவாது. மாறாக சாதாரண மக்களின் வாழ்க்கை முறையை அறிய கலை இலக்கியமே நல்ல தேர்வு. பல காலகட்டங்களில் எழுதப்படும் கதைகள், கட்டுரைகள் என நாம் வாசிக்க வாசிக்க நம் அறிவு விரிவடைவதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்ற தெளிவான வடிவமும் கிடைக்கும். கமலாம்பாள் சரித்திரமும் அந்த வகையை சேர்ந்ததுதான்.

Saturday 2 April 2016

ஆலய பிரவேசம் - ஒப்பிலியப்பன் கோயில்


’உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது வழக்கு. உப்பில்லா சாப்பாட்டை நம்மால் ஒரு கவளம் கூட எடுத்து வாயில் வைக்க முடியாது. ஆனால் மனதிற்கு பிடித்த பெண்ணை மணப்பதற்காக உப்பில்லாமல் சாப்பிட சம்மதித்துப் பல யுகங்களாக உப்பில்லாமலேயே சாப்பிட்டு வரும் திருவிண்ணகரப்பன் என்னும் ஒப்பிலியப்பன் எழுந்தருளியிருக்கும் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு பிரவேசித்து அவரின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக்கொள்வோம்.

Friday 25 March 2016

மாட்டுத்தாவணி




நாலாபக்கமும் நாம் சுற்றும்போது பல ஊர்களையும் கடக்கிறோம். பல ஊரின் பெயர்கள் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கும். ஊர் சுற்றும்போது அதுப் போன்ற பெயர்களைப் பார்க்கும்போது அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என விவாதித்துக் கொண்டே செல்வது வழக்கம். சில ஊர்களுக்கு பெயரைக் கேட்டதும் நமக்குப் பொருள் அல்லது காரணம் விளங்கிவிடும். சில பெயர்கள் நாளடைவில் மருவி இன்று சம்பந்தமேயில்லாமல் வேறு ஏதோ ஒரு அர்த்தத்தை சுமந்து கொண்டு நிற்கும்.

சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி



எப்பொழுதும் படிப்பதற்கு ஏதேனும் ஒரு நல்ல புத்தகம் இருக்கவேண்டும். ஒன்று முடிந்தால் அடுத்தது தயாராக இருக்கவேண்டும். ஆனால் படிக்கும் புத்தகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பேன். படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் படிக்கும் புத்தகம் கதையானாலும், கட்டுரையானாலும் சுவையாகவும் இருக்க வேண்டும் அல்லவா! அதனால் புத்தகங்கள் வாங்குவதில் ஏனோதானோ என்றில்லாமல் அக்கறையுடன் வாங்குவது வழக்கம். அன்று தி.ஜானகிராமனின் மரப்பசு படித்து முடிக்கும் தருவாயில் அடுத்தப் புத்தகம் வாங்க அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். அது சின்ன கடைதான். அதிக புத்தகங்கள் இருக்காது. இருக்கும் புத்தகங்களில் பார்வையை ஓட்டினேன். எதிலும் சுவாரசியம் தட்டவில்லை. கடைசிப் புத்தகமாக இருந்தது நா.பார்த்தசாரதியின் சமுதாய வீதி.