Sunday 10 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 16

பாசுரம் 16

"நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாசல்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மாநீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இடைக்குலத்தை சேர்ந்த எங்களுக்கு தலைவனாய் இருக்கும் நந்தகோபரின் வீட்டைக் காப்பவனே, அழகிய கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளை திறவாய்! அந்த மாயம் புரிபவன்,மணிவண்ணன் ஆயர்குல(இடைக்குலம்) சிறுமிகளான எங்களுக்கு வேண்டுவன தருவதாய் சொல்லியிருக்கிறான், அதனால் நாங்கள் தூய்மையாய் வந்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன்முதலில் நாங்கள் வந்துள்ள இந்த நேரத்தில் உன் வாயால் மறுக்காதிருந்து இந்த நிலைக்கதவின் தாள் நீக்குவீர்!

(முந்தின பாடல் வரையில் தன் தோழியை எழுப்பும் ஆண்டாள் இப்பாடலில் ஆயர்பாடியில் இருக்கும் இடையர்குல தலைவனான நந்தகோபனின் மாளிகையில் வாயில் காப்போனை எழுப்புகிறாள்)

விளக்கம்:

கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீ நந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் காப்பானையும், வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும் போது ஒருவரை தடுக்கக்கூடாது.

No comments:

Post a Comment