Wednesday, 13 January 2016

இந்தியாவின் பால்வளத்தை சூறையாட சதி



ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய வீர விளையாட்டு மட்டுமல்ல. நம் இந்திய பால் சந்தையின் ஆணி வேரும் கூட. இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கும் மேலான அளவு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் வியாபாரம் நடைப்பெற்று வருகிறது. அதற்கு தேவையான 85 சதவீதத்திற்கும் அதிகமான பால் தேவையை நம் இந்திய விவசாயிகளே வழங்குகின்றனர். அதனால் பால் வணிகத்தில் நுழைய விரும்பும் அயல்நாட்டு நிறுவனங்களால் இந்திய பால் சந்தைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.



சரி இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்? இந்த ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டு சமயங்களில் தங்களது வீரத்தைக் காட்டுவதற்காகவும், தங்கள் காளைகளின் வலிமையைக் காட்டுவதற்காகவும் அதை வருடம் முழுவதும் நன்கு பராமரித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் எக்கச்சக்கமாக செலவு செய்தாலும் அதை ஒரு பெருமையாகக்  கருதி நிறைய செலவழித்து போஷிக்கின்றனர். இக்காளைகள் ஜல்லிக்கட்டு சமயத்தில் வீரவிளையாட்டிற்காக பயன்பட்டாலும் மற்ற நாட்களில் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுகின்றன. இப்பொழுது ஜல்லிக்கட்டினைத் தடை செய்தால் இந்த காளைகளின் பராமரிப்புக் குறைந்துவிடும். நாளடைவில் நாட்டு மாடுகள் மற்றும் கறவை மாடுகளின் இனப்பெருக்கமும் குறைந்து அந்த மாடுகள் இனம் அழியும் நிலையை எட்டிவிடும். வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்ப்பார்ப்பது இதைத்தான்.

ஏற்கெனவே சர்வதேச பால் நிறுவனங்கள் ஜெர்சி இன மாடுகளை நம் இந்திய விவசாய கிராமங்களுக்குள் அனுப்பி வைத்து நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் குறைத்தது. இப்பொழுது ஜல்லிக்கட்டுத் தடைப்பட்டு இந்த காளைகளும், நாட்டு மாடுகள் மற்றும் கறவை மாடுகளும் அழிந்தால் அந்த சமயத்தில் ஜெர்சி இன மாடுகளை நுழைத்து இந்திய பால் சந்தையில் காலூன்ற முயற்சிக்கின்றன இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்.

நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற குளிர்பிரதேசங்களில் மட்டுமே வாழும் ஜெர்சி பசுக்கள் நம் நாட்டு சீதோஷ்ண நிலையைத் தாங்காது. நம்மூர் மாடுகளைப் போல் அதனால் காடு மேடு என அலைந்து திரிந்து பால் சுரக்க முடியாது. அதற்கென தனி குளிரூட்டப்பட்ட மாட்டுக் கொட்டகைகள் வேண்டும். அதன் உணவு மற்றும் மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து வரவேண்டும். இந்த செலவுகளை நம்மூர் விவசாயிகளால் தாங்க முடியாது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இது சாத்தியம். இப்பொழுது பால் வியாபாரத்தில் முதலாளிகளாக இருக்கும் மாட்டு உரிமையாளர்கள் இந்த கம்பெனிகளில் கூலி தொழிலாளிகளாகும் அவலநிலை ஏற்படும். நம்மூர் நாட்டு மாடுகள் இனம் அழிந்துப்போனால் பால் உற்பத்தியும், விவசாயமும் அழிந்துப் போகும்.

இப்பொழுது விவசாயிகளிடமிருந்து நேரிடையாகக் கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கிறுகிறுக்க வைக்கிறது. அப்பொழுது எப்படியிருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். அரசும் அதில் தலையிடமுடியாது.

ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் போராட்டம் நடத்துவதைப் போல் ஏன் மாட்டிறைச்சியை எதிர்த்துப் போராடவில்லை? மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலாம் இடத்திற்கு முன்னேறியிருப்பதை இதில் நாம் கவனிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்டால் நம் வீரத்தைப் பறைச்சாற்றிய இக்காளைகள் மாட்டிறைச்சிக்காக விற்கப்படும். இன்று குடிநீரில் தொடங்கி பல துறைகளிலும் நுழைந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்கள் பால் உற்பத்தியையும் கைப்பற்றும். நம் கண்ணுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நம் சுதந்திரம் பறிப்போகின்றது. அடிமைச்சங்கிலி இறுகி வருகிறது. 

No comments:

Post a Comment