Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 22

பாசுரம் 22



"அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அகன்ற பூமியை ஆண்ட அரசர்கள் எல்லாரும் தங்கள் அகங்காரத்தையெல்லாம் விட்டு உன் கட்டிலின் அடியில் வந்து காத்திருப்பது போல் நாங்களும் உன் அன்பை வேண்டி வந்து காத்திருக்கிறோம். சலங்கையின் மணி போல, பாதி மலர்ந்த தாமரைப் பூப்போன்ற உன் அழகிய சிவந்த கண்கள் சிறிது சிறிதாக திறந்து எங்கள் மீது உன் பார்வை விழக்கூடாதா? சந்திரனும், சூரியனும் ஒரே சமயத்தில் தோன்றுவது போல் உன் அழகிய இரண்டு கண்களாலே எங்களை நோக்கினால் நாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடாதோ?

விளக்கம்: 

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். கிங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாயா சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே என்று கூறி கண்ணனை எழுப்புகின்றனர். கண்ணனின் பார்வைக்கு அத்தனை சக்தி இருக்கிறது என்று கேட்கிறாள் ஆண்டாள்.

No comments:

Post a Comment