Friday 25 March 2016

சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி



எப்பொழுதும் படிப்பதற்கு ஏதேனும் ஒரு நல்ல புத்தகம் இருக்கவேண்டும். ஒன்று முடிந்தால் அடுத்தது தயாராக இருக்கவேண்டும். ஆனால் படிக்கும் புத்தகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பேன். படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் படிக்கும் புத்தகம் கதையானாலும், கட்டுரையானாலும் சுவையாகவும் இருக்க வேண்டும் அல்லவா! அதனால் புத்தகங்கள் வாங்குவதில் ஏனோதானோ என்றில்லாமல் அக்கறையுடன் வாங்குவது வழக்கம். அன்று தி.ஜானகிராமனின் மரப்பசு படித்து முடிக்கும் தருவாயில் அடுத்தப் புத்தகம் வாங்க அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். அது சின்ன கடைதான். அதிக புத்தகங்கள் இருக்காது. இருக்கும் புத்தகங்களில் பார்வையை ஓட்டினேன். எதிலும் சுவாரசியம் தட்டவில்லை. கடைசிப் புத்தகமாக இருந்தது நா.பார்த்தசாரதியின் சமுதாய வீதி.



நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் ஏற்கெனவேப் படித்துள்ளேன். அதனால் சமுதாய வீதி பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லை என்றாலும் மிக நம்பிக்கையுடன் வாங்கினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. இதோ இன்று படித்து முடித்துவிட்டேன்.

ஓவ்வொரு துறையையும் ஒவ்வொரு சமுதாயமாகக் கொண்டால், அந்த சமுதாயங்கள் ஒவ்வொன்றிற்கும் என தனிப்பட்ட வீதிகள் இருக்கும். அதாவது வாழ்க்கைமுறை. அவ்வகையில் நாடகத்துறையினருக்கும், சினிமாத்துறையினருக்கும் இருக்கும் வாழ்க்கைமுறையே சமுதாய வீதியாக விரிந்துள்ளது. இந்த நாவல் எழுதப்பட்டக் காலகட்டத்தில் நாடகத்துறை அதன் உச்சியில் இருந்து, சினிமாத்துறை அப்பொழுதுதான் ஆரம்பித்து இருக்கவேண்டும். அதனால் நாடகக்கலைஞர்களின் வாழ்க்கைமுறையை அழகாக விவரிக்கிறார். அது இன்றைய சினிமாத்துறையினருக்கும் பொருத்தமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

நாடகத்திற்கு கதை, திரைக்கதை, கவிதைகள் எழுதி இயக்குவதில் திறமைமிக்க நாடகாசிரியராக கதாநாயகனும், நாடகத்தின் நாயகியாக கதாநாயகியும் வலம்வருகின்றனர். இந்த நாவல் எழுதப்பட்டக் காலத்தை மனதில் கொண்டுப் படிப்பதாலோ என்னவோ நாயகன் நாயகியாக சிவாஜி கணேசனும், கே.ஆர்.விஜயாவுமே கண்முன்னே நின்றனர். அதனால் எனக்கு நாவல் படித்தேன் என்பதை விட ஒரு நல்ல பழையத் திரைப்படம் பார்த்த உணர்வே மேலோங்குகிறது.

நாயகன் நாயகி என்றெல்லாம் தனியாக இருந்தாலும் அனைத்துக் கதாப்பாத்திரங்களுமே எந்தப் பாசாங்கும் இன்றி மிக மிக இயல்பாக நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படியே இருக்கிறார்கள் . சினிமாக்களில் கூட கடைசியில் வில்லன் திருந்தி கதாநாயகனிடம் மன்னிப்புக் கேட்பதுப் போலிருக்கும். ஆனால் இதில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. காரணம் அனைத்து மனிதர்களிடமும் குற்றமும் இருக்கும், குணமும் இருக்கும். அவரவர்களுக்கு அவர்கள் செய்வது சரியென்ற எண்ணமும் இருக்கும். கதாநாயகன் முத்துகுமரனும் சரி, வில்லன் போல் காட்சியளிக்கும் கோபாலும் சரி கடைசி வரை தங்கள் இயல்பிலிருந்து மாறுவதில்லை. அவர்களிடையே நட்பும் இருக்கிறது; முறைப்பும் இருக்கிறது.

கதையின் முற்பகுதி சென்னையிலும், பிற்பகுதி மலேசியா, சிங்கப்பூரிலும் நடக்கிறது. நா. பார்த்தசாரதியின் வர்ணனைகள் நாமும் மலேசியா சிங்கப்பூர் என ஊர் ஊராக சுற்றி நாடகம் இயக்கி/பார்த்து விட்டு வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையை அந்நாளில் திரைப்படமாக எடுத்திருந்தால் நல்ல வெற்றிப்படமாக இருந்திருக்கும். ஏனெனில் திரைப்படத்திற்குத் தேவையான ஜனரஞ்சக விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. பாதி படம் வெளிநாட்டில் எடுத்திருக்கலாம். ஆங்காங்கே நல்ல பாடல்கள் போடுவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘ஹாஷ்யம்’ சற்றுக் குறைவு. ஹாஸ்யத்தை ஹாஷ்யம் எனக் கூறிவரும் ஜில் ஜில் பற்றிய வர்ணனைகள் நாகேஷை நினைவூட்டுகிறது. தில்லானா மோகனாம்பாள் ’வைத்தி’கதாப்பாத்திரம் போல சற்று வில்லத்தனம் கலந்த நாகேஷ் என எடுத்துக்கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் என் எதிர்ப்பார்ப்பு வீண் போகவில்லை. ஒரு நல்ல புத்தகம் படித்து முடித்தாயிற்று. அடுத்து என்னவோ!

No comments:

Post a Comment