Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 30

பாசுரம் 30



"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்."

பொருள்:

பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்.

விளக்கம்:

திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு
பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்

No comments:

Post a Comment