Thursday, 4 February 2016

இன்று நமக்கு 'இந்தி'யனே அந்நியன்

விஜய், அஜித் யாருக்கு ரசிகர்கள் அதிகம்? யாருடைய எந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் நம்பர் 1?
இன்று நாட்டில் நடக்கும் பலப் பிரச்சினைகளுக்கு யார் காரணம்? கடந்த திமுக ஆட்சியின் அராஜகமா அல்லது ஆளும் அதிமுகவின் மெத்தனப் போக்கா? அடுத்த தேர்தலில் வெல்லப்போவது யார் அதிமுகவா, திமுகவா? அல்லது இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓட வைத்த பாஜக வா?
இதுப் போன்ற நம் விவாதங்கள் தொடர்ந்து சுபிட்சமாக நடக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் வாழ்க்கை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டும்.


நமக்கு நம் பாரம்பரியத்தையும், வீர வரலாற்றையும், நம் செழிப்பான இலக்கியங்களையும் கண்டு கட்டுக்கடங்கா பெருமிதம் உண்டு. சற்று கர்வமும் கூட. அதனாலேயே இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். வட இந்தியாவின் ஆளுமை நம்மிடம் செல்லுபடி ஆவதில்லை. நம்மிடம் நேரடியாக மோத முடியாததால்  மறைமுகமாக நம்மை அழிக்க சதி நடக்கிறது. மறைமுகமானாலும் வேரோடு அழிக்கும் நோக்கம். கடந்த மாதம் ஜல்லிக்கட்டுப் பிரச்சினை நடந்தது. விவரமறியாத நம்மூர் ஆட்களும் அது ஏதோ விளையாட்டு சம்பந்தப்பட்டது தான் என நினைத்து திரிஷா, எமி ஜாக்சன்களோடு கைகோர்த்து எதிர்த்தனர். ஆனால் உண்மையில் அது தமிழ்நாட்டின் பால்வளத்தை சூறையாடி அந்நிய நிறுவனங்களை உள்ளே நுழைக்க சதி என பெரும்பாலானோர் அறியவில்லை.
அடுத்ததாக கெயில் திட்டம். கொச்சியில் இருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயு எடுத்து செல்ல தமிழகத்தில் 7 மாவட்டங்கள் வழியாக விளைநிலங்களில் குழாய் அமைக்கும் திட்டம். அது ஏன் விளைநிலங்கள்? கேரள அரசு எதிர்த்ததால் அங்கே தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்கள் அமைத்துள்ளனர். தமிழக அரசும் அதே வழியை இங்கேயும் பின்பற்றுமாறு கூறியது. ஆனால் கெயில் நிறுவனம் ஆபத்தான குழாய்கள் பொருத்த தமிழ்நாட்டின் விளைநிலங்களேதான் வேண்டும் என அடம்பிடிப்பது ஏன்?
சரி. தமிழ்நாட்டில் கழக ஆட்சிகள் சரியில்லை. நீயா நானா எனப் போட்டி. மக்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. இத்திட்டத்திற்கு திமுகதான் ஒப்புதல் அளித்தது என அதிமுகவும், அதிமுக வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை, கோர்ட்டுக்கே செல்லவில்லை என திமுகவும் குற்றம்சாட்டிவிட்டுப் போகட்டும். உச்சநீதிமன்றமும் ஏன் அதையே வலியுறுத்த வேண்டும்?
சென்ற ஆண்டு ஆந்திர மாநிலத்தில் "நகரம்" எனும் கிராமத்தில் ஒரு வெடி விபத்து ஏற்பட்டு கிராமமே அழிந்தது நினைவில் இருக்கலாம். அது இந்த கெயில் எரிவாயு செல்லும் குழாய் வெடித்ததனால் ஏற்பட்ட விபத்துதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கெயில் குழாய்கள் யாருடைய நிலம் வழியாக செல்கிறதோ அவர் அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. அந்த இடத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அந்த விபத்து தன்னால் ஏற்படவில்லை என நிரூபிக்க வேண்டும். தவறினால் விபத்தினால் ஏற்பட்ட இழப்பை அவரே ஏற்க வேண்டும். இதுப் போல நிறைய பாதகங்கள் உள்ளன.
முதலிலேயே விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து வரும் வேளையில் இதுப்போன்ற சோதனைகள் வேறு தேவையா?
நண்பர்களே, நாம் எல்லோரும் எப்பொழுதும் நாட்டின் பிரச்சினையே தன் பிரச்சினை என நினைத்து தரையில் இறங்கி போராட முடியாதுதான். நமக்கு எத்தனையோ பணிகள் உள்ளன. இதற்கெல்லாம் கவலைப்பட நேரமிருக்காது. அரசியலே நமக்கு பிடிக்காது. அதனால் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களிலுருந்து ஒதுங்கித்தான் இருப்போம்.
ஆனால் நம்மை விதவிதமாக ஆபத்துகள் சூழும்போது நமக்கு சற்று விழிப்புணர்வு வேண்டும். சினிமா, அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு நம் தாயகத்தின் நன்மைக் குறித்து நாம் சற்று கவலைப்படத்தான் வேண்டும். மக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வோடு சிந்தித்து குறைந்தபட்சம் சமூக வலைதளங்களிலாவது நம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். நாம் ஒன்றுப்படுவோம். எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய சக்திகள் நம்மை அழிக்காமல் பாதுகாத்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment