Friday 25 March 2016

மாட்டுத்தாவணி




நாலாபக்கமும் நாம் சுற்றும்போது பல ஊர்களையும் கடக்கிறோம். பல ஊரின் பெயர்கள் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கும். ஊர் சுற்றும்போது அதுப் போன்ற பெயர்களைப் பார்க்கும்போது அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என விவாதித்துக் கொண்டே செல்வது வழக்கம். சில ஊர்களுக்கு பெயரைக் கேட்டதும் நமக்குப் பொருள் அல்லது காரணம் விளங்கிவிடும். சில பெயர்கள் நாளடைவில் மருவி இன்று சம்பந்தமேயில்லாமல் வேறு ஏதோ ஒரு அர்த்தத்தை சுமந்து கொண்டு நிற்கும்.



இந்த வலைப்பூ எழுத ஆரம்பித்தவுடன் வித்தியாசமான ஊர் பெயர்களைப் பற்றி ஏன் எழுதக்கூடாது எனத் தோன்றியதன் விளைவுதான் இந்தப் பகுதி. ஊர் பெற்ற பேறு.

ஆயிரக்கணக்கான ஊர்கள் இருக்கிறது. இதில் எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என யோசிக்கும் போது எனக்கு முதலில் நினைவிற்கு வந்தது மாட்டுத்தாவணி. எனக்கு தஞ்சாவூர் பக்கம் என்பதால் மதுரை அவ்வளவாகப் பழக்கமில்லை. எப்பொழுதாவது கோயிலுக்குச் சென்று வருவதோடு சரி. மற்றப்படி ஊர் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் இப்பொழுது வரும் திரைப்படங்களைப் பார்த்தால் மதுரையில் இண்டு இடுக்குக் கூடப் பரிச்சயமாகிவிடுமே! அந்த வகையில் முதன்முதலாக ஏதோ ஒரு படத்தில் மாட்டுத்தாவணி என்றப் பெயரைக் கேட்டதும் சற்று வியந்தேன். அப்படி ஒரு பெயரா! தாவணி என்றால் பாவாடை தாவணி மட்டுமே எனக்குத் தெரியும். பள்ளி நாட்களில் சீருடையாக பாவாடை தாவணி அணிந்து சென்றிருக்கிறேன். இது என்ன மாட்டுத்தாவணி? ஒருவேளை ஏதேனும் கிண்டல் வாக்கியமோ என சந்தேகம் வந்து அப்பாவிடம் கேட்டதற்கு, ”அது மதுரையில ஒரு ஏரியா பேரும்மா.” என்றார். எனக்கு ஆச்சரியம். மாட்டுக்கும் தாவணிக்கும் என்ன சம்பந்தம் என்று. அதுப்போல மதுரைக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் பலருக்கும் இதேப்போன்ற சந்தேகம் உதித்திருக்கலாம். அதனால் காரணம் தெரியாவிட்டாலும் பலருக்கும் பரிச்சயப்பட்டப் பெயரிலிருந்தே இந்தப் பகுதியை ஆரம்பிக்கிறேன்.



மாட்டுத்தாவணி  என்பது மாடுகளையும் கன்றுகளையும் விற்பதற்கான ஒரு கால்நடைச் சந்தையாக விளங்கிய பகுதியாகும். பொதுவாகக் கால்நடைகளைக் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைத்திருக்கும் இடத்தைத் தாவணி என்றும் மாட்டுச்சந்தை என்றும் சொல்கிறார்கள்.  இப்பகுதி முன்பு மதுரை மாநகரின் புறநகர் பகுதில் அமைந்திருந்தது பின்னர் மதுரை மாநகரத்துடன் இணைக்கப்பட்டு மதுரை மாநகரிலிருந்த நான்கு பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மலர் சந்தை, காய்கறிச் சந்தை ஆகியவற்றைத் தொடங்கியுள்ளனர். இப்பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment