Wednesday, 2 March 2016

ஊட்டி ரயில் பயணம்



நீலகிரி மாவட்டம் எனக்கு ஏன் பிடிக்கும் என்பதை எழுதிவிட்டு எங்கள் டூர் பற்றி எழுத மிகுந்த இடைவெளி எடுத்துக் கொண்டுவிட்டேன். வேறு சில பணிகள் இருந்தது ஒரு காரணமாக இருந்தாலும் கூட என்னுடைய சோம்பேறித்தனத்தையும் நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இனியும் தாமதித்தால் ஊட்டி டூர் சென்று வந்தது கூட மறந்துப் போய்விடும் எனக்கும் உங்களுக்கும். அதனால் இன்று இதை எழுதி முடித்துவிடுவது என்ற தீர்மானத்துடன் களமிறங்கிவிட்டேன்.



முதல் நாள்:

நான் போன கட்டுரையில் குறிப்பிட்டது போல எங்கள் ஊரிலிருந்து 5 மணி நேரங்களே என்பதால் மதிய உணவு முடித்துவிட்டேக் கிளம்பினோம். எங்கு சென்றாலும் அண்டை கிராமத்திலிருந்து அண்டார்டிகா வரை எங்கு செல்வதாக இருந்தாலும் சென்று சேருவதற்கு முன் வரும் சாதாரண ஊர்கள், சாலைகள், மலைகள், மரங்கள் எல்லாமே கூட அழகுதான். அதையும் ரசிப்பது நம் மனதில்தான் இருக்கிறது. அதனால் சாதாரணம் அசாதாரணம் என எதையும் பிரித்துப் பார்ப்பதில்லை. பல விதமான அழகுகளை கண் கொள்ளாமல் அள்ளி கண்டு களிப்பதால் பயணம் என்பதே எனக்கு மிக மிகப் பிடித்த விஷயம் ஆயிற்று. ஆகவே வழக்கம் போல இந்தப் பயணமும் இனிதேத் தொடங்கியது. விடுமுறை ஆரம்பித்த உற்சாகம் வேறு. வழியில் ஆங்காங்கே நிறுத்தி காபி, டீ, ஸ்நாக்ஸ் என சாப்பிட்டுக்கொண்டு சென்றதில் மேட்டுப்பாளையம் சென்று சேர மாலை 6.30 மணி ஆகிவிட்டது.



எப்பவும் குன்னூர் வழியாகவே மலையேறுவோம். ஆனால் இந்த முறை சற்று மாறுதலாக கோத்தகிரி வழியாக செல்ல முடிவெடுத்தோம். ஒவ்வொரு முறை செல்லும் போதும் மொத்த நாட்களில் ஏதேனும் ஒரு நாள் மாலை வேலையில் சும்மாவாச்சும் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாக குன்னூர் சென்று அங்கிருந்து ஊட்டி திரும்புவோம். காரணம், இந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்காது. வழியில் இயற்கை காட்சிகளும் அற்புதமாக இருக்கும். அதனால் இது மிகப் பிடித்த ஒரு வழித்தடம். அதனால் இம்முறை மலை ஏறும்போதே கோத்தகிரி வழியாக செல்ல முடிவெடுத்தோம்.


சில சமயங்களில் நாம் எதேச்சையாக அதிக எதிர்ப்பார்ப்புகள் இன்றி எடுக்கும் முடிவுகள் மிக அற்புதமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு தருணம்தான் இந்த கோத்தகிரி வழிப் பயணமும். நாங்கள் மலை ஏறும்போது இருட்டிவிட்டது என்றாலும் இயற்கையின் மாயாஜாலத்தில் இரவும் ஒரு அழகுதானே! இரவு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி நிலவே எங்களுக்கு வழித்துணையாக வரும்போது கொண்டாட்டத்திற்கு குறைவேது? அதுவும் பொதுவாக சில சமயங்களில் பௌர்ணமி அன்று கூட எங்கேனும் செல்லும்போது நிலா நம் பின்னால் ஒளிந்து கொண்டு போக்குக்காட்டும். ஆனால் அன்று பிறைநிலவாக இருந்தாலும் நம் பார்வையிலிருந்து விலகவே இல்லை. நிலவின் மயங்கிய ஒளியில் மலைகளும் மரங்களும் நிழலோவியங்களாய் மயக்கத்தைக் கூட்டிக்கொண்டிருந்தது.

காரில் எம்.எஸ்.விஸ்வநாதனிலிருந்து, இமான் வரை அனைவரும் ஓடியோடி வந்து எனக்குப் பிடித்தப்பாடல்களாக இசைத்துக் கொண்டிருந்தது இன்னும் சுவையூட்டியது. கோத்தகிரி வழியில் சாலைகள் சீராக இருந்தாலும் இம்முறை மழை வந்து சற்றுப் பழுதடைந்திருந்ததால் அதை சரி செய்யும் பணி நடைப்பெற்று வந்தது. அதனால் சாலையில் ஆங்காங்கே எதிர்ப்பார்க்காத நேரத்தில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக  வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள் இருந்தன. நாங்கள் அவசரப்படாமல் நிதானமாக சென்றதால் விபத்து ஏதும் நடைப்பெறாமல் தப்பித்தோம். இதுப்போல் ஏதேனும் சாலை பராமரிப்புப் பணிகள் நடைப்பெறுவதாக இருந்தால் குறிப்பாக சாலை திருப்பங்களிலாவது ஏதேனும் அறிவிப்புப் பலகைகள் அபாய குறிகள் வைப்பது நல்லது. அது இல்லாமல் மலைப்பாதையில் தடங்கல்கள் இருப்பது பாதுகாப்பானது அல்ல.

அதனால் சற்று உஷாராகவே ஓட்டிக் கொண்டு ஊட்டி வந்தடைய கிட்டதட்ட இரவு 9 மணி ஆகிவிட்டது. ஏற்கெனவே ஓட்டல் கிளாண்டன் மானரில் அறை முன்பதிவு செய்திருந்ததால் சாப்பிட்டுவிட்டு அறைக்கு செல்ல நேரம் சரியாக இருந்தது. மனம் நிறைய உற்சாகம். எங்கள் விடுமுறை அன்றே ஆரம்பிக்கிறது அதுவும் எங்களுக்குப் பிடித்த ஊட்டியில். என்று எங்கு செல்ல வேண்டும் என்ற திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததால் பெரிய குழப்பம் ஏதுமில்லை.

இரண்டாம் நாள்.:

நாங்கள் எந்த ஊராக இருந்தாலும் மிகப் பெரிய சோம்பேறிகள். தேவை ஏற்பட்டாலே ஒழிய அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து ஓடும் பழக்கமெல்லாம் இல்லை. அதனால் சாவகாசமாக எழுந்து காபி குடித்துவிட்டு சற்று நேரம் அறையிலிருந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் தங்கிய கிளாண்டன் மானர் ஓட்டல் ஊட்டியில் பிரதான சாலையிலேயே இருக்கிறது. அதுவும் நாங்கள் ஒவ்வொரு முறையும் அங்கேயேத் தங்குவதால் அவர்களிடம் சாலையைப் பார்த்தவாறு உள்ள அறையே வேண்டும் எனக் கேட்டு வாங்கிக்கொள்வோம். அதனால் ஓய்வாக சாலையை வேடிக்கைப் பார்த்தவாறு சற்று நேரம் கழித்து விட்டு, குளித்து முடித்து, காலை உணவு உண்டு தொட்டபெட்டா செல்ல கிளம்பினோம்.



தொட்டபெட்டாவின் அழகை வர்ணிக்கத் தேவையில்லை. நீலகிரி மாவட்டத்திலேயே உயரமான இடம் என்பதால் உச்சியிலிருந்து ஊட்டியைப் பார்ப்பது ஒரு தனி சுவாரசியம்தான். ஆனால் தொட்டபெட்டாவிற்கு செல்லும் சாலை மிக மோசமாகப் பழுதடைந்து இருந்ததால் கடந்த இரண்டு மூன்று முறை ஊட்டி சென்றப்போதும் தொட்டபெட்டாவைத் தவிர்த்துவிட்டோம். ஊட்டிக்கு செல்ல ஆரம்பித்த முதல்முறையிலிருந்து ஒவ்வொரு முறையும் நாங்கள் முதலில் சென்று பார்க்கும் இடம் தொட்டபெட்டா. அதிலிருந்தே எங்கள் சுற்றுலா தொடங்கும். அதனால் இம்முறையாவது தொட்டபெட்டா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சாலைகளின் நிலவரம் பற்றிக் கேட்டறிந்து நீலகிரி மாவட்டத்தின் சிகரத்திற்கு முதலாக சென்றோம். பிரமாதமான சாலை என்று இல்லாவிட்டாலும் போன தடவைக்கு இம்முறை சிறிது பரவாயில்லையாக இருந்தது. நாங்கள் சென்ற அன்று பொங்கல் பண்டிகை என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. எப்பொழுதும் தொட்டபெட்டாவில் அந்தக் குறுகலானப் பாதையில் இருபுறமும் கடைகளை வேடிக்கைப் பார்த்தவாறே செல்வது ரொம்ப ஜாலியான விஷயம். குளிர்காலமாக இருந்தாலும் இம்முறை அதிகம் பனிமூட்டம் இல்லை. அதனால் மேலிருந்து ஊட்டியை நன்குப் பார்க்க முடிந்தது. டெலஸ்கோப் மூலம் பார்க்க பெரிய்ய்ய்ய்ய வரிசை இருப்பதால் அதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்கவில்லை.



எப்பொழுதும் இல்லாத ஒரு சுவையான விஷயம் இந்த முறை கூடியிருந்தது. அது ஆங்காங்கே ஸ்பீக்கர் பொருத்தி பழைய திரைப்படப் பாடல்களை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர். எத்தனைப் பாடல்கள் வந்தாலும் பழைய பாடல்கள் என்றுமே என் ஃபேவரிட். அதனால் நீலகிரியின் உயர்ந்த இடத்திலே, குளிர் காற்றோடு சேர்ந்து எனக்கு பிடித்த பாடல்களும் சேர்ந்துக் கொண்டால் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்! சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்து சூழ்நிலையை ரசித்துவிட்டுக் கிளம்பினோம்.

அடுத்ததாக எங்கள் திட்டம் ஊட்டி ரயிலில் செல்வது. நாங்கள் காரில் சென்று விடுவதால் ஊட்டி ரயிலில் செல்ல வாய்ப்பிருக்காது. அதனால் நாங்கள் என்றேனும் ஒருநாள் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயிலில் போய் விட்டு, திரும்ப மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு பேருந்தில் வந்து விடுவது. எப்பொழுதும் ஊட்டியை காரிலேயேப் பார்பதற்கு ரயிலிலும், பேருந்திலும் சென்றுப் பார்ப்பது இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதனால் இதுவும் பெரும்பாலும் எங்கள் திட்டத்தில் இடம்பெற்றிருக்கும்.

மதியம் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில். நாங்கள் தொட்டபெட்டாவிலிருந்து கீழே வர 12 மணி ஆகிவிட்டது. நேரே இரயில் நிலையம் சென்று இரண்டு டிக்கெட் வாங்கிவிட்டு ஓட்டல் அறைக்கு சென்று விட்டோம். மதிய உணவு உண்டு விட்டு ஆட்டோவில் ரயில் நிலையம் சென்று விட்டோம். ரயில் வந்ததும் ஜன்னல் ஓரமாக இடம்பிடித்து ஜோராக பயணிக்கத் தொடங்கினோம்.



ஊட்டி ரயிலில் என்ன சிறப்பு? இயற்கையை ரசிப்பவர்கள் ’டிரெக்கிங்’ செல்வது நாம் அறிந்ததே! என்னைப் போல் சோம்பேறிகள், ’டிரெக்கிங்’செல்ல இயலாதவர்கள் ஊட்டி ரயில் பயணத்தை ஒரு நூதன மலை ஏறும் விதமாகக் கணக்கில் கொள்ளலாம். முதல்முறை செல்லும் போது ஊட்டியிலிருந்து குன்னூர் வரை மட்டுமே சென்று திரும்பினோம். ஆனால் இந்த இடைப்பட்ட தூரத்தில் ஊட்டியின் மென்மையான அழகை மட்டுமே கண்டுகளிக்க முடியும். ஆனால் இயற்கையின் விஸ்வரூபத்தைக் காண மேட்டுப்பாளையம் வரை சென்றால் மட்டுமே இயலும். ஆம்! அது உண்மையில் இயற்கையின் விஸ்வரூபம்தான். ‘பாகுபலி’ திரைப்படம் பிரமாண்டம் படு பிரமாண்டம் எனப் பெயர் எடுத்ததற்கு முக்கியக் காரணம் அந்த நீர் வீழ்ச்சியின் பிரமாண்டமே என்பதை மறுப்பதற்கில்லை. அதுப் போல ஒரு பிரமாண்ட உணர்வை ஏற்படுத்துகிறது ஊட்டி மேட்டுப்பாளையம் ரயில் பயணம். வானை முட்டும் மலைகள், காடுகள், காலடியில் ஓடும் நீர்வீழ்ச்சிகள் என பிரமாண்டத்தின் உச்சம் அது. இப்பொழுது நினைத்தாலும் கண்கள் பிரமிப்பில் விரிகிறது.



ரயில் குன்னூரை சென்றடைந்தவுடன் நீராவி இன்ஜின் பொருத்தப்படுகிறது. அப்பொழுதிலிருந்து பிரமாண்டமும் ஆரம்பிக்கிறது. வழியில் ஹில்க்ரோவ் எனும் ஸ்டேஷனில் இன்ஜினுக்கு மீண்டும் நீர் நிரப்பப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த சின்ன ஸ்டேஷன் அது. அந்த இடத்தைப் பார்க்கும்போது அங்கே செல்ல சாலை வசதிகள் இருக்குமா என சந்தேகம் எழுகிறது. அந்தளவிற்கு ரயிலுக்காகவேப் படைக்கப்பட்ட ஒரு கிராமம் போல் இருக்கிறது. அங்கு வேறெந்த கட்டடங்களும் இருப்பது போல் தெரியவில்லை. இருப்பினும் அங்கு டீ, காபி விற்பனையாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் வேலை முடிந்து திரும்ப வேண்டும் என்பதால் அங்கு ஏதேனும் வசதிகள் இருக்கும் என நினைத்துக் கொண்டோம்.


 அன்று மாலை ரயில் பயணம் முடித்துக் கொண்டு ஊட்டிக்கு திரும்பிவிட்டோம். இரவு 9 மணியளவில் ஓட்டல் வந்து சேர்ந்தோம். மறுநாள் முதுமலை விசிட். அது என்றுமே எங்கள் பேவரிட் ஸ்பாட். ஏன் என்று அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1 comment:

  1. அருமை. ஊட்டி சென்று வந்த உணர்வு உங்கள் எழுத்து மூலமாக...

    ReplyDelete