Tuesday, 1 March 2016

மரப்பசு - தி. ஜானகிராமன்



மரப்பசு நேற்றுப் படித்து முடித்தேன். பழைய எழுத்தாளர்களில் என்னுடைய பேவரிட் கல்கி. அவருக்கு அடுத்தப்படியாக அகிலன். அவ்வரிசையில் தி.ஜானகிராமனின் எழுத்தும் எனக்குப் பிடித்தமானது.

அவரது எல்லாப் படைப்புகளிலும் தஞ்சாவூர் பிராமண சமுதாயத்தைப் பின்புலமாக வைத்து எழுதும் நடை எனக்குப் பிடிக்கும். பிராமாண பாஷை பிரவாகமாக ஓடும். அதில் அவரை மிஞ்ச ஆளில்லை.

ஆனால் பெரும்பாலான கதைகளில் கள்ளக்காதல், தவறான உறவுகள் என ஒன்றையே சுற்றிச்சுற்றி எழுதுவது எனக்கு ஏதோ இன்றைய மெகா சீரியல் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

அவருக்கு ஏன் வேறு சப்ஜெக்ட்களே கிடைக்கவில்லை! பிராமண சமுதாயத்தில் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்களா?

தி.ஜா இதைத் தவிர வேறு என்ன சொல்லிவிடப் போகிறார் எனத் தெரிந்தே படித்ததால் அதிர்ச்சியடையவில்லை. அம்மா வந்தாள் படித்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி நிச்சயமாக இப்போது இல்லை.

படிக்க ஆரம்பித்ததும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் 'கட்டிப்புடி வைத்திய'த்திற்கு இதுதான் இன்ஸிபிரேஷனாக இருந்திருக்குமோ என நினைத்தேன். பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

அந்தக் காலத்தில் கணவனை இழந்தப் பெண்ணிற்கு நடந்த சம்பிரதாயங்களைப் பார்த்து திருமணத்தையே வெறுக்கும், முற்போக்கு சிந்தனைகள் உள்ள அம்மணி எடுக்கும் முடிவுகள் எந்தக் காலமாக இருந்தாலும் ஆட்சேபத்திற்குரியதே. 1975ல் எழுதாமல் இன்று எழுதியிருந்தால் இன்னும் பல ஒழுக்கக்கேடுகள் சரளமாக அரங்கேறியிருக்கும். அந்த வகையில் மரப்பசு தப்பியது.

கதையின் கருத்தைப் பார்க்காமல் பின்புலம், தொய்வில்லாத எழுத்து நடை, சுவையான வர்ணனைகள் என இருந்தால் போதும் என நினைத்தால் மரப்பசு நிச்சயம் பிடிக்கும். எனக்கு தமிழில் ஒரு முக்கியமான நாவலைப் படித்து முடித்த திருப்தி. அவ்வளவுதான்.

No comments:

Post a Comment