Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 19

பாசுரம் 19



"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்"

பொருள்:

குத்து விளக்குகள் நாற்புறமும் சுடர் விட்டெரிய யானைதந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலில், மென்மையான சயனத்தில்(படுக்கையில்), கொத்து கொத்தாக பூக்களை கூந்தலில் சூடிக்கொண்டு உறங்குகின்ற நப்பினையின் மார்பில் தலை வைத்து படுத்துறங்கும் கண்ணா நீ வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசு! மை பூசியுள்ள அழகிய கண்களை உடைய நப்பின்னையே! அவனை விட்டு சிறிது நேரமும் பிரிய மனமில்லாததால் எவ்வளவு நேரமாகியும் கண்ணனை துயிலெழுப்பாமல் இருக்கிறாயே, இது உன் குணத்திற்கு தகுமோ?

(முந்திய பாடலில் நப்பின்னையை எழுப்பிவிட்டு இப்பாடலில் அவள் மேல் படுத்துறங்கும் கண்ணனை எழுப்புகின்றனர்)

விளக்கம்: 

நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment