Monday 7 March 2016

கண்களின் எதிரி கிளாக்கோமா பற்றி அறிவோம்



உலக க்ளகோமா கூட்டமைப்பும், உலக க்ளகோமா நோயாளிகளின் கூட்டமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் ஒரு வாரத்தை தேர்ந்தெடுத்து "உலக க்ளகோமா வாரம்” என்று கடைபிடிக்கின்றனர்.
க்ளகோமா நோயைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ளவும், ஒரு தனிப்பட்ட விழிப்பு உணர்வை மேம்படுத்தவும் அதன் மூலம் க்ளகோமா மூலம் ஏற்படும் பார்வை இழப்பினைத் தடுப்பதற்கும் விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தவும் செய்கின்றனர்.



இந்த வருடம் மார்ச் 6 முதல் மார்ச் 12 வரை உலக க்ளகோமா வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 66.2 மில்லியன் பேர் க்ளகோமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 11.2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு இந்த நோய் இருப்பது தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். மருத்துவமனைக்கு அவர்கள் வரும்போதுதான் அவர்களுக்கு க்ளகோமா நோய் மிக அதிகமான அளவில் முற்றிய நிலையிலிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு பார்வையை மீட்டுத் தருவது கடினமாகவே இருக்கிறது.




க்ளகோமா என்பது என்ன?

க்ளகோமா என்பது கண்ணின் பார்வை நரம்பினை பாதிக்கக்கூடிய, அதன் விளைவாக பார்வையிழப்பினை ஏற்படுத்தும் கண் நோய்களின் ஒட்டுமொத்த பிரச்னை ஆகும்.


க்ளகோமா என்பது நமது கண்ணின் முன் பகுதியில் உள்ள முன் அறையில் (Anterior Chamber) சுரக்கும் நீரின் அழுத்தம் (Intra Ocular Pressure) சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கின்ற நிலையில் வருவது.
கண்ணின் உள்நீர் அழுத்தம், பார்வை நரம்பினால் எந்த அளவு தாங்க முடியுமோ, அதனைவிட அதிகமாகும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்பு க்ளகோமா எனப்படும். இருப்பினும் ஆரம்பக் கட்ட நிலையிலேயே இந்த பிரச்சினையை கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால் இருக்கின்ற பார்வையை காப்பாற்றி பார்வையிழப்பினை தடுக்க முடியும்.





சென்னை க்ளகோமா ஆய்வு அறிக்கை:

சங்கர நேத்ராலயாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட சென்னை க்ளகோமா ஆய்வு (Chennai Glaucoma Study) மூலம் தெரியவந்தவை:
1. க்ளகோமா நோய் உள்ளவர்களில் 98% பேர் தனக்கு க்ளகோமா நோய் இருப்பது தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
2. கிராம மக்கள் தொகையில் 4.17 % பேருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. வருங்காலத்தில் இது 9.06 சதவிகிதமாக அதிகரிக்கலாம்.
3. நகர மக்கள் தொகையில் 5.4 % பேருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது.
4. க்ளகோமாவிற்க்கும் நமது வயது, உடல் ஆரோக்கியம், ஆண், பெண் பாகுபாடு, மூலக்கூறியல் காரணங்கள் மற்றும் இனம் ஆகியவற்றிற்கும் மிக அதிகமான தொடர்பு இருக்கிறது.
5. க்ளகோமா நோய் ஆண்களைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

க்ளகோமா நோய் நமது விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சில முக்கிய குறிப்புகள்:

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் கண் சம்பந்தப்பட்ட்ட நோய்களும் முக்கிய இடம் வகிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு க்ளகோமா உட்பட கேடராக்ட், டயபீடிக் ரெடினோபதி போன்ற கண் சார்ந்த நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
க்ளகோமா நோய்க்கென சில அறிகுறிகள் இருந்தாலும், அந்த அறிகுறிகள் தெரிகின்றபோது கண்ணில் மிக அதிகமான அளவில் ஏற்கெனவே பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மருத்துவ அனுபவங்கள் குறிப்பிடுகின்றன.

க்ளகோமா ஒரு மரபியல் சார்ந்த கண் குறைபாடுதான். க்ளகோமா நோய் உள்ளவர்களின் உறவினர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நமது கண்ணின் முன் அறையில் சுரக்கும் அக்யூவியஸ் திரவம் (Aqueous Humour) முறைப்படி வெளியேற வேண்டும். க்ளகோமா நோய் உள்ளவர்களுக்கு இத்திரவம் சரியாக வெளியேறாது. இத்திரவம் அதிக அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் காரணமாக பார்வை நரம்பை பாதிக்கிறது.
பாரத தேசத்தில் மட்டும் நூறில் இரண்டு பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். க்ளகோமா நோய் உள்ளவர்களில் 98 சதவிகிதம் பேருக்கு தனக்கு க்ளகோமா நோய் இருப்பது தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.



க்ளகோமா பொதுவாக வயதானவர்களையே அதிகம் பாதிக்கிறது என்பதும் உண்மை; எனினும் சிறு வயது குழந்தைகளையும் சேர்த்து பலரையும் க்ளகோமா பாதிக்கிறது என்பதேயும் கருத்திற் கொள்ள வேண்டும்.
க்ளகோமா அனைத்து தேசத்தவர்களையும் பாதிக்கிறது.
பொதுவாக கண்ணாடி அணிவதற்கான பரிசோதனையில் கண்களில் சொட்டு மருந்திட்டு கண்ணின் பாப்பா விரிவடைந்த பிறகு இன்டைரக்ட் ஆப்தால்மாஸ்கோப் எனும் கருவியின் மூலம் கண்ணின் உட்பகுதிகளை முழுமையாக பரிசோதனை செய்வது கிடையாது. மேலும் ஒருவருக்கு க்ளகோமா இருப்பதை கண்டறிவதற்கு சில தனி பரிசோதனைகள் இருக்கின்றன. எனவே கண்ணாடி அணிவதற்காக செய்யும் பரிசோதனை மூலம் ஒருவர் தனக்கு க்ளகோமா நோய் உள்ளதா? இல்லையா? என்று தெரிந்து கொள்வது அரிது.
தற்போதைய நிலவரப்படி க்ளகோமாவை குணப்படுத்த முடியாது என்பதே உண்மை. கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள், லேசர் சிகிச்சை மற்றும் ஆபரேஷன்கள் மூலம் க்ளகோமாவை கட்டுப்படுத்தி ஒருவருக்கு தற்போது இருக்கின்ற பார்வையை காப்பாற்றிக் கொள்வதற்கே உதவி செய்யும். இழந்த பார்வையை மீட்க முடியாது என்பதே உண்மை.
முழுமையான கண் பரிசோதனையில் ஒருவருக்கு க்ளகோமா உள்ளதா என்பதனை ஓரளவு கண்டுபிடிக்க முடியும். க்ளகோமா நோய்க்கான சில சிறப்பான பரிசோதனைகளை செய்தபின்னரே ஒருவருக்கு க்ளகோமா உள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

கண்ணின் முக்கியமான பாகங்கள்:




இந்த க்ளகோமா நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் கண்ணின் முக்கியமான பாகங்களைப் பற்றியும் நாம் எவ்வாறு ஒரு பொருளை பார்க்க முடிகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர்பிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் சுற்றுப்பாதை கண்ணைச் சுற்றி நான்கு எலும்புச் சுவர்களால் அமைந்துள்ளது. இது பொதுவாக கண் குழி எனப்படுகிறது
ஐ லிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கண் இமை நமது கண்களை பாதுகாத்து, இமைகள் திறந்து வழி விட்டு நாம் பார்க்கும் பொருள்களிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை நமது கண்ணுக்குள் அனுப்புகிறது.

கன்ஜங்க்ட்டிவா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தெளிவான இமை இணைப்புப்படலம் கண்ணின் மேற்பரப்பிற்கு அரணாகவும், கண் இமையோடு இணைந்தும் உள்ளது.

கார்னியா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விழி வெண் படலம் நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, இரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத கண்ணுக்கு முன்புறம் அமைந்துள்ள ஒரு மெல்லி திசு. அதன் வழியாக ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள்ளே செல்கிறது.

கார்னியாவைத் தொடர்ந்து இருக்கும் பகுதி ஐரிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கரு விழி, அதன் மையப்பகுதியில் உள்ள ஒரு துளை போன்ற பகுதி ஆங்கிலத்தில் ப்யூப்பில் என்று சொல்லப்படும் பாப்பா, அதன் வழியாக ஒளிக்கதிர்கள் செல்கிறது.

கண்ணின் பாப்பாவைத்தொடர்ந்து இருக்கும் பகுதியானது கிரிஸ்ட்டலின் என்ற புரோட்டீனால் ஆன, ஆங்கிலத்தில் லென்ஸ் என்று அழைக்கப்படும் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய வில்லை.
ஒளிக்கதிர்கள் லென்ஸின் வழியாக ஊடுருவிச் சென்று கண்ணின் உள்ளே உள்ள கடைசிப்பகுதியான ஆங்கிலத்தில் ரெட்டினா என்று சொல்லப்படும் விழித்திரையில் பாய்ச்சப்பட்டு பிம்பம் பதிவாகிறது.

ரெட்டினாவானது ஒளிக்கதிர்களை நரம்பு தூண்டுதல்களாக்கி விழித்திரையைத் தொடர்ந்து இருக்கும் பார்வை நரம்பின் மூலமாக மூளைக்கு அனுப்புகிறது.
ரெட்டினாவிற்க்கும், லென்ஸிற்க்கும் இடைப்பட்ட பகுதி விட்ரியஸ் காவிட்டி எனப்படுகிறது.
விட்ரியஸ் காவிட்டி விட்ரியஸ் எனப்படும் ஜெல் போன்ற திரவத்தினால் நிரம்பியுள்ளது. இது கண்ணிற்கு தேவையான சத்தினை அளிப்பதோடு, கண்ணின் கோள வடிவத்தினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறது.
ரெட்டினாவானது பல அடுக்குகளைக் கொண்டது, ஒவ்வொரு அடுக்கும் பல செல்களால் ஆனது. விழித்திரையில் இரத்தக்குழாய்கள் இருக்கின்றன.
ரெட்டினாவின் உள்கடைசி அடுக்கில் ஒளியை சேகரிக்கக்கூடிய ஃபோட்டோரிசெப்டார் எனப்படும் ஒளியை ஏற்க்கும் செல்கள் உள்ளன.
ரெட்டினாவிற்க்கு அடுத்து விழித்திரை நிறமி தோல் இழை எனப்படும் ரெட்டினல் பிக்மெண்ட் எப்பிதெலியம் மற்றும் விழிநடுப்படலம் எனப்படும் கோராய்டு அமைந்துள்ளன.
இந்த இரண்டு அடுக்குகளும் விழித்திரைக்கு தேவையான சத்தினை அளித்து அதிகப்படியான ஒளியை ஏற்றுக்கொள்கிறது.
விழித்திரையினால் பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் நமது பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பப்படுகிறது.
ஸ்க்ளீரா எனப்படும் வெண்மையான விழிவெளிப்படலம் ஒரு கடினமான இழைகளாலான அடுக்கு ஆகும், இது கண்ணின் உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும் பாதுகாக்கிறது.
க்ளகோமாவைப் பொருத்தமட்டில் நாம் மிகவும் கவனம் கொள்ள வேண்டிய பாகங்கள், பார்வை நரம்பு,சிலியரி அங்கம். சிலியரி அங்கத்தில் சுரக்கும் அக்யூவியஸ் திரவம்.

பார்வை நரம்பு என்பது என்ன?

பார்வை நரம்பு என்பது பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நரம்பிழைகளைக் கொண்ட ஒரு கட்டு (பண்டல்) போன்ற ஒயர் போன்ற அமைப்பாகும்.இது நமது ரெட்டினா எனப்படும்

விழித்திரையையும் மூளையையும் இணைக்கும் முக்கிய உறுப்பாகும். ரெட்டினா என்பது நமது கண்களின் உள்கடைசியில் உட்புறச் சுவர் போன்று இருக்கக்கூடிய ஒளிக்கதிர்களை பிம்பமாக

தன்மீது பதிய வைக்கக்கூடிய மிக மென்மையான மிகவும் சென்சிட்டிவ்வான திசுவாகும். ஒரு ஆரோக்கியமான பார்வை நரம்பு சிறந்த பார்வை எனும் புலனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அக்யூவியஸ் திரவம் என்பது என்ன?

நமது கண்களின் முன் பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலைப்போன்றுகாட்சியளிக்கும் கார்னியா என்னும் விழி வெண் படலத்திற்க்கும், லென்ஸிற்க்கும் இடைப்பட்ட பகுதி கண் முன் அறை
எனப்படுகிறது. இந்த கண் முன் அறையில் தெளிவான அக்யூவியஸ் திரவம் எனும் திரவம் நிரம்பி ஓடிக்கொண்டேயிருக்கிறது. இந்த திரவம் சிலியரி அங்கம் (ciliary body) எனப்படும் ஒரு மிகச் சிறிய சுரப்பியிலிருந்து ஒவ்வொரு கணமும் சுரந்து கொண்டேயிருக்கிறது.
இந்த சிலியரி அங்கம் கருவிழியின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த திரவம் கருவிழி, லென்ஸ் மற்றும் கார்னியாவிற்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் திரவம் ஆகும். கார்னியாவில் இரத்த குழாய்கள் ஏதும் கிடையாது. இந்த திரவம் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளித்துவிட்டு ஸ்பாஞ்சு போன்ற நுண்ணிய துவாரங்கள் கொண்ட டிராபெகுலர் மெஸ்வொர்க் என அழைக்கப்படும் வெளியேற்றும் கணவாய்கள் (Drainage Canals)மூலம் வெளியேறுகிறது. இந்த அமைப்பு நமது கண்களின் கார்னியாவும் கருவிழியும் சந்திக்கும் கோணத்தில் (Angle) அமைந்துள்ளது.

கண் நீர் அழுத்தம் என்பது என்ன?

சாதாரணமான நிலையில் இந்த அக்யூவியஸ் திரவம் ஓடிக்கொண்டேயிருக்கும் நிலையில் இந்த திரவத்தின் அழுத்தம் 9 முதல் 21 மி.மீட்டர் பாதரச அளவு (21mm Hg)இருக்கும். இந்த திரவத்தை வெளியேற்றும் கணவாய்கள் அடைத்துக்கொள்ளும் நிலையில் அக்யூவியஸ் திரவம் சுரக்கின்ற வேகத்தில் வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் மொத்தமாகச் சேரும்போது அந்த இடத்தில் அக்யூவியஸ் திரவத்தின் அழுத்தம் அதிகரிக்கிறது.

கண் நீர் அழுத்தம் அதிகரிக்கும்போது கண் பார்வை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல கண்ணின் ஒரு முக்கியமான பாகமான பார்வை நரம்பு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நரம்பிழைகளைக் கொண்ட ஒரு கட்டு (பண்டல்) போன்ற ஒயர் போன்ற அமைப்பாகும்.இது நமது ரெட்டினா எனப்படும் விழித்திரையையும் மூளையையும் இணைக்கும் முக்கிய உறுப்பாகும்.இந்த ஒவ்வொரு நரம்பிழைகளும் ஒரு அங்குலத்தின் 120,000 மடங்கு சிறியது மற்றும் மென்மையானது. கண் நீர் அழுத்தம் இயல்பு அளவான 21mm Hg க்கு மேல் அதிகரிக்கும்போது மென்மையான நரம்பு செல்கள் அழுத்தப்படுகின்றன, நரம்பு செல்கள் சிதைக்கப்படுகின்றன,ஒரு கட்டத்தில் அவை இறந்து விடுகின்றன. நரம்பு செல்கள் இறந்துவிட்ட நிலையில் பார்வையிழப்பும் நேரிடுகின்றன.

க்ளகோமா யாருக்கு வருகிறது?

* மிக அதிகமான அளவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்,
* குறிப்பாக க்ளகோமா இருந்தவர்களின் உறவினர்களுக்கும்,
* நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும்,
* அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் க்ளகோமா வருகிறது.
இருப்பினும் குழந்தைகளுக்கும் க்ளகோமா வருகிறது என்பது வேதனையான விஷ்யம் தான்.

க்ளகோமாவின் பொதுவான அறிகுறிகள் என்ன?

க்ளகோமாவைப் பொருத்தமட்டில் நோய் ஓரளவு அதிகரித்த பின்னரே அறிகுறிகள் தென்படுகின்றன. இருப்பினும் சில அறிகுறிகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட முடியும்;
* அடிக்கடி கண்ணாடி மாற்ற வேண்டிய தேவை இருப்பது.
* அடிக்கடி தலைவலி, கண் வலி மற்றும் கண் சிவத்தலுடன் கூடிய பார்வைக்குறைபாடு ஏற்படுவது.
* குழந்தைகளின் கண்கள் பெரிதாக இருக்குமேயானால் அது ஒருவேளை க்ளகோமாவினால் இருக்கலாம்.

க்ளகோமாவில் பல வகைகள் இருக்கின்றனவா?

ஆம், பொதுவாக க்ளகோமாவை கண் மருத்துவர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
*Primary Open Angle Glaucoma (POAG) முதல் நிலை திறந்த கோண க்ளகோமா:-
கண் உள் நீர் வெளியேறும் வழி திறந்து காணப்பட்டால், அதனை திறந்த கோண க்ளகோமா என்று கூறுவார்கள். பொதுவாக மற்றும் மூன்றில் இரண்டு பங்கு க்ளகோமா நோயாளிகள் இந்த நிலை க்ளகோமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த வகை க்ளகோமா பரம்பரை ரீதியாகவும்,
- 50 வயதிற்கு மேலும் வருகிறது.
- இந்த வகையில் மெதுவாக, படிப்படியாக கண்ணின் உட்புற அழுத்தம் அதிகரிக்கிறது. அப்போது ஏற்படும் தெளிவற்ற பார்வையை கேடராக்ட் என்று தவறாக கருதுவதாலும், படிப்படியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பார்வை குறைந்து விடுவதும் இந்த வகை க்ளகோமாவினால்தான்.
- எனவே கண் உட்புற அழுத்தத்தில் மாற்றம் இருக்கிறது என்று தெரிந்தவுடனேயே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முழுமையான கண் பரிசோதனை அவசியமாகும். அதன் மூலமே இவ்வகை க்ளகோமாவை கண்டறிந்து நோயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வர முடியும்.
இத்தகைய தொடர்நிலை க்ளகோமா (Chronic Glaucoma)வில் அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் கணவாய்களின் முன் பகுதி திறந்தேயிருக்கும். ஆனால் கணவாய்களின் உள்ளே, தடுக்கும் முறையில் கோளாறுகள் ஏற்படும்.
இந்த வகை க்ளகோமாவை கண் சொட்டு மருந்துகளாலும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாலும் மெதுவான முன்னேற்றத்தைத் தந்து நல்ல பலனைத் தருகிறது.
* Primary Agnle Closure Glaucoma ( PACG) முதல் நிலை மூடிய கோண க்ளகோமா அல்லது வளைந்த கோண க்ளகோமா:-
- இந்த வகை தொடர்நிலை க்ளகோமாவிலிருந்து வேறுபட்டதாகும்.
- இந்த வகையில் அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் கணவாய்கள் முன்பு திடீரென்று அடைப்புகள் ஏற்படுவதாலோ, முழுவதுமாகவோ அல்லது ஓரளவோ திரவம் வெளியேறும் வழி மூடப்படுவதால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கிறது.
- சிலருக்கு சினிமா தியேட்டர்களிலும், இருட்டான அறைகளிலும் அல்லது சில மருந்துகளை உபயோகிப்பதாலும் கண்ணின் பாப்பா அடிக்கடி விரியலாம். அதனாலும் வெளியேற்றும்

கணவாய்களின் கோணம் ஒடுக்கமாகவும் இருந்தால் இந்த வகை க்ளக்கோமா வரலாம்.


இவ்வகை க்ளகோமாவின் அறிகுறிகள்:

- கடுமையான தலைவலி
- கண் வலி
- குமட்டல்
- இரவு நேரங்களில் வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போன்று காட்சியளிப்பது.
- கடுமையான தெளிவற்ற பார்வை.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம். ஏனெனில் இவ்வகை களகோமாவில் திடீரென கண் அழுத்தம் அதிகரித்து உடனடியாக கடுமையான பார்வை பாதிப்புக்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இவ்வகை க்ளகோமாவுக்கான சிகிச்சை:

ஆபரேஷன் அல்லது லேசர் சிகிச்சை மூலமாக புடைத்துக் காணப்படும் கருவிழியின் சிறிய பகுதியை நீக்கி அக்யூவியஸ் திரவம் முறைப்படி வெளியேறி கண் அழுத்தத்தை சீராக்குவது.


*Developmental Glaucoma வளர்நிலை க்ளகோமா:
இவ்வகை க்ளகோமா பொதுவாக குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த அளவில் காணப்படும். இந்நோய் பரம்பரையாகவும், குழந்தை பிறப்பதற்கு முன்பே கண்ணில் அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் பாதை சரியாக வளராமல் அல்லது முழுமையாக வளராமல் இருந்தாலும் வருகிறது.

*Secondary Glaucoma இரண்டாம் நிலை க்ளகோமா:
கண் விபத்தின் காரணமாக வீக்கம் மற்றும் கட்டிகள் அல்லது முற்றிய கேடராக்ட் அல்லது நீரிழிவு நோய் காரணமாக வருகிறது.

குறைந்த அழுத்த க்ளகோமா: (Low Tension Glaucoma):
- இது ஒரு புதிரான நிலையாகும்.
- குறைந்த அளவில் கண் நீர் அழுத்தம் உள்ள ஒரு புதிரான நிலையில் ஏற்படுகிறது.
- சாதாரண கண் நீர் அழுத்த நிலையில்கூட பார்வை நரம்பு பாதிக்கப்படலாம்.
- சாதாரண கண் நீர் அழுத்த நிலையில்கூட பக்கவாட்டுப்பார்வை பாதிக்கப்படலாம்.
- கண் நீர் அழுத்தம் வழக்கத்துக்கு மாறாக உயர்வாக இல்லாதிருந்தாலும் பார்வை நரம்பு பாதிக்கப்படுகிறது.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களில் குறைந்த பட்சம் 30% பேருக்காவது மருந்து மூலம் கண் நீர் அழுத்தத்தை குறைக்க முடியும். குறைந்த அழுத்த நிலையிலும் சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதும் வேதனையான விஷயம்.
எனவே இந்த வகை க்ளகோமாவிற்க்கான சிகிச்சையின் பின் விளைவுகளைக் குறித்து ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்ட பிறகே சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீர்மானம் எடுப்பதற்க்கு

நோயாளியின் முழுமையான பொதுவான மருத்துவக் குறிப்புகள் அவசியம்.
உதாரணமாக, குறைந்த ரத்த அழுத்த நோய் (Low Blood Pressure) உள்ளவர்களுக்கு, அவர்களுக்கான பக்க விளைவுகளைக் குறித்து சரியாக தீர்மானித்தபிறகே மேற்குறித்த குறைந்த அழுத்த மற்றும் சாதாரண அழுத்த க்ளகோமா இரண்டிற்குமான சிகிச்சைகள் வழங்கப்படலாம்.

க்ளகோமா நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
1. கண்ணின் உள் அழுத்தம்
2. பார்வை நரம்பின் அமைப்பு மற்றும் நிறம்
3. முழுமையான பார்வைக்களம் (The Complete Field of Vision)
4. கார்னியா எனப்படும் விழி வெண் படலமும், கருவிழியும் சந்திக்கும் கோணம் (Angle) - என்ற நான்கு காரணிகளைக் கருத்தில் கொண்டு பரிசோதனைகள் மூலம் க்ளகோமா கண்டறியப்படுகிறது.

1. கண்ணின் உள் அழுத்தம் டோனோமீட்டர் எனும் கருவியினால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக கண்ணின் உள் அழுத்தம் 9 முதல் 21மி.மீ.Hg இருக்கும். இங்கு ‘மி.மீ.Hg' என்பது பாதரசத்தில் மில்லி மீட்டர் எனப்படும். இது கண் உள் அழுத்தத்தை குறிக்கும் அளவீடாகும்.
2. ஆப்தால்மாஸ்கோப்பி (Ophthalmoscopy) பரிசோதனை எனப்படுவது கண்ணின் உட்புறத்தை குறிப்பாக பார்வை நரம்பினை பரிசோதனை செய்வதாகும்.
3. பெரிமெட்ரி (Perimetry) எனப்படும் பிரத்யேக சோதனை கண்ணின் பார்வை களத்தை (Field of Vision) வரைபடமாக தயாரித்து அளிக்கிறது. க்ளகோமா முதலில் பார்வை களத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
4. கோனியோஸ்கோப்பி (Gonioscopy) எனப்படும் பிரத்யேக சோதனை கார்னியாவும் கருவிழியும் சந்திக்கும் கோணம் திறந்துள்ளதா அல்லது மூடியுள்ளதா என அறிய உதவுகிறது. இது மருத்துவர்கள் நோயாளியை பாதித்திருப்பது திறந்த கோண க்ளகோமாவா? அல்லது வளைந்த கோண க்ளகோமாவா? என முடிவு செய்ய உதவுகிறது.
க்ளகோமாவிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
நோயின் தன்மை, தீவிரம் ஆகியவற்றைப் பொருத்தே மருத்துவர்கள் சிகிச்சையளிக்கிறார்கள்.
1. மருந்தின் மூலமாக கண்ணில் அக்யூவியஸ் திரவம் வெளியேறுவதை அதிகரிக்கவோ அல்லது திரவம் சுரப்பதை குறைக்கவோ முடியும்.
2. சில வகை க்ளகோமாவில் லேசர் சிகிச்சை முறையில் கண் அழுத்தம் குறைக்கப்படுகிறது. க்ளகோமாவைப் பொருத்தமட்டில் கண் அழுத்தம் மட்டுமே குறைக்கப்பட்டு மேலும் தீவிரமடைவதைத் தடுக்க முடியுமே தவிர ஏற்கெனவே உள்ள பார்வைக் குறைபாட்டைக் குணப்படுத்த சிகிச்சை ஏதும் இல்லை.
ஆபரேஷன் எத்தகைய சூழ்நிலையில் தேவைப்படுகிறது?
லேசர் சிகிச்சை அல்லது ஆபரேஷன் முதனிலை சிகிச்சை முறையாக, தீவிர மற்றும் பரம்பரையான க்ளகோமாவிற்கு அளிக்கப்படுகிறது. தொடர்நிலை க்ளகோமா நோயாளிகளுக்கு அதிகபட்ச மருந்துகள் அளித்தும் கண் உள் அழுத்தம் கட்டுப்படவில்லை என்றாலும், நோயாளிகள் மருந்தின் மூலமாக கட்டுப்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலும் ஆபரேஷன் முறை கையாளப்படுகிறது.

ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது?
1. கண்ணிலிருந்து அக்யூவியஸ் திரவம் முறையாக வெளியேறுவதற்காக ஒரு புதிய வழியை ஏற்படுத்துவதே ஆபரேஷன் ஆகும்.
2. நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப்பொருத்து மருத்துவர் இந்த ஆபரேஷனை எப்போது வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்.
3. டாக்டர் வழக்கமாக சொட்டு மருந்து சிகிச்சை மற்றும் லேசர் சிகிச்சைகள் பலனிக்காத நிலையிலேயே ஆபரேஷனுக்கு பரிந்துரைக்கிறார்.
4. ஆபரேஷன் பொதுவாக கண் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரிலேயே செய்யப்படுகிறது. ஆபரேஷனுக்கு முன் உங்களை அமைதியாக இருக்கச் செய்வதற்காக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
ஆபரேஷன் நடக்கும்போது கண் வலிக்காமல் இருப்பதற்காகவும் கண்ணைச் சுற்றி மரத்துபோவதற்க்காகவும் ஊசி மூலம் மருந்து கொடுக்கப்படுகிறது. அக்யூவியஸ் திரவம் வெளியேறாமல்

தடுக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து சிறிதளவு திசுவை நீக்கி ஒரு புதிய வழியை திரவம் சீராக வெளியேறுவதற்காக உருவாக்குகிறார்.
5. ஆபரேஷன் முடிந்த பின்னர் சில வாரங்களுக்கு நீங்கள் சொட்டு மருந்து போட வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்துவார். இது ஆபரேஷனுக்குப் பின்னர் கண்களில் வீக்கம் அல்லது

தொற்றுநோய்க் கிருமிகள் தாக்காதவண்ணம் தடுப்பதற்காக அறிவுறுத்தப்படுகிறது. இந்த மருந்துகள் நீங்கள் முதலில் போட்ட மருந்துகளாக இருக்காது, வேறு மருந்துகளாக இருக்கலாம்,

எனவே டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை உரிய நேரங்களில் போட வேண்டியது அவசியம்.
6. உங்களுக்கு லேசர் சிகிச்சை வழங்கப் பட்டிருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்கள் கழித்தே ஆபரேஷன் செய்யப்படலாம்.
7. பொதுவாக ஆபரேஷனுக்குப் பின்னர் 60 முதல் 80 சதவீதம் கண் உள் அழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
8. சில நோயாளிகளுக்கு அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் புதிய வழியில் சிரமமிருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு முறை ஆபரேஷன் தேவைப்படலாம்.
9. ஆபரேஷனில் பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு தோன்றும்பட்சத்தில் உடனடியாக உங்களுடைய மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

க்ளகோமாவினால் ஏற்கெனவே ஓரளவு பார்வை பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இழந்திருந்தால் என்ன செய்வது?

1. க்ளகோமாவை ஆரம்ப கட்ட நிலையில் அடையாளம் கண்டு பார்வையிழப்பை தடுப்பது நடைமுறையில் மிகவும் அரிதாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிலர் ஓரளவு பார்வையை இழந்த

நிலையிலேயே கண் மருத்துவமனையை நாடுகிறார்கள்.
2.இழந்த பார்வையை மீட்க முடியாமல் போனாலும் இருக்கின்ற பார்வையை காப்பாற்றிக் கொள்ளவே சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
3.இழந்த பார்வையோடு வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு மிகவும் கை கொடுப்பவை லோ விஷன் உபகரணங்கள் (Low Vision Aids) எனப்படும் வசதிகள். உங்கள் மருத்துவரிடம் லோ விஷன் ஆலோசனைகளைக் கேளுங்கள், லோ விஷன் கிளினிக்கிற்கு உங்களைப் பரிந்துரைக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.
4.கண்ணியலாளர்களும் (Optometrist) ஆப்டொமெட்ரி கல்வி நிறுவனங்களும் சில சமூக சேவை அமைப்புகளும் லோ விஷன் எய்டு பற்றிய சேவைகளை வழங்குகின்றன. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.


இந்நோயில் பார்வைக்குறை வரும் முன் நம் கண்களைக் காப்பதே சிறந்தது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்வதன் மூலமே க்ளகோமாவை வரும்முன் அறிந்து கண்களை காக்க முடியும் என்கிறார் சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத்.

கட்டுரையாளர்:
அ போ இருங்கோவேள்,
மருத்துவ சமூகவியலாளர்,
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.
இ-மெயில்: irungovel@gmail.com.

No comments:

Post a Comment