Tuesday 1 March 2016

கிமு கிபி - மதன்





நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் எல்லோரும் கேட்ட, “அடுத்து என்ன க்ரூப் எடுக்கப் போற?” என்ற கேள்விக்கு அன்று நான் அளித்த பதில். “எந்த க்ரூப்பா இருந்தாலும் வரலாறு இருக்கக் கூடாது.”  என்ன படிக்கப்போறோம் என்பதை விட என்ன படிக்கக்கூடாது என்பதில் மிகக் குறிப்பாக இருந்தேன். வரலாறு மேல் எனக்கு அவ்வளவு காதல். ஆனால் இன்று வரலாற்றுப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கிறேன். முதல் காரணம் பொன்னியின் செல்வன் என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்ததாக முக்கியக் காரணம் மதன்.



“பள்ளியிலும் கல்லூரியிலும் சத்தியமாக ‘வரலாறு’ எனக்குப் பிடித்த பாடம் அல்ல! பிற்பாடு, ஏராளமான ஆர்வத்துடன் வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தப்போது, என் கல்லூரிப் படிப்பு முடிந்து விகடனில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்!” என முன்னுரையில் மதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு எப்படி ஆர்வம் வந்தது எனத் தெரியவில்லை. ஆனால் நான் வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்க தூண்டுகோலாய் இருந்தது மதன் தான் என்பதில் சந்தேகமில்லை. அன்றே இந்தப் புத்தகங்களைப் படித்திருந்தால் வரலாற்றின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு வரலாற்றில் பிஎச்டி பட்டம் கூட வாங்கியிருப்பேன். அல்லது கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என ஏதேனும் ஒரு ஆராய்ச்சியாளர் ஆகியிருப்பேன். ஆனால் இன்று வரலாற்றுப் புத்தகங்கள் படிக்கவும் அதுக் குறித்து எழுதவும் மட்டுமே செய்கிறேன்.

கிமு கிபி எனும் தலைப்பு, மதன் அவர்களே குறிப்பிட்டதுப் போல உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை இந்த இரு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் அடங்கிவிடும். மூன்றாவதாக ஒன்று இல்லை. கிபி வரலாறு ஓரளவு நாம் அறிந்ததே! ஆனால் கிமு... கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள வரலாறு ஏதோ ஆயிரம் 2 ஆயிரம் வருடத்தைய வரலாறு இல்லை. அது சுமார் ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அகண்டவெளியில் சிதறிய வண்ணம் தூசியும் துகள்களுமாய் இருந்து பிறகு பல லட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு  ஒரு திடமான உருண்டையாக பூமி உருப்பெற்றக் காலத்தில் தொடங்குகிறது. மதனும் சளைத்தவர் அல்ல. அவரும் அதிலிருந்தே ஆரம்பிக்கிறார். பூமி எப்படி உருவானது? உயிர்கள் எப்படித் தோன்றின? டைனோசர் காலம், பிறகு மனித இனம் எப்படித் தோன்றியது என விலாவாரியாக விவரிக்கிறார்.

இன்றைய மாடர்ன் மனித இனம் தோன்றுவதற்கு முன் இருந்த நியாண்டர்தால் மனிதன் உள்ளிட்ட பல மனித இனங்கள் அவற்றின் அழிவு, ஆப்ரிக்கா காடுகளில் தோன்றிய மனித இனம் எப்படி இந்த பூமி உருண்டை முழுவதும் பரவினர் என மிக விஸ்தாரமான கிமு வரலாற்றை சற்றும் தொய்வில்லாமல் தருகிறார் மதன். அடுத்து பலவிதமான நாகரிகங்கள், போர்கள், கலாச்சாரங்கள், காவியங்கள் என அவர் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு அநியாயத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என தத்துவ ஞானிகளையும் விட்டு வைக்கவில்லை. பாடலிபுத்திரம் சந்திர குப்த மௌரியர் என பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது படித்தப் பெயர்களைப் படிக்கும்போது, அட! இத்தனை சுவையான வரலாற்றையா அப்பொழுது படித்தோம் என வியக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளியில் படிக்கும்போது விளங்காத பல வரலாற்று உண்மைகளை இந்த வயதில் நான் அறிந்துக்கொண்டேன். புது மில்லினியம் ஆரம்பிப்பதில் முடிக்கிறார். கிபி க்கு கடைசி அத்தியாயம் மட்டுமே.

என்னுடைய பரிந்துரை என்னவென்றால் வீட்டில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு முதலில் மதனின் ’பூமித்தாய்’ புத்தகம் வாங்கித் தரவும். அதில் பூமி பற்றி, சூரியமண்டலம் பற்றி என விலாவாரியாகவும் எளிமையாகவும் உள்ளது. அடுத்து ‘கிமு கிபி’ படிக்கட்டும். அதைத் தொடர்ந்து ‘வந்தார்கள் வென்றார்கள்’ எனப் படித்தால் வரலாறுப் பற்றி அவர்களுக்கு சந்தேகமில்லாமல் தெளிவாய் புரிந்துவிடும். அதனால் பள்ளிக்காலத்திலேயே வரலாற்றை புரிந்து ரசிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment