Sunday 28 February 2016

ஆலயபிரவேசம் - உச்சிப் பிள்ளையார் கோயில்

           

இந்தியா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது பல கோடி ஆண்டுகள் பழமையான இமாலய மலைத்தொடர். ஆனால் அதை விடவும் பழமையான ஒரு சிறு மலைக்குன்று அதுவும் நம் தமிழ்நாட்டில் இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? திருச்சிராப்பள்ளியின் மத்தியில் அமைந்திருக்கும் 83மீட்டர் உயரமுள்ள ஒரு சிறிய மலைக்குன்று உலகின் மிகப் பழமையான மலைகளில் ஒன்று. இது கிட்டதட்ட 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதனால் அதன் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகதானோ என்னவோ முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மலையுச்சியில் எழுந்தருளியிருக்கிறார்.  மலைக்கோட்டை என மக்களால் பிரபலமாக அழைக்கப்படும் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்தான் அந்த பெருமைக்குரியது.



தல வரலாறு: ராமாயணக் காலத்தில் ஸ்ரீ ராமர் ராவணனுடன் போரிட்டு தன் மனைவி சீதையை மீட்டு வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த போரின் போது ராவணனின் தம்பி விபீஷணன் தன் அண்ணனுக்கு எதிராக ராமருடன் இணைந்து போரிட்டார். அதற்கு பரிசாக ராமர் தான் வைத்து வணங்கி வரும் ஸ்ரீரங்கநாதர் திருவுருவச் சிலையை விபீஷணனுக்கு அன்பளிப்பாக அளித்தார். ராமருக்கு என்னத்தான் உதவி செய்திருந்தாலும் விபிஷணன் பிறப்பால் அசுர வம்சத்தை சேர்ந்தவன் என்பதால் அவனிடம் ரங்கநாதர் விக்கிரகம் இருப்பதையும் அதை அவர் இலங்கைக்கு எடுத்து செல்வதையும் தேவர்கள் விரும்பவில்லை. அதனால் விநாயகரின் உதவியை நாடினர்.

மகிழ்ச்சியுடன் ரங்கநாதர் சிலையை எடுத்து சென்றுக் கொண்டிருந்த விபீஷணர் அந்தி சாயும் நேரத்தில் காவிரி, கொள்ளிடக் கரையில் சென்றுக் கொண்டிருந்தார். அவருக்கு அது பூஜை செய்யும் நேரம். அவர் குளிக்க வேண்டும். ஆனால் ராமரோ சிலையைத் தரும்போது அச்சிலையை கீழே வைத்தால் மீண்டும் எடுக்க முடியாது என கூறியிருந்தார். என்ன செய்வது என யோசித்த விபீஷணர் சற்று தொலைவில் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டார். பிள்ளையார்தான் அந்த சிறுவனின் வடிவத்தில் வந்திருப்பது தெரியாமல் அந்த சிறுவனை அழைத்து தான் குளித்துவிட்டு வரும்வரை ரங்கநாதரின் சிலையை கீழே வைத்துவிடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிச்சென்றார். முதலில் மிக பதவிசாக சிலையை கையில் வைத்திருந்த சிறுவன் விபீஷணர் குளிக்க ஆரம்பித்ததும் சிலையை தரையில் வைத்துவிட்டு ஓட்டமெடுத்தான். அதைக் கண்டு ஆத்திரமுற்ற விபீஷணர் அச்சிறுவனை துரத்தி செல்கிறார். அவன் ஓடிச்சென்று ஒரு மலைக்குன்றின் மீதேறி நிற்கிறான். பின்னால் ஓடி வரும் விபீஷணர் சிறுவனின் தலையில் குட்டுகிறார். உடனே விநாயகர் விபீஷணருக்கு தரிசனம் தந்து ஆசிர்வதிக்கிறார். அந்த இடம்தான் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில். அச்சிறுவன் ரங்கநாதர் சிலையை தரையில் வைத்துவிட்டு ஓடிய இடம்தான் ஸ்ரீரங்கம் கோயில். விபீஷணர் தலையில் குட்டியதன் அடையாளமாக இப்பொழுதும் விநாயகர் தலையில் சிறுப்பள்ளம் இருப்பது ஆச்சர்யம்.

கோயில் அமைப்பு: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அதன் கட்டடக்கலைக்கு மிகவும் பிரசித்தமானது. இது முழுவதும் பாறையைக் குடைந்துக் கட்டப்பட்ட கோயில். அது மட்டுமின்றி இம்மலையை கிழக்கிலிருந்துப் பார்த்தால் யானை முகத்தான் விநாயகப் பெருமானை போலவும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப் போலவும், வடக்கிலிருந்துப் பார்க்கும் போது தோகை விரித்தாடும் மயில் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் முழங்காலிட்டு அமர்ந்த காளை (நந்தி) அல்லது யானைப் போலவும் பல வடிவங்களில் காட்சியளிப்பது நாம் வேறெங்கும் காண முடியாத சிறப்பு.

இக்கோயிலில் ஒன்றல்ல மூன்று கோயில்கள் உள்ளன. அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயிலும், மலையின் நடுவில் தாயுமானவர் கோயிலும், மலையின் உச்சியில் பிள்ளையார் கோயிலும் இருக்கிறது.

மாணிக்க விநாயகர் கோயில்: பொதுவாக வேறெந்த கோயிலாக இருந்தாலும் அதன் முகப்பில் பிள்ளையார் கோயில் இருக்கும். அது பிள்ளையார் பெற்ற வரம்.அந்த முறை பிள்ளையார் கோவிலிலேயும் இருக்கிறது.  மலையடிவாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் யாரும் மலையேற முடியாது.

பழங்காலத்தில் மலைக்கோயில் நுழைவாயிலில் சித்தி விநாயகர் எனும் பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர். மாணிக்கம் பிள்ளை எனும் பக்தர் ஒருவர் இக்கோயிலில் நித்ய பூஜைகள் நடத்த தேவையான உதவிகளை செய்ததோடு வழிப்பாடு தொடர்ந்து நடக்கவும் தன்னால் ஆனதை செய்தார். அவர் நினைவாக சித்தி விநாயகர் மாணிக்க விநாயகர் என்ற பெயருடன் அழைக்கப்படலானார்.

இங்கு ஒருநாளுக்கு இருமுறை அபிஷேகங்கள் நடைப்பெறுகிறது. அனைத்து சதுர்த்தி தினங்களிலும் திருவீதியுலா நடைப்பெறுகிறது.

தாயுமானவர் கோயில்: முன்னொரு காலத்தில் ரத்தினவதி என்றொரு பெண். அவளுக்கு பிரசவ நேரம் நெருங்கிவிட்டது. அவளது தாய் உதவிக்கு வருவதாகக் கூறியிருந்தார். ஆனால் வரும் வழியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவரால் வரமுடியவில்லை. அந்த பெண்ணுக்கோ பிரசவ வலி வந்துவிட்டது. ஆனால் துணைக்கு ஆளில்லை. அவள் நித்தம் வணங்கும் சிவப்பெருமானோ ஆண்மகன். அவர் நேரடியாக உதவிக்கு வந்தால் அவளுக்கு கூச்சம் ஏற்படும் என்றெண்ணிய சிவப்பெருமான் அவளது அன்னையின் உருவத்துடனேயே அவள் உதவிக்கு வந்தார். அவள் அருகிலேயே இருந்து அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவளுக்கு சுகப்பிரசவமாக உதவினார். மறுநாள் காலை ரத்தினவதியின் தாய் வந்து  தான் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதால் வரமுடியாமல் போனதைக் கூறியதும் அப்பெண்ணுக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது. அதுவரை தனக்கு உதவிக்கு வந்தது தனது தாயல்ல என்பதை சற்றும் நினைத்துக் கூடப் பார்த்திராதவள் அப்பொழுதுதான் வந்தது சிவப்பெருமாந்தான் என்பதை உணர்ந்தாள்.

தனது பக்தர்களை காக்க தாயாகவும் ஆகி சிவப்பெருமான் அருளியதால் இக்கோயிலில் ’தாயுமானவர்’ என்ற பெயருடன் எழுந்தருளியிருக்கிறார். அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற ஸ்தலம் இது. இங்கு மூலவர் தாயுமானவர் (செவ்வந்திநாதர்), தாயார் மட்டுவார் குழலம்மை. இக்கோயிலின் லிங்கம் சுயம்பு லிங்கம். இது தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் நான்காவது இடம்பெற்றுள்ளது. இக்கோயிலின் உள்ளேயே தாயாருக்கு, அன்னப்பூரனிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. அதுத் தவிர விநாயகர், முருகர், பைரவர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கே இரு நந்திகள் உண்டு கோயிலின் உள்ளே சின்ன நந்தியும் மலைக்கோட்டை வெளியே தெப்பக்குளத்தின் அருகே மிகப்பெரிய நந்தியும் இருக்கிறது. இது தஞ்சாவூரின் பிரசித்திப்பெற்ற மிகப்பெரிய நந்திக்கு அடுத்தப்படியானது. அதனால் அந்த தெருவிற்கே நந்தி கோயில் தெரு எனப் பெயர் வந்தது.

உச்சிப்பிள்ளையார் கோயில்: ‘கோபம் வந்தால் உச்சியில் ஏறி உட்கார்ந்து விடுவான்’ என வீட்டில் அதிகம் கோபப்படும் யாரைப்பற்றியாவது குறிப்படுவது வழக்கம். பொதுவாக பிள்ளையாரின் தம்பி முருகப்பெருமான் தான் கோபித்துக்கொண்டு மலையேறுவது பிரசித்தம். ஆனால் இங்கே அண்ணன் விநாயகர், விபீஷணருக்கு போக்குக் காட்டி இங்கே மலையுச்சியில் வந்து குடிக்கொண்டுள்ளார். 273 அடி உயர செங்குத்தான இந்த மலையின் உச்சியில் தமிழர்களின் கட்டடக்கலையை பறைச்சாற்றும் விதமாக மலைக்கு மகுடம் அணிவித்ததுப் போல கம்பீரமாக அமைந்துள்ளது விநாயகர் கோயில். இதை சென்றடைய 417 படிகள். ஏறுவது சற்று கடினம்தான். ஆனால் மேலே ஏறிச் சென்றால் விநாயகரை தரிசிப்பதோடு திருச்சி முழுவதையும் கண்டுக்களிக்க முடியும். அது மட்டுமின்றி திருச்சியில் எங்கிருந்துப் பார்த்தாலும் மலைக்கோயிலைக் காண முடியும். அதுவும் மாலைப்பொழுதுகளில் விளக்குகளின் அலங்காரத்தில் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்.

ஊர் பெயர்காரணம் மற்றும் வரலாறு: இது பல நூற்றாண்டுகள் பழமையான கோயில். கிபி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திரவர்ம பல்லவன் இக்கோயிலை கட்டினான். இங்கே அவனே சில கல்வெட்டுகள் அமைத்துள்ளான். அதில் அவன் அங்கிருந்த அமண்பள்ளிகளை இடித்துவிட்டு கோயில் கட்டியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளான். மலைக்கோயிலின் பின் பாகத்தில் இன்றும் 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணர்களின் அடையாளங்கள் சில இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு சமண முனிவரின் பெயர் ’சிரா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மகேந்திரவர்மன் பள்ளிகளை இடித்து கோயிலாகக் கட்டினாலும் அங்கு வாழ்ந்த முனிவர் ’சிரா’ வின் பெயர் மட்டும் ’சிராப்பள்ளி’யாக இன்றும் நீடிக்கிறது. (மூன்று தலை கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்) சிவனை வழிபட்டு தன் பாவத்தை போக்கிய தலம் என்பதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. )

திருச்சிராப்பள்ளியை பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மாறி மாறிக் கைப்பற்றி பல வருடங்கள் ஆண்டிருக்கின்றனர். பின்னர் சில வருடங்கள் மொகலாயர்களினிடம் இருந்த திருச்சியை விஜயநகரப் பேரரசு கைப்பற்றியது. கி.பி.1736 வரை விஜயநகர பேரரசின் பாதுகாவலர்களான நாயக்கர்கள் இந்த பகுதியை ஆண்டனர். இப்போது திருச்சியில் உள்ள தெப்பகுளம் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது. நாயக்கர்கள் ஆட்சியின் போது திருச்சி நல்ல முன்னேற்றம் அடைந்ததால் திருச்சியின் வரலாற்றில் நாயக்கர்களுக்கு தனியிடமுண்டு.
மலைக்கோட்டை: இந்த மலைக்கோயிலை ஏன் மலைக்கோட்டை என்கிறோம்? இந்த பல லட்சம் ஆண்டுகள் பழமையான மலையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் விஜயநகரப் பேரரசிற்கும் பின்னாளில் கர்நாடகப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கும் ராணுவ அரணாக விளங்கியது. அதனால்தான் இதுக் ’மலைக்கோட்டை’ என்றும் இதன் அடிவாரத்தில் உள்ள இன்று பரபரப்பான கடைத்தெருவாக இருக்கும் இடத்திற்கு ‘மெயின் காட் கேட்’ (Main guard gate) எனவும் பெயர் வந்தது.

உற்சவங்கள்: தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைக் கோயில் திறந்திருக்கும். இங்கே ஆறு கால பூஜைகளும் முறைப்படி நடக்கின்றன. மேலும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைப்பெறுகிறது. ஆடிப்பூரம் மற்றும் பங்குனியில் நடைப்பெறும் தெப்பத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்களாக கருதப்படுகிறது.

எப்படி செல்வது எங்கே தங்குவது?

திருச்சி தமிழ்நாட்டின் பெருநகரங்களில் 4வது பெரிய நகரமாகும். மேலும் இது தமிழ்நாட்டின் மையப்பகுதியில் இருப்பதால் பெரும்பாலும் அனைத்து ஊர்களில் இருந்தும் நேரடிப் பேருந்துகள் இருக்கின்றன. மேலும் ரயில் மூலமாகவோ விமானம் மூலமாகவோக் கூட திருச்சியை சுலபமாக சென்றடைய முடியும். திருச்சி மாநகரம் என்பதால் அங்கே ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கிறது.

திருச்சி உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க சென்றால் அருகிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ஐம்பூதத்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்பூகேஸ்வரர் ஆலயம், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், குணசீலம் ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் என ஏகப்பட்ட கோயில்கள் இருக்கிறது. திருச்சியிலிருந்து 55கிமி தொலைவில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயமும் உள்ளது. இத்தனைப் பெருமைகள் கொண்ட திருச்சிக்கு நாமும் சென்று இத்தனை கோயில்களையும் தரிசித்து வரலாமே!

No comments:

Post a Comment