Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 24

பாசுரம் 24



"அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று படைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாபலி சக்ரவர்த்தியிடம் இரந்து பெற்று அன்று இந்த உலகத்தையே அளந்த திருவடிகளை போற்றுகின்றோம், சீதையை மீட்க இலங்கைக்கு சென்று இராவணனை வென்ற உன் தோள் வலிமையை போற்றுகின்றோம், சகடாசுரனை உதைத்து அழித்த உன் புகழை போற்றுகின்றோம், கன்று வடிவில் வந்த அசுரனை எறிதடியாய் கொண்டு கபித்தாசுரன் என்னும் அசுரனின் மீதெறிந்து இருவரையும் அழித்தவனே உன் திருவடிகளை போற்றுகின்றோம், இந்திரனின் கோபத்திலிருந்து இடையர்களை காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை குடையாய் பிடித்தவனே உன் குணத்தைப் போற்றுகின்றோம், பகைவர்களையெல்லாம் வெல்லும் உன் கையில் உள்ள வேலை போற்றுகின்றோம். இவ்விதம் உன் புகழை என்றென்றும் பாடி உன்னிடம் அருள் பெற இன்று வந்துள்ள எங்களுக்கு அருள் புரிவாயாக!

விளக்கம்: 

கண்ணன் பாலகனாக இருந்தபோது செய்த வீரதீர சாகசங்களையும், வாமன அவதாரம் எடுத்தபோது, ராமாவதாரத்தின் போதும் செய்த செயல்களையும் போற்றி பாடுகிறாள் ஆண்டாள்.

மகாபலி இந்த உலகத்தை ஆண்ட போது தேவர்களுக்காக வாமன் அவதாரம் எடுத்து மூவடியால் உலகை அளந்தவனே உன் பாதங்களை போற்றுகிறோம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்தைப் போற்றுகிறோம். சக்கர வடிவம் எடுத்து சகடா சூரன் அழியும் படி காலால் உதைத்தவனே உன்னுடைய புகழை போற்றுகிறோம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment