Saturday 2 April 2016

ஆலய பிரவேசம் - ஒப்பிலியப்பன் கோயில்


’உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது வழக்கு. உப்பில்லா சாப்பாட்டை நம்மால் ஒரு கவளம் கூட எடுத்து வாயில் வைக்க முடியாது. ஆனால் மனதிற்கு பிடித்த பெண்ணை மணப்பதற்காக உப்பில்லாமல் சாப்பிட சம்மதித்துப் பல யுகங்களாக உப்பில்லாமலேயே சாப்பிட்டு வரும் திருவிண்ணகரப்பன் என்னும் ஒப்பிலியப்பன் எழுந்தருளியிருக்கும் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு பிரவேசித்து அவரின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக்கொள்வோம்.
ஒப்பிலியப்பன் கோயில் கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒரு திருத்தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி தாயார் அவதரித்தத் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்ற கோயில். ஸ்தல வரலாறு: ஒருமுறை பூமா தேவி மகாவிஷ்ணுவிடம் அவர் எப்பொழுதும் மகாலட்சுமியையே தன் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறார், தனக்கு அந்த பாக்கியம் கிடைக்காதா என்று ஏக்கத்துடன் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, பூமாதேவி விரைவில் பூலோகத்தில் ஒரு மகரிஷிக்கு மகளாக துளசி என்றப் பெயருடன் பிறந்து வளர்ந்து தன்னை வந்தடைவார் என்று கூறினார். அதே சமயம் பூலோகத்தில் மார்கண்டேயர் என்னும் முனிவர் மகாலட்சுமியே தன் மகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி சிறு குழந்தையாய் துளசிச் செடியின் அருகே கிடப்பதைக் கண்டார் என்றும் பதினாறு வயதுடைய மார்கண்டேய மகரிஷி. அக்குழந்தை மகாலட்சுமியின் அம்சம் என்பதை தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்து அதற்கு துளசி எனப் பெயரிட்டு எடுத்து வளர்க்கலானார். துளசிக்கு திருமண வயது வந்ததும் ஒருநாள் மகாவிஷ்ணு முதியவர் வேடம் தரித்து வந்து பெண் கேட்டார். அதற்கு மார்கண்டேயர், ‘ எனது மகள் சிறு குழந்தை. அவளுக்கு இன்னும் சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது’ என்று மறுத்தார். வந்தவர் திருமால் ஆயிற்றே! சும்மா விடுவாரா? ‘ அதனாலென்ன பரவாயில்லை, உப்பில்லாத சாப்பாடே சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என வற்புறுத்தினார். வந்திருப்பவர் திருமால்தான் என்பதையும் தன் ஞான திருஷ்ட்டியில் அறிந்த மார்கண்டேயர் திருமணத்திற்கு சம்மதித்தார். துளசிதேவி துளசி மாலையாக மாறி திருமாலின் மார்பில் நிரந்தர இடம்பிடித்தாள். உப்பில்லாமல் சாப்பிட சம்மதித்ததால் உப்பிலியப்பன் என்றும் ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் எப்பொழுதும் உப்பில்லாத நைவேத்தியம் படைக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வதே தவறு என்றும் நம்பப்படுகிறது.
1 2 3

No comments:

Post a Comment