என் நண்பர்கள் என் சொந்த ஊர் என்ன முதுமலைக் காடா எனக் கேட்டுக் கிண்டல் செய்வார்கள். அந்த நேரத்தில் விளையாட்டாக சண்டை போட்டாலும் சில சமயங்களில் அதுவும் சரிதானோ எனத் தோன்றும். ஏனெனில் ஊட்டி சென்றால் முதுமலை போகாமல் வருவதில்லை.
அது ஒரு அனுபவம். டிஸ்கவரி, அனிமல் பிளானட் போன்றச் சேனல்கள் பிரபலமடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்
மிருகங்களை அதன் இயல்புக் கெடாமல், அதன் இடங்களிலேயேப் போய் படமெடுப்பதால் மக்கள் அவற்றை விரும்பிப் பார்க்கின்றனர். நாமும் ஜாலியாக பாப்கார்ன் கொறித்தவாறு டிவியில் மிருகங்களை பார்த்து ரசிக்கிறோம். அதே உணர்ச்சிதான் முதுமலை செல்லும்போது. நேரிலேயே விலங்குகளைப் பார்ப்பதால் இன்னும் சற்று திரில் கலந்து இருக்கிறது.
இருப்பினும் இங்கு மிருக வகைகள் குறைவு. ஆப்ரிக்க காடுகளில் உள்ளதுப் போல் இல்லாவிட்டாலும் தென்னிந்தியக் காடுகளில் உள்ள விலங்குகளை இங்குக் காணலாம். யானை, புலி ஆகியவற்றுடன் சிறுத்தை, காட்டெருமை, கடமான், புள்ளி மான், குரைக்கும் மான், சுருள் மான், கரடி, செந்நாய், கழுதைப்புலி, நரி, மங்கூஸ், சிறுத்தைப்பூனை, கருங்குரங்கு, நீலகிரி லங்கூர், காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, உடும்பு, மலைப்பாம்பு, மயில், பறக்கும் அணில், மலபார் அணில், கழுகு எனவும், பறவைகளில் ஹார்ன்பில், மினிவெட், பிளை கேட்சர், மரங்கொத்திகள் என 230க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் உள்ளன.
இந்த அனைத்து மிருகங்களையும் பார்க்க ஆசைப்பட்டால் ஒரே முறையில் நிச்சயம் வாய்ப்பில்லை. வனவிலங்குகளைப் பார்க்கும் ஆர்வமுள்ளவர்கள் அவசரப்படக்கூடாது. முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சில சமயங்களில் ‘என்ன இருக்கு இங்க? பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாம்.’ என அலுத்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். முதுமலை புலிகள் காப்பகம் வண்டலூர் போல மிருகக்காட்சி சாலை கிடையாது. வனவிலங்குகளின் வசிப்பிடம். அதனால் அதை நாம் பார்ப்பது நம் அதிர்ஷ்டத்தைப் பொருத்ததே. இருப்பினும் ஆர்வம் உள்ளவர்கள் முடிகிறப் போதெல்லாம் முதுமலை சென்று வாருங்கள். ஒரு குறிப்பிட்ட சீசன் என ஒதுக்காமல் எல்லா சீசனிலும் சென்று முயற்சித்துப் பாருங்கள். குறிப்பாக ஜூன் ஜூலை மாதங்களில் நிறையப் பார்க்கலாம். முதுமலையில் தங்கும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. முடிந்தால் அங்கு தங்கியிருந்து பார்த்தால் அதிகாலை நேரங்களில் நிறைய மிருகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
முதுமலை சரணாலயத்தில் காட்டின் உள்ளே சென்றுப் பார்ப்பதற்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆனால் வனத்துறையினரின் வாகனத்தில் சென்று கண்டுகளிக்கலாம். அந்த சவாரிகள் அதிகாலை 6.30 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 3.30 மணியிலிருந்து 6 மணி வரையிலும் இருக்கிறது. அதிகாலை நேரங்களிலோ அல்லது அந்தி சாயும் நேரத்திலோ சென்றால் விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம். முதுமலைக்கு நாம் சென்றடைந்தவுடன் தெப்பக்காட்டில் நிறைய ஜீப் வாகனங்கள் உள்ளன. அவர்கள் தாங்கள் தனியாக ஒரு புது ரூட்டில் அழைத்து செல்வதாகக் கூறி அழைத்து செல்கிறார்கள். கட்டணமும் அதிகம்.
முதுமலை விலங்குகளுக்கு நீராதாரம் மாயார் எனும் ஆறு. அங்கு தண்ணீர் குடிக்க விலங்குகள் வர வாய்ப்புண்டு என்பதால் ஜீப் வாகன ஓட்டிகள் அந்த இடத்திற்கு ஜீப்பில் அழைத்து செல்கின்றனர். ஆனால் நீங்கள் சொந்த காரிலோ அல்லது தனியாக வாடகை கார் ஏற்பாடு செய்துக்கொண்டோ போயிருந்தால் இந்த ஜீப் சவாரி தேவையில்லை. சாதாரணமாக வாகனங்கள் செல்லக்கூடிய வழிதான் அது. அதனால் நாம் நம் வாகனத்திலேயே சென்று வரலாம். எந்த இடமாக இருந்தாலும் விலங்குகளைப் பார்ப்பது அதிர்ஷ்டத்தைப் பொருத்ததே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஊட்டியிலிருந்து முதுமலை செல்ல இருவழிகள் உள்ளன. ஒன்று கூடலூர் வழி, இன்னொன்று மசினக்குடி வழி. முதுமலையில் மாலை நேரத்து சவாரி சென்றால் போதும் என நினைக்கிறவர்கள் காலையில் கிளம்பி ஷூட்டிங் பள்ளத்தாக்கு, ஷூட்டிங் மேடு / 9th மைல், பைகாரா நீர்வீழ்ச்சி, பைகாரா படகு இல்லம் என ஒன்றிரண்டு இடங்களைப் பார்த்து முடித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலை சென்று சேரலாம். ஆனால் கூடலூர் தாண்டியதும் முதுமலை வரை சாலை படுமோசமாக உள்ளது.
நாங்கள் நாள் முழுக்க முதுமலையில் கழிக்க விரும்புவதால் மசினக்குடி வழியாக சென்றோம். இவ்வழியில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. உங்களிடம் சக்திவாய்ந்த வாகனமும், அனுபவமிக்க ஓட்டுனரும் இருந்தால் மட்டுமே இவ்வழியைத் தேர்ந்தெடுங்கள். இந்த இரண்டும் இருந்து உங்களுக்கும் பயணம் செய்வது பிடிக்கும் என்றால் மசினக்குடி வழி ஒரு ஜாலியான அனுபவமாக இருக்கும். சாலைகள் நன்றாக உள்ளன.
நாங்கள் 36 கொண்டை ஊசி வளைவுகளும் இறங்கி முடித்ததும் அங்கு நாங்கள் தங்கியிருந்த கிளாண்டன் மேனர் ஓட்டலின் கிளை ஒன்று உள்ளது. ஒருமுறை அங்கு தங்கிய அனுபவமும் உண்டு என்பதால் அங்கும் எங்களுக்கு நல்ல பரிச்சயம். அங்கு சென்று எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு காபி குடித்தோம். அங்கு விடுதியைத் தங்கியவாறு ஒரு ஓடை ஒன்று உள்ளது. பெயரெல்லாம் தெரியாது. ஆனால் மூங்கில் மரங்கள் சூழ நடுவே தடுக்கப் பார்க்கும் சிறு பாறைகளைத் தாண்டி சலசலத்து ஓடும் அழகிய ஓடை. ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு எக்கச்சக்க குரங்குகள் இருக்கும் என்பதால் ஓடையை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு வந்துவிடுவேன். ஆனால் இம்முறை என்னவோ ஒரு குரங்கு கூட காணவில்லை. அதனால் சற்று தைரியமாக ஓடைக்கு அருகில் சென்று வெகுநேரம் செலவிட்டோம். அது தனியார் இடமென்பதால் ஓட்டல் ஊழியர்கள் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. அங்கு தங்கியிருந்த பயணிகளும் வெளியே உலா சென்றுவிட்டதால் நாங்கள் மட்டுமே இருந்தோம்.
முதுமலைக்கு செல்லும் பிரதான சாலையை ஒட்டியே இந்த ஓட்டல் இருப்பதால் சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களின் ஓசை, மூங்கில் மரங்கள் காற்றில் அசையும் ஓசை, ஓடையின் சலசலப்பு, பெயர் தெரியா ஏன் முகம் கூடத் தெரியா பறவைகளின் கீச்கீச் சத்தம் மட்டுமே நிரம்பி சூழ்நிலையை ஏகாந்தமாக்கியிருந்தது. தண்ணீர் வேறு இருப்பதால் புதுவிதமானப் பறவைகளை வேறு பார்க்க முடிந்தது. எங்களுக்கு அங்கிருந்து கிளம்ப மனமே வரவில்லை. இருப்பினும் அங்கு மதிய உணவு ஆர்டர் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
அங்கிருந்து முதுமலை செல்லும் செல்லும் வழியில் மசினக்குடியைத் தாண்டியதும் இடதும் வலதுமாக இரு சாலைகள் பிரியும். இடப்பக்கம் திரும்பினால் சிங்காரா பவர் ஹவுஸ், வலப்பக்கம் திரும்பினால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மாயார் ஆறும் இருக்கிறது. நாம் முதுமலையிலேயேத் தங்குவதாக இருந்தால் அதிகாலை நேரங்களில் நம் வாகனத்தில் சிங்காரா முதல் மாயார் வரை இரண்டு மூன்று முறை சென்று வந்தால் நிச்சயம் ஏதேனும் விலங்குகளைக் கண்டுகளிக்கலாம். முதுமலை சவாரிக்கு சென்று நாங்கள் விலங்குகளைப் பார்த்ததை விட இதுப் போல சாலையின் நடுவே பார்த்ததே ஏராளம்.
மதிய வேளையில் விலங்குகள் ஏதும் இருக்காது எனத் தெரிந்தாலும் சும்மா மாயார் வரை ஒரு உலா சென்று வந்தோம். செல்லும் வழி அமைதியாக இயற்கை எழில் சூழவும் இருப்பதால் அதுவே ஒரு புத்துணர்ச்சி தரும் அல்லவா! திரும்ப வந்து மிக மிக சுவையாக வீட்டு சாப்பாட்டைப் போல எளிமையாக நல்ல மதிய உணவு உண்டுவிட்டு முதுமலை நோக்கிக் கிளம்பினோம். மதிய நேரம் என்பதால் என சவாரி செல்வதில் விருப்பமில்லை. குறைந்தது 5 மணிக்காவது போனால் தான் ஓரளவு விலங்குகளைப் பார்க்க முடியும் என்பதால் மெதுவாக சாலைகளில் மரத்தின் மறைவில் ஏதேனும் விலங்குகள் தென்படுகிறதா எனப் பார்த்தவண்ணம் நேராக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் சரணாலயம் வரை சென்றோம். அங்கும் வனத்துறையினர் அழைத்து செல்லும் சவாரிகள் இருக்கின்றன என்றாலும் எங்களுக்கு அந்த சவாரியில் செல்லும் திட்டம் இல்லை. அதனால் மறுபடியும் வேடிக்கை பார்த்தவாறே தெப்பக்காட்டிற்கு திரும்பினோம். அப்பொழுதும், சீக்கிரமாகவே வந்து விட்டதால் சற்று நேரம் காரிலேயே அமர்ந்திருக்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் முதுமலையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தையொட்டி ஒரு சற்றுப் பெரிய ஓடை ஒன்று உள்ளது. அதன் அருகில் மக்கள் எதையோ மிக ஆவலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் நாங்களும் போய் தலையை நீட்டினோம். அங்கு சில கும்கி யானைகளை யானைப்பாகன் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் விட்டுவைக்காமல் வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டத்தோடு நாங்களும் ஐக்கியமானோம்.
இம்முறை வனத்துறையினர் அழைத்து செல்லும் சவாரியில் ஒன்றிரண்டு மான்களைத் தவிர ஒன்றும் பார்க்க இயலவில்லை. இருப்பினும் பலதரப்பட்ட மக்களோடு சேர்ந்து செல்லும் இந்த உலா வித்தியாசமானது என்பதால் அதுவும் ஒரு நல்ல அனுபவமாகவே இருக்கும். ஆனால் சவாரி முடித்துத் திரும்பியதும் எங்கள் காரில் ஊட்டி திரும்புகையில் அந்தி சாயும் நேரமாதலால் சாலையில் எங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன. ஆம் சாலையின் குறுக்கே மானும் மயிலும் சேர்ந்தாடிக் கொண்டிருந்தன. அதுவும் மயிலின் நடனம் எங்கள் காருக்கு மிக அருகில் என்பதால் மயிலை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் செம குஷி ஆகிவிட்டோம்.
முதுமலையின் சிறப்பு அதுதான். ஒவ்வொரு முறையும் பொறுமையோடு சென்று வந்தால் இதுப்போல ஏதேனும் ஜாலி அனுபவங்கள் கிடைக்கும். போய் இறங்கியவுடனேயே புலியும் சிறுத்தையும் உங்களை வரவேற்க மாலையோடு காத்திருக்கும் என எதிர்ப்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்.
No comments:
Post a Comment