Tuesday 23 February 2016

ரொம்ப போரடிக்குதா உங்களுக்கு?



எப்பொழுதும் நேரமில்லை எனப் புலம்புவோர் ஒருபுறம் இருக்க, “ரொம்ப போரடிக்குது!” என அலுத்துக்கொள்வோர் இன்னொரு பக்கம். இப்பக்கத்தில் ஆண், பெண், சிறுவர்கள், முதியவர்கள் என எந்தவித பாரபட்சமுமில்லாமல் ஒரு பெரிய கூட்டமே உள்ளது. வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் பரபரப்பாக ஏதோ ஒன்று செய்துக் கொண்டிருக்க இவர்கள் மட்டும் எதற்கெடுத்தாலும் போரடிக்கிறது போரடிக்கிறது எனக் கூறி சுற்றி உள்ளவர்களை போரடிப்பர். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் உள்ள குழந்தைகளும், வயதானவர்களும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை இது. முன் போல் இல்லாமல் இப்பொழுது எத்தனையோ பொழுதுப்போக்கு அம்சங்கள் வந்துவிட்டது. இருப்பினும் அவர்களுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு. அதிருப்தி.



இதற்கு காரணம் மிக எளிமையானது. அவர்கள் தங்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக்கொண்டு அதிலிருந்து வெளியில் வர மறுக்கிறார்கள். சிலருக்கு எப்பொழுதும் பேச ஆளிருக்க வேண்டும். சற்று நேரம் யாராவது அமைதியாய் இருந்துவிட்டால் ஒரேடியாக போரடித்துவிடும். தனியாய் இருப்பது என்பது இவர்களுக்கு சாத்தியமே இல்லை. சிலருக்கு பொழுதைபோக்க அவசியம் டிவி வேண்டும். மின்சாரம் தடைப்பட்டாலோ அல்லது கேபிள் இணைப்பு பாதிக்கப்பட்டாலோ தவியாய்தவித்து விடுவர். இன்னும் சிலருக்கோ டிவி இருந்தாலும் சீரியல் மட்டுமே பிடிக்கும். யாராவது வந்து சேனலை மாற்றி சீரியல் பார்க்க முடியாமல் போய்விட்டால் அவர்களுக்கு தலைச்சுற்ற ஆரம்பித்து விடும். இதுப்போல எல்லோரும் தங்கள் ஓய்வு நேரத்தைக்

கழிக்க ஏதோ ஒரு செயலைப் பிடித்தமான செயலாக வைத்திருப்பார்கள். குழந்தைகளுக்கு விளையாட ஆள் வேண்டும். இல்லாவிட்டால் போர். டிவியில் கார்ட்டூன் பார்க்க முடியவில்லையா, அவர்கள் தவிக்கும் தவிப்பில் வீட்டில் உள்ளவர்கள் மறைக் கழன்றுவிடும். இப்படி தனக்குப் பிடித்தமான செயலை செய்ய முடியாமல் போகும்போது போரடிக்கிறது. இதுப்போல இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். நாம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது நிறைவேறாமல் போவதால் வரும் ஏமாற்றமே இந்த போரடிப்பது என்பது. இதிலிருந்து வெளியில் வர சற்று முயற்சியும் திறந்த மனமும் வேண்டும்.

ஆம் திறந்த மனம் வேண்டும். மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும். எனக்கு இதுதான் பிடிக்கும், அதுதான் பிடிக்கும். இல்லாவிட்டால் போர். என நம்மை சுருக்கிக் கொள்ளாமல் நமக்கு பிடித்த லிஸ்டை அதிகப்படுத்திக் கொண்டால் நம் பொழுது சுவையாய் இருக்கும். எனக்கு இந்தக் கட்டுரை எழுத இருக்கும் தகுதி என நான் நினைப்பது என்னவென்றால் என் வாழ்க்கை மாற்றங்கள் நிறைந்தது. கணவருக்கு பணி இடமாற்றம் அதிகம் என்பதால் பலவிதமான ஊர்களில் இருந்திருக்கிறோம். கிராமங்களிலிருந்து, மாநகரங்கள் வரை அனைத்து வகையான ஊர்களிலும் இருந்திருக்கிறோம். சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் இருந்துவிட்டு அடுத்ததாக நகர்புறத்திற்கு மாற்றலாகி செல்லும் வேளையில் அதில் உள்ள வித்தியாசம் நான் சொல்ல வேண்டியது இல்லை. அந்த ஊரின் வசதி வாய்ப்புகளே தலைகீழாக இருக்கும். என் அடிப்படை தேவை என வற்புறுத்துவது எல்லாப் பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒரு நல்ல சூப்பர் மார்க்கெட் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பெரிய மளிகை கடையாவது இருக்க வேண்டும். அடுத்து அவசரத்திற்கு சிகிச்சை எடுக்க ஒன்றிரண்டு நல்ல மருத்துவர்கள் வேண்டும். வீட்டிற்கு அருகே ஒரு சிறிய கடையாவது இருந்தால் கூடுதல் வசதி. இது மட்டுமே என்னுடைய எதிர்ப்பார்ப்பு. இதற்கு மேல் பொழுதைபோக்குவது என் திறமை.

எந்த விதமான சூழ்நிலையிலும் விரைவில் கச்சிதமாகப் பொருந்தி விடுவேன். அதனால் எனக்கு வார இறுதி நாட்களில் பொழுதுபோக பெரிய சினிமா தியேட்டர் இல்லை, பார்க், ஓட்டல் என வெளியில் சுற்ற எனக்கேற்றப்படி இல்லை எனப் புலம்புவதில்லை. அதற்காக வீட்டிலேயே அடைந்தும் கிடப்பதும் இல்லை. அருகில் கோயில் இருந்தால் போய் வரலாம். பக்கத்து ஊரில்தான் பெரிய கோயில் இருக்கிறது என்றால் சற்று நேரம் கிடைத்தால் அங்குப் போய் வரலாம். ஊர் இருக்கும் தொலைவிற்கேற்ப சில மணிநேரங்கள் பொழுது செலவாகிவிடும், அதேப் போல சினிமாவும் பக்கத்தில் இருக்கும் நகரத்தில் நல்ல தியேட்டர் இருக்கிறது என்றால் வேறு சில வேலைகளையும் சேர்த்துக்கொண்டு போய், அப்படியே சினிமா பார்த்துவிட்டு வந்துவிடுவது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது டிவியில் வரும் சினிமாக்கள். அதனால் எந்த சூழ்நிலையையும் மனதார ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதால் ’போர்’எனும் பிரச்சினையே இல்லை.


இது என் கதை. பொதுவாக வெளியேப் போய் பொழுதுபோக்குவது இல்லாமல் வீட்டில் இருக்கும்போது எப்படி பொழுதைக்கழிக்கலாம்? அதுவும் ரொம்ப சிம்பிள். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுப் போல உங்களது ஹாபி எனும் பொழுதுபோக்கு விஷயங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். என்னை நிறையப் பேர் கேட்டதுண்டு, “நீங்க வீட்டிலேயே இருக்கீங்க எப்படி பொழுது போகுது?” என. நான் என்னுடைய அன்றாடப் பணிகளைக் கூட பொழுதுபோக்கு அம்சம் போல பாவித்து செய்கிறேன். அதாவது சமையல் செய்வது இன்றியமையாதது. அதை தினமும் ஒரு சாம்பார், ரசம், பொரியல் என செய்துக்கொண்டிருந்தால் சமைப்பவருக்கும், சாப்பிடுபவர்களுக்கும் போரடிக்கும். அந்த அத்தியாவசிய வேலையையே ரசித்து செய்தால் அதுவே ஒரு பெரிய ஹாபி. புது ஐட்டம் ஏதாவது சமைக்கலாம் என உத்தேசித்தால் அதற்காக புத்தகத்தில் தேடுவோம். டிவி சமையல் நிகழ்ச்சிகளை தேடித் தேடிப் பார்ப்போம். இணையதளத்திலும் இப்பொழுது பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இப்படி தேடும் நேரம் நமக்கு சுலபமாகக் கழிந்துவிடும். தேடுவது கிடைக்காவிட்டாலும் வேறு ஏதேனும் சுவையான் ரெசிபி கிடைக்கும். அடுத்து அதற்கான பொருட்கள் சேகரிப்பது, கடைசியாக சமைப்பது என ஒரு புது வகை சமையல் செய்ய ஆரம்பித்தால் அதிலேயே நிறைய நேரம் கழித்துவிடலாம். அதேப் போல என் அன்றாட வீட்டு வேலைகள் அனைத்தையுமே மிக ரசித்து கலைநயத்துடன் செய்ய நினைப்பதால் வீட்டு வேலைகள் சிரமமாய் இருக்காது. அதே சமயம் இன்று ஏதேனும் ஒரு வேலையை செய்யமுடியாமல் போய்விட்டாலும் டென்ஷனாக வேண்டாம். வீடுன்னா அப்படித்தான் இருக்கும் என ஒரு சமாளிப்புதான் நமக்கு இருக்கிறதே!

இது அன்றாட வேலைகளுக்கு. ஓய்வு நேரத்தில் செய்ய ஒரு பெரிய லிஸ்டே வைத்துக்கொள்ளுங்கள். அது எதையும் நாள் தவறாமல் செய்ய வேண்டும் என்று இல்லை. அவ்வப்போது கிடைக்கும் நேரம், மனநிலை பொறுத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். டிவி பார்க்கலாம். சினிமா பார்க்கலாம். கரண்ட், கேபிள் இல்லையென்றால் யாருடனாவது அரட்டையடிக்கலாம். வீட்டில் யாரும் இல்லையென்றால் மொபைல் குடையலாம். மொபைலில் சார்ஜ் இல்லையென்றால்.... சரி... தூங்கலாம்... ஓகே. தூக்கம் வரவில்லையென்றால்? இதுப் போன்ற நேரத்திற்குத் தான் நமக்கு பல பொழுதுபோக்கு அம்சங்கள் தேவைப்படுகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லையென்றால் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சுவாரசியமானப் புத்தகம் ஒன்று கையிலிருந்தாலே நமக்கு போர் அடிக்குது எனும் பிரச்சினை இல்லை. கைவேலைகள் செய்யலாம். தோட்ட வேலை செய்யலாம். செடி நட்டு அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி, அது முளைவிட்டு வளர்வதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக ரசித்துப் பார்க்க ஆரம்பித்தால் அது தரும் உற்சாகமே தனி. அதுவே ஒரு வகையான தியானம்.  வீட்டை சுத்தபடுத்தி, அலங்கரிப்பது கூட ஒரு பொழுதுபோக்கு விஷயமாக நினைத்து செய்தால் நமக்கு பொழுதும் போகும். வீடும் சுத்தமாயிருக்கும். வீடு சுத்தபடுத்துதல் என்பது வேறு பொழுதுபோக்குவது என்பது வேறு என பிரித்துப் பார்க்க வேண்டாம்.

ஆண்கள் கூட இதையே பின்பற்றலாம். வீட்டிலிருக்கும் நேரத்தில் மனைவிக்கு உதவியாக வீட்டை சுத்தபடுத்துதல் போன்ற வேலைகளை செய்தால் மனைவியையும் மகிழ்வித்த மாதிரி இருக்கும், பொழுதும்போகும். ஆண், பெண், குழந்தைகள் வயதானவர்கள் என யாராக இருந்தாலும் செய்ய ஓரிரண்டு வேலைகளே இருக்கிறது என்றால் போரடிக்கத்தான் செய்யும். அதனால் நிறைய செயல்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எந்த வயதாக இருந்தாலும் ஏதேனும் புதிய விஷயங்களைக் கற்கலாம். புதிய மொழிகள், பாட்டு, ஸ்லோகம், கைவேலைகள் ஓவியம் என எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டாவது நம் நேரத்தை ஆரோக்கியமாக செலவிடலாம்

நாம் எந்த வேலை செய்தாலும் அதை ரசித்து முழு மனதோடு செய்ய கற்றுக்கொண்டால் நாம் ‘போர்’ எனும் அரக்கனை நெருங்க விடாமல் செய்யலாம். அட ஒன்றுமே இல்லை என்றால் கூட இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டால் அதுவே ஒரு பெரிய பொழுதுபோக்கு, நம் பொழுதுபோக சுவையான விஷயம் இருக்க வேண்டும் என்றில்லை. இருப்பவற்றை நாம் சுவையாக மாற்றிக்கொண்டு எந்த சூழ்நிலையையும் ஏற்கும் மனப்பக்குவத்துடன் இருந்தால் நாள் முழுவதும் உற்சாகம்தான்.

No comments:

Post a Comment