Thursday, 21 January 2016

நீலகிரி மாவட்டம்





பரந்து விரிந்த இந்த பூமியில் எத்தனை எத்தனையோ நாடுகள், நகரங்கள், கிராமங்கள்.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். தன் வாழ்நாளில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் எந்த ஒரு மனிதனாலும் பார்த்து விட முடியாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அனைவரும் அவர்களால் முடிந்த அளவிற்கு பல இடங்களைப் போய் பார்த்து வருவது நல்லது. சுற்றுலா, டூர், பிக்னிக், ஊர் சுற்றுதல் என எந்த வார்த்தையைப் பிரயோகப்படுத்தினாலும் அந்த செயல் நல்ல விஷயம்தான்.



சுற்றுலா என்றதும் சுவிசர்லாந்து, ஆஸ்திரேலியா அல்லது சிம்லா என பிரபல இடங்களுக்கு செல்வதுதான் என்றில்லை. வாரக் கடைசியில் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஊருக்கு, இடத்திற்கு சென்று வரலாம். அது மலை வாசஸ்தலமாக இருக்கலாம். கோயிலாக இருக்கலாம், கடற்கரை, உயிரியல் பூங்கா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நம் தினசரி வேலைகளிலிருந்து சற்று மாறுப்பட்டு இருக்கவேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும். அடுத்த வார அல்லது அடுத்த மாத வேலைகளை செய்வதற்கு உற்சாகம் பிறக்கும். இப்படி எத்தனையோ நன்மைகள் உண்டு. ஊர் சுற்றுவதால் நம் அறிவு விரிவடையும். தேவையில்லாத விஷயங்களில் மனம் ஈடுப்படாது.

எனக்கும் என் கணவருக்கும் ஊர் சுற்றுவது மிகவும் பிடித்த விஷயம். இங்கே நான் சுற்றுலா எனக் குறிப்பிடவில்லை. காரணம் நாங்கள் எங்கள் விடுமுறை, பட்ஜெட் இதெல்லாம் பொறுத்து இடங்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதில் பெரும்பாலும் ஒரு நாளிலிருந்து அதிகபட்சமாக நான்கு நாட்கள் வரையில் மட்டுமே இதுவரை திட்டமிட்டிருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்று வருவது போன்ற இடங்கள் அதிகம் இருக்கும். ஆனால் அனைத்து இடங்களுமே ஏதோ ஒரு வகையில் சிறப்பு வாய்ந்தது. அழகு என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. ”அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...” எனும் பாடல் வரிகளுக்கேற்ப உலகம் முழுவதும் அழகுக் கொட்டிக்கிடக்கிறது. இயற்கை அழகு ஒருபுறம் என்றால் சரித்திர சிறப்புமிக்க இடங்கள் இன்னொரு புறம் என நிறைய அதிசயங்கள் இருக்கிறது. நாங்கள் இதுதான் பிடிக்கும் அதுதான் பிடிக்கும் என எதையும் வரையறுத்துக்கொள்வதில்லை. எதுவாக இருந்தாலும் ஊர் சுற்ற ஒரு இடம் அவ்வளவுதான். இது எங்களின் மிகப் பிடித்தமான பொழுதுப்போக்கு. இனி என் கட்டுரைகளில் சிறிய இடங்களிலிருந்து பெரிய இடங்கள் வரை அவ்வப்போது நாங்கள் சென்று வரும் இடங்களைப் பற்றிக் குறிப்பிட உள்ளேன்.



கடந்த வாரம் பொங்கல் விடுமுறை. அதுவும் மூன்று நாட்கள் சேர்ந்த மாதிரி விடுமுறை வந்ததால் நாங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வந்தோம். சுருக்கமாக ஊட்டி என்றேக் குறிப்பிடுகிறேன். இந்த இடத்தைப் பற்றி முதலில் எழுதுவது எனக்கு சந்தோஷமும் கூட. ஏனெனில் இது நாங்கள் அடிக்கடி சென்று வரும் இடம். ஊட்டியை நாங்கள் மிகவும் விரும்புவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. எங்கள் ஊரிலிருந்து 6 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அதனால் மூன்று நான்கு நாட்கள் விடுமுறை இருந்தால் போதுமானது. தமிழ்நாட்டிலேயே வேறு இருப்பதால் மொழி, உணவு என எந்த பிரச்சினையும் இல்லை. இதுப் போன்ற பல காரணங்களால் ஊட்டி நாங்கள் வருடத்திற்கு ஓரிரு முறை விசிட் அடிக்கும் ஒரு ஸ்பாட்.

இந்த முறை பொங்கல் மற்றும் சனி ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை. நாங்கள் ஒருநாள் லீவு எடுத்துக்கொண்டோம். 4 நாட்கள் என்பது எங்களுக்கு தாராளம். ஊட்டி என்பதற்கும் நீலகிரி என்பதற்கும் என்ன வித்தியாசம்? நீலகிரி என்பது ஒரு மாவட்டம், ஊட்டி அதன் தலைநகரம், ஒரு ஊர். நீலகிரி ஒரு மாவட்டம் என்பதால் அங்கு சுற்றிப்பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளது. 10 நாட்கள் தங்கினால் கூட சுற்றிப்பார்க்க இடங்கள் உண்டு. அதனால் ஒவ்வொரு முறை நாங்கள் செல்லும் போதும் அதில் ஏதேனும் சில இடங்களைப் பார்ப்போம். மற்ற இடங்களை அடுத்த முறைக்கு தள்ளிப்போட்டுவிடுவோம். அதுப் போல ஒவ்வொரு இடங்களையும் பலமுறைப் பார்த்தாயிற்று.

என் உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வி, “பார்த்த இடத்தையே எத்தனை தடவைப் பார்க்கிறது? வெவ்வேறு இடங்களுக்கு போகக்கூடாதா?” என்கின்றனர். நாங்கள் நேரமும், பர்ஸும் இடம் கொடுப்பதற்கு இணங்க ஒவ்வொரு இடங்களாகப் பார்த்து வருகிறோம். ஆனாலும் மிகவும் பிடித்த இடம் நீலகிரி. சென்னை போன்ற ஊர்களில் இருப்பவர்கள் அடிக்கடி மெரினா பீச், எலியட்ஸ் பீச் என செல்வது ஏன்? கடற்கரையை எத்தனை தடவைதான் பார்ப்பது என அவர்கள் அலுத்துக்கொள்வார்களா? கடற்கரை என்பது பார்க்க வேண்டிய இடமல்ல. அனுபவிக்க வேண்டிய இடம். அதுப்போலத் தான் மலை வாசஸ்தலங்களும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு எத்தனை முறை சென்றாலும் அலுக்காது. இயற்கை எத்தனை முறை பார்த்தாலும் புதுசாகவே இருக்கும். ஏழைகளின் சுவிசர்லாந்து நீலகிரியும் அப்படியே. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக இருக்கும்.



எங்கள் அனுபவத்தில் நாங்கள் தெரிந்துக்கொண்டது, ஊட்டிக்கு சீசன் சமயத்தில் போகக் கூடாது. மார்ச் முதல் ஜூன் 15 தேதி வரைக்கும் சீசன். அந்த நேரத்தில் அங்கு சென்றால் கூட்டம் அதிகமிருக்கும். ஹோட்டல்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக அதிகம் இருக்கும். தொட்டபெட்டா போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தவே இடம் இருக்காது. உணவகங்களிலும் கூட்டம் அலைமோதும். இடமே கிடைக்காது. இடம் கிடைத்து சாப்பிட உட்காரும்போதே அந்த இடத்தைப் பிடிப்பதற்காக இன்னொருவர் நம் பின்னால் நின்றுக்கொண்டு நாம் சாப்பிடுவதை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார். காலை நேரங்களில் நல்ல வெயில் அடிக்கும். இரவில் குளுமையாக இருக்கும். அந்த குளுமைக்காகத் தானே கூட்டம்! சினிமாவில் வருவதைப் போன்ற பனிமூட்டம் கொஞ்சமும் இருக்காது. கூட்டம், விலைவாசி போன்றவற்றைப் பார்த்து ஊட்டியின் மேல் உள்ள ஆசையேப் போய்விடும். அதனால்தான் நிறையப் பேர் ஊட்டியை வசைப்பாடிவிட்டு மூணாறு தான் சிறந்தது என்கின்றனர். அதனால் ஊட்டியின் அழகை ரசிக்க நினைப்பவர்கள் சீசனில் போக வேண்டாம்.

செப்டம்பரில் இரண்டாம் சீசன். அப்பொழுது இந்தளவிற்கு மோசமாக இருக்காது. இருப்பினும் ஹோட்டல் கட்டணம் போன்றவற்றை சற்று கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஹோட்டல்கள் அப்பொழுதும் இருமடங்கு வசூலிக்கின்றனர். நாங்கள் எப்பொழுதும் ஜூன் மாத இறுதியில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை போன்ற சமயத்தில் மட்டுமே செல்வது வழக்கம். ஊட்டியின் அழகை வெகுவாக ரசிக்கலாம். ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை இருக்கும் என்பதால் அப்பொழுதும் செல்வதில்லை.



ஊட்டிக்கு நீங்கள் சொந்த காரிலோ அல்லது வாடகை காரிலோ சென்றால் சரி. இல்லாவிட்டால், நீங்கள் தங்கும் விடுதியிலேயே உணவகமும் உள்ளதா எனப் பார்த்து தங்குவது நல்லது. ஏனெனில் நீலகிரி மாவட்டம் முழுவதுமே மலை வாசஸ்தலம் என்பதால் சாலைகள் சமநிலையில் இருக்காது. ஒவ்வொரு இடமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அந்த இடங்களில் சும்மா ஏறி ஏறி இறங்குவதென்றால் சற்று வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கு அலுப்பாக இருக்கும். காபி, டீ சாப்பிடக் கூட சற்று தூரம் செல்ல வேண்டும் என்றால் ஊட்டியின் மீதே வெறுப்பாகிவிடும்.

நீலகிரியில் தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ஷூட்டிங் ஸ்பாட், பைகாரா, பைகாரா படகு இல்லம் என பல பிரபலமான இடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும். ஹோட்டலில் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் செல்லும் போது இந்த இடங்களுக்கும், இன்னும் சற்று அதிக நாட்கள் தங்குவதாக இருந்தால், டால்பின் நோஸ், லேம்ப்ஸ் ராக், முதுமலை போன்ற இன்னும் சில பிரபல இடங்களுக்கும் அழைத்து செல்கிறார்கள். ஆனால் நீலகிரி என்பது அதுமட்டுமே அல்ல. நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் செல்வதாக இருந்தால் இன்னும் நிறைய இடங்களுக்கு சென்று பார்க்கலாம். சில இடங்களில் அனுமதிப் பெற வேண்டி இருக்கும். விசேஷக் காரணங்கள் ஏதாவது இருந்தாலொழிய சுலபமாக அனுமதிக் கிடைத்துவிடும்.



அது மட்டுமின்றி நீலகிரி ஒரு மாவட்டம் என்பதால் அதில் எக்கச்சக்கமான கிராமங்கள் இருக்கிறது. அங்கே குறிப்பிடும்படி பார்க்க இடங்கள் என எதுவும் இருக்காது. ஆனால் அதற்கு போகும் வழி எழில் கொஞ்சும். இயற்கையின் காதலர்களுக்கு அதுவே ஒரு தனி அனுபவமாக இருக்கும். நாங்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நீலகிரி சென்று வருகிறோம். பிரபல சுற்றுலா இடங்கள் அனைத்துமே பல தடவைப் பார்த்தாகி விட்டது. ஆனாலும் ஒவ்வொரு முறை போகும் போதும் ஏதேனும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். நீலகிரி ஒரு இயற்கையின் பொக்கிஷம். அங்கு இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து செல்ல ஆரம்பித்தால் உள்ளூர்வாசிகள் தவிர அங்கு சுற்றுலா கூட்டம் எதுவும் இருக்காது. அதனால் மிக ரம்மியமான அனுபவம் கிடைக்கும். எங்களின் நீலகிரி பயண அனுபவங்களை அடுத்தக் கட்டுரையில் எழுதுகிறேன்.

-எல்லோரா விஜயா

No comments:

Post a Comment