Friday 12 June 2020

உப்பு வேலி - ராய் மாக்ஸம் தமிழாக்கம்- சிறில் அலெக்ஸ்



நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதுதான் புதிய தலைமுறையில் வெளியான புகழ்பெற்ற ‘கொஞ்சம் சோறு;கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் கரு. அதை எழுதிய முகில் எழுதிய ‘உணவு சரித்திரம்’ படித்தபோதுதான் ‘உப்புவேலி’ வெளியானது. ஏற்கெனவே உப்பின் வரலாற்றை சுருக்கமாக படித்திருந்த எனக்கு இப்புத்தகம் வாங்கி படிக்கவேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆனால் ஏனோ எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. அதை இப்பொழுது ஒருவழியாக படித்துவிட்டேன்.

நான் படிக்க ஆசைப்பட்டது நியாயம்தான் என மகிழ்ந்தேன். இது Roy Moxham ஆங்கிலத்தில் எழுதிய ‘The Great hedge of India’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.

19ம் நூற்றாண்டில் இந்தியாவில் சீனப் பெருஞ்சுவர் போல நீ...ளமாய் ஒரு வேலி இருந்திருக்கிறது. இந்தியாவிற்கு குறுக்கே ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்த மாதிரி. அது இயற்கையான முள் மரங்களை மிக நெருக்கமாய் வளரவிட்டு அதையே சுங்கச்சாவடியாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். எதற்கு என்றால் அது நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு கடத்தலை கட்டுபடுத்த. அதை ஏன் கடத்த வேண்டும்? அதற்கு ஆங்கிலேயர்கள் விதித்த கொடூரமான உப்பு வரியே காரணம்.

இதை நமக்கு விளக்க மொகலாயர்கள் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர்கள் ஆட்சி துவங்கிய காலத்திலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறார் ராய் மாக்ஸம். ராபர்ட் க்ளைவ் போன்றவர்கள் அடித்த கொள்ளையெல்லாம் அதில் அடக்கம். ருசி கண்ட பூனை போல உப்பின் மீது வரி போட்டு அது ஈட்டி தந்த வருமானத்தின் சுவையை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அதை இன்னும் எப்படியெல்லாம் மெருகேற்றினர் என விவரிக்கிறார்.

நம் பாடப்புத்தகத்தில் கூட இல்லாத நாம் எங்குமே கேள்விப்பட்டிராத இந்த உப்புவேலி பற்றி அவர் எப்படி கேள்விப்பட்டார், அதற்காக எப்படியெல்லாம் பாடுபட்டுத் தகவல் சேகரித்தார், என்பதையும் சுவாரசியமாக விவரிக்கிறார். பின்னர் அதன் மிச்சச்சொச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என உத்தரபிரதேச கிராமங்களில் ஒரு வெளிநாட்டு ஆராய்ச்சியாளராக அவர் தேடி அலைந்ததை விவரிக்கும்போது ஒரு நல்ல பயணக்கட்டுரை படிப்பது போல் இருக்கிறது.

இந்த வேலியை எப்படி பராமரித்தனர், அதற்கு எவ்வளவு செலவு செய்தனர் என்பதில் தொடங்கி அரசின் வருமானம், மக்களின் சுமை எல்லாம் விளக்குகிறார்.

இன்று கூகுளில் போய் தேடினால் உப்பு உடல்நலத்திற்கு கேடு அனைவரும் உப்பை குறைக்கவேண்டும் எனத் தகவலே மிகுந்துள்ளது. அதனால் உப்பின் மீது வரி விதித்து ஆங்கிலேயர் இந்தியர்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார் என சில நண்பர்களின் கிண்டலையும் குறிப்பிட்டு, உப்பு நம் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு அத்தியாவசியமானது; உப்பில்லாமல் உண்டால் என்னென்ன கேடுகள் விளையும் என மிக விரிவாக ஆனால் எளிமையாக விளக்கியுள்ளார்.

மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய தகவல்களும் உண்டு. அதோடு நில்லாமல் சுதந்திர இந்தியாவில் உப்பைக்கொண்டு செய்த அரசியல் என எல்லாம் சொல்லி கிட்டதட்ட 2000 வது ஆண்டு வரையான உப்பின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறார். நாம் எடக்குமடக்காக கேட்கும் கேள்விகள் கேலி கிண்டல்கள் எல்லாவற்றிற்கும் அதில் பதில் இருக்கிறது.

இன்று எதற்கெடுத்தாலும் ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் இந்தியா முன்னேறியது, இப்பொழுது மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வரவேண்டும் என்றெல்லாம் முன்பின் யோசிக்காமல் பேசுபவர்கள் இப்புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.

நாம் தினசரி சேர்த்துக்கொள்ளும் உப்பிற்கு இவ்வளவு பெரிய துயர வரலாறு இருக்கிறதா என பிரமிக்க வைக்கிறது இப்புத்தகம்.

கற்பனையாக எழுதிய நாவல்கள் இல்லாமல் சுவாரசியமாக ஏதேனும் கட்டுரைகள் படிக்க விரும்புபவர்கள் உப்புவேலி படிக்கலாம். மிக அருமையான புத்தகம்.