Tuesday 19 January 2016

ஆப்பிள் சாலட்



ஆப்பிள் பழம் உடலுக்கு மிகவும் நல்லதாம். தினமும் சாப்பிட்டால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியம் இல்லையாம். இது நான் சிறு வயது முதலேக் கேட்டு வரும் சொல். என் சிறு வயதில் என் அம்மா இதைத்தான் சொல்லி என்னை ஆப்பிள் சாப்பிட வைக்க முயற்சிப்பார்கள். ஆனால் எனக்கென்னவோ ஆப்பிள் பழங்கள் மீது ஈர்ப்பு இல்லை.



சப்பென யாருக்கு வேணும் என எப்பொழுதும் ஓரங்கட்டிவிடுவேன். ஆப்பிள் மட்டுமல்ல. பலவிதமான காய்கறிகளும் பழங்களும் எனக்கு பிடிக்காத லிஸ்டில் இருக்கும். என் திருமணம் முடிந்து என் குடும்பம் என் பொறுப்பு என வந்தவுடன் அனைத்து காய்களுக்கும் பழங்களுக்கும் பலன்கள் தெரியவந்தது.

பலன் இருக்கு என்றால் எனக்கு பிடிக்க வேண்டும் என சட்டமா என்ன? அப்பொழுதும் ஆப்பிள் பாவம். என் விருப்ப லிஸ்டில் சேரவே இல்லை. ஆப்பிள் பிடிக்காததற்கு எனக்கு இன்னொரு காரணமும் உண்டு. மற்றப் பழங்களை நான் சமையலுக்கு காய்கறிகள் நறுக்கும்போதே நறுக்கி வைத்துவிடுவென். ஆனால் ஆப்பிளை அப்படி நறுக்க முடியாது. உடனே சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால் கறுத்து விடும். பழங்கள் சாப்பிடும் நேரத்தில் நான் எல்லா வேலைகளும் முடித்துவிட்டு அலுப்பாக உட்கார்ந்திருப்பேன். அப்பொழுது மறுபடியும் போய் ஆப்பிள் நறுக்க வேண்டுமா? அப்படி என்ன பெரிய ஆப்பிள்? எனக்கு வேண்டாம். என அப்பொழுதும் ஆப்பிளுக்கு வாழ்வளிக்க மறுத்து விடுவேன்.

வீட்டிற்க்கு உறவினர்கள், நண்பர்கள் யாராவது ஆப்பிள் பழம் வாங்கி வந்தால் என் முகமே மாறிவிடும். இத்தனை பழங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யட்டும் என அவர்களுக்கே வைத்துக் கொடுத்து அனுப்பிய சம்பவங்களும் உண்டு.

அப்பொழுது ஒருநாள் என் நண்பர் ஒருவர் இந்த ஆப்பிள் சாலட் பற்றிக் குறிப்பிட்டார். ஆப்பிள் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும். முயற்சித்துப் பாருங்கள் என்றார். இது சாலட் என்பதால் மற்ற பொருட்களும் கலப்பதால் நான் சமைக்கும்போதே இதையும் தயாரிப்பது எனக்கு வசதியாக இருந்தது. சப்பென இருக்கும் ஆப்பிளில் எலுமிச்சைப் பிழிந்து மிளகுத் தூள் வேறு சேர்ப்பது தனி சுவையைக் கொடுத்தது.

சாலையோர மசாலா பொரிக்கு சுவையூட்டுவதே தக்காளி, வெங்காயம் மற்றும் எலுமிச்சைப் பழ கூட்டுக் கலவைதான். அதேப் பொருட்கள் இதிலும் இருப்பதால் எனக்கு மசாலா பொரி சாப்பிடும் பிரமையே ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல், அதற்கு முன் சின்ன வெங்காயத்தை விட பெரிய வெங்காயம் மட்டுமே விரும்பி சாப்பிட்டேன். அது ஏனோ தெரியவில்லை, சாம்பாரில் முழு சின்ன வெங்காயம் வந்தால் அதை சாப்பிடவே எனக்குப் பிடிக்காது. ஒதுக்கி வைத்துவிடுவேன். ஆனால் இந்த சாலட்டில் சின்ன வெங்காயத்தையும் பொடிபொடியாக நறுக்கி சேர்ப்பதால் அதன் சுவையும் எனக்கு பழகிவிட்டது.

என் நண்பர் எனக்கு கூறியதுப் போல ஆப்பிள் பிடிக்காதவர்களுக்கும் இந்த சாலட் பிடிக்கும். டயட்டில் இருப்பவர்களுக்கும் இது உகந்தது.



ஆப்பிள் சாலட் (1-2 நபருக்கு) 

தேவையானப் பொருட்கள்:


ஆப்பிள் - 1

பெரிய தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 5 அல்லது 6

எலுமிச்சை - 1/2 மூடி

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: 


1. ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும்.

4. மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.

5. தக்காளி, எலுமிச்சைப் போன்றவற்றில் விட்டமின் சி யும், சின்ன வெங்காயத்தில் விட்டமின் ஈ யும் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளின் குணநலன்கள் பற்றி

அனைவருக்குமே தெரியும். அதனால் டயட் இருப்பவர்கள், இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் இது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. 

No comments:

Post a Comment