திருமழிசை ஜகன்னாத பெருமாள் கோயில் |
’மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெரிசு’ என ஒரு பழமொழி உண்டு. அதாவது உருவம் சிறிதானாலும் புகழ் பெரியது என்று அர்த்தம். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ சென்னையை அடுத்து இருக்கும் சிறிய கிராமமான திருமழிசைக்கு மிகவும் பொருந்தும். அதன் பெருமைகள் அப்படி வானளாவி நிற்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் 4 மாபெரும் நகரங்களில் ஒன்றான சென்னையிலிருந்து 25 கிமி தொலைவில் உள்ளது இந்த சிறிய கிராமமான திருமழிசை. ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலமாதலால் அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
திருமழிசைக்கு அப்படி என்ன பெருமை? திருமழிசையில் ஜெகன்னாத பெருமாள் கோயில், வீற்றிருந்த பெருமாள் கோயில் என இரு பெருமாள் கோயில்களும் ஒத்தாண்டீஸ்வரர் கோயில் என சிவாலயமும் இருக்கிறது
ஜெகன்னாத பெருமாள் கோயில்:
உலகில் உள்ள 3 முக்கியமான ஜெகன்னாதப் பெருமாள் கோயில்களில் ஒன்று. வடக்கே ஒரிசாவில் உள்ள பூரி, தெற்கே ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி இரண்டிற்கும் நடுவே திருமழிசை இருப்பதால் இது ‘மத்திய ஜெகன்னாதம்’, ‘பூர்ண ஜெகன்னாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து புண்ணியத் தலங்களின் மகிமையையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் இது ‘மகிசாசர க்ஷேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்தல புராணம்: பிருகு, பார்கவா முனிவர்கள் உள்ளிட்ட சப்த ரிஷிகளும் ஒரிசாவில் உள்ள பூரி தலத்தில் தவமிருந்தனர். எத்தனை கடுமையாக தவமிருந்தும் அவருக்கு மகாவிஷ்ணு காட்சியளிக்கவில்லை. அதனால் மனமொடிந்த முனிவர்கள் தங்களுக்கு மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் மகாலட்சுமி சமேதராக தரிசிக்க வேண்டி தவமிருக்க ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்து தருமாறு பிரம்மனிடம் கோரினர். அவர் உடனே தராசின் ஒரு பக்கம் திருமழிசை தலத்தையும், மற்றொரு தட்டில் உலகின் மற்ற புண்ணிய ஸ்தலங்களையும் வைத்தார். அப்பொழுது திருமழிசை இருந்த தட்டு மிகவும் கீழிறங்கி இருந்தது. அதனால் அதன் பெருமையை உணர்ந்த முனிவர்கள் திருமழிசையிலேயே கடும் தவம் செய்ய தொடங்கினர். அதில் மனமகிழ்ச்சியடைந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் ஜெகன்னாதப் பெருமாளாக திருமங்கைவல்லித் தாயாருடன் காட்சியளித்தார் என்பது புராணம். பூரியில் நின்றவாரும், திருப்புல்லாணியில் சயனக் கோலத்திலும் காட்சித் தரும் பெருமாள் இங்கே வீற்றிருந்த நிலையில் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
திருமழிசையாழ்வார்: சைவ, வைஷ்ணவ மதங்கள் இரண்டிலும் ஈடுப்பாட்டோடு இருந்த திருமழிசையாழ்வார் நான்காம் ஆழ்வாராவார். ஒருமுறை சிவன் பார்வதி இவரோடு வார்த்தை விளையாட்டில் இறங்க அது கடைசியில் வாக்குவாதத்தில் முடிந்தது. இருப்பினும் இவரது சொல்வன்மையைக் கண்ட சிவப்பெருமான் இவருக்கு ‘ பக்திசாரார்’ எனப் பெயரிட்டார். திருமழிசையாழ்வார் அவதரித்த தலமானதால் இங்கே அவருக்கு ஒரு தனி சன்னதி உண்டு.
வரலாற்றுப் பின்னனி: இக்கோயில் யாரால் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் சில கல்வெட்டுகளால் இதன் தொன்மை தெரிகிறது. 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வந்ததாக சில கல்வெட்டுகள் கூறுகின்றன. திருமழிசையாழ்வார் 8ம் நூற்றாண்டை சேர்ந்தவராதலால் இக்கோயில் இந்த இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என தெரிகிறது. இக்கோயில் சோழ கட்டடக்கலையிலேயே அமைந்திருந்தாலும் பல்லவர்களின் கலைநயத்துடன் ஒரு மண்டபமும் இருக்கிறது.
வீற்றிருந்த பெருமாள் கோயில்:
ஜெகன்னாத பெருமாள் கோயிலிலிருந்து 10 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கே பெருமாள் வீற்றிருந்த பெருமாளாக அஷ்டலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். தன் வலப்பக்கம் ஸ்ரீதேவியும், இடப்பக்கம் பூதேவியும் மார்பில் இரு லட்சுமி மற்றும் கிரீடத்தில் 4 லட்சுமியுடனும் அருள்பாலிக்கிறார். இப்படி பெருமாள் அஷ்டலட்சுமியுடனும் எழுந்தருளியிருக்கும் தலம் வேறெங்கும் இல்லை.
வினய ஆஞ்சனேயர்: இக்கோயிலில் தனி சன்னதியில் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் வராகமுகத்தான் என அழைக்கப்படுகிறார். அவரை வழிப்பட்டால் வேண்டியது உடனே நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தங்களது விருப்பம் நிறைவேறிய பக்தர்கள் பலவிதமாக காணிக்கை செலுத்துவதை தினமும் பார்க்கலாம். இச்சன்னதியின் அடியில் ஆஞ்சநேய பக்தரான சித்தர் ஒருவரின் ஜீவ சமாதி இருக்கிறது.
இக்கோயிலில் அனுமார் மட்டுமின்றி லட்சுமி நரசிம்மர், திருமழிசையாழ்வார் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.
எங்கே இருக்கிறது? எப்படி செல்வது?
திருமழிசை சென்னையிலிருந்து 25 கிமி தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் இருக்கிறது. இத்திருக்கோயில்கள் இரண்டுமே திருமழிசை பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் இருக்கிறது. பக்தர்கள் சென்னையிலோ, திருவள்ளூரிலோ தங்கியிருந்து வந்து தரிசித்து செல்லலாம். சென்னை கோயம்பேடு, திநகர், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூரிலிருந்து ஏராளமான பேருந்துகள் இருக்கிறது.
இங்கே வந்தால் அருகிலேயே ஒத்தாண்டீஸ்வரர் ஆலயம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில் என ஏகப்பட்ட பழங்காலத்து கோயில்கள் இருக்கிறது. அவற்றையும் தரிசித்து பெருமாள் அருளையும் பெறலாம்.
-எல்லோரா விஜயா
No comments:
Post a Comment