Monday 11 January 2016

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 21

பாசுரம் 21



"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்ற மாய்நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்"

பொருள்:

கலங்களில்(பாத்திரங்களில்)கறந்த பாலானது பொங்கி வழியும் அளவிற்கு இடைவிடாது பால் சுரக்கும் நல்ல வளமை மிக்க பசுக்களை உடைய நந்தகோபருடைய மகனே! பொழுது விடிந்ததை அறிவாயாக! வலிமைமிக்கவனே! அனைவருக்கும் பெரியவனே! இவ்வுலகில் தோற்றமளிக்கும் ஒளி படைத்தவனே! துயிலெழு! பகைவர்கள் உன் வலிமையை அறிந்து தங்கள் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து உன் வாசலில் வந்து உன் திருவடிகளை பணிவது போல் நாங்களும் உன்னை போற்றி புகழ வந்துள்ளோம்.

விளக்கம்: 

நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும் பாடல். பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி, அந்த பாத்திரங்களிலிருந்து பால் பொங்கி வழியுமாறு, பால் கறப்பவர்கள் சிறுவர்களாயினும் பெரியோர்களாயினும், தங்களது தன்மையில் மாற்றம் ஏதுமின்றி, வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் போன்று பால் சுரக்கும் பெருமை மிகுந்த பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே, நீ உறக்கம் தெளிந்து எழுவாயாக; வேதங்களால் புகழப்படுபவனே, வேதங்களும் அளக்க முடியாத பெருமை வாய்ந்தவனே, உலகத்தவர் கண்டு மகிழும் வண்ணம் உலகில் தோன்றியவனே, ஒளி மிகுந்து பிரகாசிப்பவனே, நீ துயிலெழுவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள் வாயாக.

No comments:

Post a Comment