Thursday, 3 March 2016

அய்யா வைகுண்டர்




ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி ஆன்மீக சீர்திருத்தவாதியும், கடவுள் அவதாரமாக கருதப்படுபவருமான, அய்யா வைகுண்டர் அவதார தின விழா தலைமை பதி அமைந்துள்ள சாமித்தோப்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழ்நாட்டில் அவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் மற்றப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் அந்த அய்யா வைகுண்டர்?



கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது.

தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.

அகிலம் ('அகிலத்திரட்டு அம்மானை' பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர்.)

இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.

முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக அகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள்.பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

மூன்றாம் நாள் வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் எடுத்துக் கூறுகிறார்,

ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார். இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற அவதாரத்தை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் (இன்றைய சாமித்தோப்பு) நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தெட்சணம் சென்றடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த மேடையிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

அய்யா வைகுண்டரின் அவதார மகிமைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும்.

வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.
அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது. பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார மகிமைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.



நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறாமைப்பட்ட சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார மகிமைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார்.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.

அவர் அவதாரம் எடுத்த தினம் இன்று மாசி 20 (3 மார்ச் 2016)

No comments:

Post a Comment