நாம அல்லும்பகலும் கஷ்டப்பட்டு உழைச்சு நாயா பேயாத் திரிஞ்சு ரத்தம் சிந்தி உழைச்சதனால ஆபிஸ்ல பிரமோஷன் குடுத்துருப்பாங்க. ஆனா நாமளோ போன மாசம் வாஸ்து சாஸ்திர படி வீட்டை மாத்திக் கட்டினதாலதான் இந்த பிரமோஷன் கிடைச்சுதுன்னு சொல்லுவோம். இது ரைட்டா தப்பா, வாஸ்து வேணுமா வேண்டாமான்னு ஆராய்ச்சி பண்ணப்போறதுல்ல. வாஸ்துல கலர்ஃபுல்லான ஒரு விஷயத்தப் பத்திதான் பேசப்போறேன்.
வீட்ல மீன் தொட்டி வைக்கறது இன்னிக்கு நேத்திக்கு இல்ல, ரொம்ப காலமாவே நம்மக் கிட்ட இருக்கற ஒரு பழக்கம்தான். அழகான கலர்மீன்கள நம்ம வீட்டு வரவேற்பறையில வச்சிருந்தா பார்க்க அழகா மட்டும் இல்ல நம்ம ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லதுங்கிறது நிரூபிக்கப்பட்டிருக்கு. மீன் தொட்டில பாலே டான்ஸ் ஆடிட்டு இருக்கற மீன்கள கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தா இரத்த கொதிப்பு குறையும். நம்ம மன அழுத்தம் குறையும் இப்படி நிறைய விஷயம் இருக்கு. அதுலயும் இப்ப சாதாரண மீன்கள் வாங்கி வைச்சுக்கறதவிட வாஸ்து மீன்கள இப்ப மக்கள் ரொம்ப விரும்பி வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. வாஸ்து மீன்கள்ல என்னென்ன வகை இருக்கு, எப்படி பாதுகாக்கனும்ங்கிற மாதிரி ஒரு சில மேட்டரத்தான் சொல்லப் போறேன்.
வாஸ்து மீன்ல ஃப்ளவர்ஹார்ன், அரவனான்னு ரெண்டே விதம்தான் இருக்கு. ஆனா இதுக்குள்ள நிறைய விதங்கள்ல மீன்கள் கிடைக்கும்.
ஃப்ளவர்ஹார்ன்: இந்த வகை மீன்கள் இயற்கையாய் உருவானது இல்லை. மலேசிய நாட்டு மக்களுக்கு முன்நெற்றி கொஞ்சம் எடுப்பாத் தூக்கிட்டு இருக்கற வகை மீன்கள் மேல ஒரு தனி ஈர்ப்பு. அதனால் 1994ல் ரெட் டெவில் சிச்லிட் (red devil cichlid) மற்றும் ப்ளட் பேரட் (blood parrot cichlid) என்ற இரு வகை மீன்களின் கலப்பில் உருவானதுதான் இந்த ஃப்ளவர்ஹார்ன். ஆரம்பத்தில் இரண்டே இரண்டு வகை மட்டுமே இருந்தது. இன்று 100க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அவற்றிலும் ஏறக்குறைய 20 வகைகளே பிரபலமாக உள்ளது.
ஓரியண்டல் ப்யூட்டி
கான்ஸ்டிட்யூஷன் க்ளாஸ்
வொண்டர் ஸ்பார்க்
ஸ்டார்ம் ரைடர்
தி ஹாப்பி ஸ்டார்
தி ராயல் டைகர்
தி ரெட் ப்யூட்டி
மூன்லைட் ப்யூட்டி
தி மே ப்ளாஸம்
போன்றவை ஒரு சில ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள்.
ஃப்ளவர்ஹார்ன் தோற்றம்:
அதிகபட்சமா 16 இஞ்ச் வரையிலும் வளரக்கூடியவை இந்த ஃப்ளவர்ஹார்ன் வகை வாஸ்து மீன்கள். நெற்றிப்பகுதி துருத்திக்கிட்டு பஸ் ஹாரன் மாதிரி இருக்கும். அதனாலேயே இந்த பேர் வந்திருக்கலாம். ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கற இந்த மீன்களோட பக்கவாட்டுல சீன எழுத்துக்கள எழுதி வச்சமாதிரி கறுப்பு கலர் டிசைன் இருக்கும். எல்லாம் சூப்பரா இருந்தாலும் இது பெருசானா என்ன கலர் மற்றும் டிசைன்ல இருக்கப் போகுதுன்னு அது குட்டியா இருக்கறப்ப தெரியாது. அதாவது வளர வளர அதோட டிசைனும் மாறிடும். சிலர் குறிப்பிட்ட நிறத்துல குறிப்பிட்ட டிசைன்ல இருந்தாதான் வாஸ்து நல்லா இருக்கும்னு நம்பறாங்க. அவங்க விலையப் பத்திக் கவலைப்படாம வாங்கும்போதே பெரிய மீன்கள வாங்கிட வேண்டியதுதான்.
என்ன விலை இருக்கும்?
ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள் குட்டியா இருக்கறப்ப விலை கொஞ்சம் கம்மியா இருக்கும். வளர வளர அதோட விலையும் வளரும். குறைந்தபட்சம் ரூ.150/- லேருந்து ரூ. 10 ஆயிரத்திற்கு அதிகமான மீன்கள் கூட இருக்கு.
எப்படி பாதுகாக்கனும்?
இது வளர்ப்பது கொஞ்சம் சுலபம்தாங்க. அதனாலதான் நிறைய பேரு இத விரும்பி வாங்கறாங்க. இதுக்கு 4 அடி நீளம் 2 அடி அகலம் இருக்கற மீன் தொட்டி வேணும். அதுல தண்ணி ஏறக்குறைய 28º C அளவுக்கு இருக்கனும். இந்த ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள் கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டது. அதனால அத மட்டும் தனியா ஒரு தொட்டில விடறதுதான் நல்லது. இல்லன்னா கூட இருக்கற மத்த மீன்கள தமிழ் சினிமா வில்லன் கணக்கா போட்டுத் தள்ளிடும். அதே மாதிரி சிலர் விளையாடறோம் பேர்வழின்னு கையத் தொட்டிக்குள்ள விட்டு விளையாடுவாங்க. அப்படி இதுக்கிட்ட செஞ்சா உங்க விரல்தான் அதுக்கு சுவையான ஃபிங்கர் சிப்ஸ். இந்த மீன்கள் தனிமை விரும்பிகள் அதனால கை மட்டும் இல்ல, குச்சியக் காட்டி விளையாடினாக் கூட அதுக்கு அவ்வளவாப் பிடிக்காது. அதோட தவத்தைக் கலைக்காம இருக்கறது நமக்கும் நல்லதுதான.
ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள் நல்லா சுறுசுறுப்பா இருக்க அதுக்கு நிறைய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை உணவு கொடுக்கலாம். சாதாரணமா நாம மீன்களுக்கு கொடுக்கக் கூடிய உணவையேக் குடுக்கலாம். ஆனா அதோட சேர்த்து அப்பப்ப சிறுவகை மீன்கள், நண்டு மாதிரி ஸ்பெஷல் லஞ்ச்சும் இதுக்கு கொடுக்கனும். ஃப்ளவர்ஹார்ன் மீன்கள் நிறைய சாப்பிடும். அப்புறம் தண்ணிய நிறைய அசுத்தம் செய்யும். அதனால எந்த வகை உணவா இருந்தாலும் தண்ணிய அதிகம் அசுத்தமாக்காத வகை உணவா பார்த்து கொடுக்கறது நல்லது.
தண்ணிய வாரத்துக்கு இரண்டு தடவை மாத்துவதா இருந்தா 20 சதவீத தண்ணிய மாத்தலாம். இல்ல வாரத்துக்கு ஒரு தடவைதான் மாத்தமுடியும்னா 25 சதவீத தண்ணிய மாத்திடுங்க.
இப்படி அதிக கவனம் எடுத்து இந்த மீன பாதுகாத்தா 20 வருடங்கள் வரையில் கூட இது உயிர்வாழும்.
அரவணா வகை மீன்கள்:
2004 ம் வருஷம் வரையிலும் அரவணா தனி ராஜ்யமே நடத்திட்டு இருந்தது. ஆனா இப்ப அதோட மவுசு கொஞ்சம் குறைஞ்சுதான் போயிடுச்சு.
அரவணா வகை மீன்கள்லயும் கிட்டதட்ட 10 வகை இருக்கு.
பச்சை அரவணா
தி சில்வர் ஏசியன் அரவணா
ரெட் டெயில்ட் கோல்டன் அரவணா
தி கோல்ட் கிராஸ்பேக்
ரெட் சில்லி கோல்டன் அரவணா
என பலவகைகள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நாடுகள்ல பிரபலமா கிடைக்கும்.
அரவணா வகை மீன்களோட தர்பாரே தனி. சில வகை மீன்கள் 4 1/2 அடி வரையிலும் கூட வளரும் என்பதால் அதுக்கு மிகப் பெரிய தொட்டி தேவை. அதுவும் இந்த மீன்கள் தண்ணியோட மேல்பரப்புலயே சதா சுத்திட்டு இருக்கும். அதனால ஹை ஜம்ப்ல வேற எக்ஸ்பர்ட்டான இந்த வகை மீன்கள் தண்ணிலேருந்து ஒரே ஜம்ப் செஞ்சு வெளிய வந்து விழ வாய்ப்பிருப்பதால தொட்டிய மூடியே வச்சுக்கனும்.
எப்படி பாதுகாக்கனும்?
இதோட பாதுகாப்பு முறைகள்லாம் ஏறக்குறைய ஃப்ளவர்ஹார்ன் மாதிரி அப்படியேத்தான் இருக்கும். இதுக்கு உணவு சிறிய மீன்கள், புழுக்கள் இப்படி அசைவ விரும்பி. நல்லா வளர்ந்த பெரிய் மீனா இருந்தா பெரிய சைஸ் மீனக் கூட சர்வசாதாரணமா முழுங்கிடும். குட்டி மீன்களுக்கு ஒருநாளைக்கு 3 தடவையும். மீடியம் மீன்களுக்கு 2 தடவையும் வளர்ந்துட்ட மீன்களுக்கு ஒரு தடவை இல்லாட்டி ஒருநாள் விட்டு ஒருநாள்னு உணவுப் போடனும். தண்ணி மாத்துவதுக் கூட ஃப்ளவர்ஹார்ன் மாதிரியேதான். ஆனா இதன் விலை குறைந்தபட்சமே ரூ.1200/- லேருந்துதான் ஆரம்பிக்குது. அதிகபட்சமா ரெட் சில்லி கோல்டன் அரவணாவோட விலை ஏறக்குறைய (மூச்சை அழுத்திப் பிடிச்சுக்குங்க.) ரூ. 10 லட்சம். இதை பாத்துக்கற விதத்துல சரியா கவனிச்சுக்கிட்டா இது 20 வருடம் வரைக் கூட உயிர் வாழும். இப்படியெல்லாம் மெனக்கெட்டு நிறைய பணமும் நேரமும் செலவழிச்சு இத வாங்கி வளர்த்தா அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்னு நினைச்சா அது உங்க இஷ்டம். ஆனா இந்த வாஸ்து, ராசிக்கல் சமாச்சாரங்கள் எத பின்பற்றினாலும் இல்லாட்டியும் நம் உழைப்பும் முயற்சியும் என்னிக்கும் நம்மளக் கை விடாது.
No comments:
Post a Comment