Tuesday, 29 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 12

பாசுரம் 12




"கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்: 

இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால் வடிய அதனால் வீடே சேறாகும் செல்வனின் தங்கையே எங்கள் தலையில் பனி விழ உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை கோமானை) கொன்ற மனதுக்கினிய இராமனை நாங்கள் பாடி புகழ, நீயோ வாய் திறவாமல் இருக்கிறாய். பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.

விளக்கம்:

 இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும்

வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே! மார்கழி மாதத்து பனி எங்கள் தலையின் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய ராவணனை கோபத்தினால் அழித்த ராமபிரானை, ராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை அனைவரும் வாயாறப் பாடுகின்றோம். அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக் கிடக்கின்றது உனக்கு? எழப் போகிறாயா இல்லையா?

No comments:

Post a Comment