Thursday, 24 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 6

பாசுரம் 6



"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ் சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலை நேரம் பறவைகளும் இரை தேட புறப்பட்டன. கருடனின்(புள்ளரையன்) தலைவனான இறைவனின் கோவிலில் வெண்மையான நிறம் கொண்ட சங்கின் ஒலி(பேரரவம்) கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்திரு! முலைப் பால் கொடுத்து தன்னை கொல்ல வந்த பூதனையை மடித்து திருப்பாற்கடலில் துயிலில் அமர்ந்தவனை உள்ளத்தில் கொண்டு எழுந்து 'அரி,அரி' என்று முனிவர்களும்,யோகிகளும் அழைக்கும் அரவம் நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது.

விளக்கம்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா?
பேய் வடிவம் எடுத்து தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

No comments:

Post a Comment