இன்று (14/12/2015), B.K.S ஐயங்காரின் பிறந்த நாள். கூகுள் தன் முதல் பக்கத்தில் அவரது யோகாசனங்களைப் போட்டு கௌரவித்து வருகிறது.
சரி யார் இவர்? அவரது முழுப்பெயர் பேளூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங்கார். இவர் கர்நாடக மாநிலத்தில் 1918ம் ஆண்டு ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 13 பேர். இருப்பினும் பிழைத்தவர் 10 மட்டுமே. ஐயங்காரும் இளமையில் மிகவும் நோஞ்சானாகவே இருந்தார்.
அடிக்கடி மலேரியா, டைபாய்டு என ஏதாவது ஒரு நோய் அவரைத் தாக்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது அவரது மைத்துனர் யோகா குரு ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சார்யா மைசூரில் யோகா குருவாக இருந்தார். அவர் 15 வயது ஐயங்காரின் ஆரோக்கியத்தை யோகா மூலம் மேம்படுத்துவதற்காக அவரைத் தன்னுடன் மைசூருக்கு அழைத்துக் கொண்டார். அங்கு இரண்டாண்டுகள் தங்கி யோகாவைக் கற்றுத் தேர்ந்தார் ஐயங்கார். உடல்நலமும் முன்னேறியது. பின்னாளில் ஐயங்கார் குறிப்பிடுகையில் இந்த
காலகட்டத்தை தன் வாழ்நாளின் மிக முக்கியமான கட்டமாகவும் பெரியத் திருப்புமுனையாகவும் குறிப்பிடுகிறார்.
நன்கு யோகாவைக் கற்றுத் தேர்ந்த ஐயங்கார் 1937ல் பூனே விற்கு சென்று யோகாக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகள் பூனேவில் இருந்த அவர் பல பிரபலங்களுக்கும் யோகாப் பயிற்றுவித்தார். இவரிடம் யோகா பயின்று பயனடைந்த ஒருவர் மூலம் ராணி எலிசபெத்துக்கு யோகா கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராணியின் 80 வது வயதில் அவருக்கு
சிரசாசனம் செய்யப் பயிற்றுவித்தார் ஐயங்கார். அதன் பிறகு அடிக்கடி மேற்கத்திய நாடுகளுக்கு சென்று பல பிரபலங்களுக்கு யோகாப் பயிற்றுவித்தார். பல கல்லூரிகளுக்கும் சென்று யோகா கற்றுத் தந்தார். தன் மனைவி ரமாமணி ஐயங்கார் பெயரிலேயே ஒரு நினைவு அறக்கட்டளைத் தொடங்கி அதன் மூலம் யோகா வகுப்புகள் எடுத்து வந்தார். சச்சின் டெண்டுல்கர், கரீனா கபூர் போன்ற பிரபலங்களும் ஐயங்காரின் யோகாசன முறையைப் பயின்றவர்களே.
பி.கே.எஸ். ஐயங்கார் யோகக் கலையில் பிரபலமடைந்ததற்கு இன்னுமொரு முக்கியக் காரணம் உண்டு. ஒரு சிறு விபத்தில் சிக்கியதால் அவரது தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ஏதேனும் உடல் நல பாதிப்பினால் யோகா செய்ய முடியாதவர்களும் எளிதில் யோகா செய்ய வசதியான உபகரணங்களை அப்பொழுது அவர் கண்டுபிடித்தார். அந்த உபகரணங்கள்தான் இன்றளவும் பலர் யோகா செய்ய உறுதுணையாக உள்ளது.
அவர் 1991 ல் பத்மஸ்ரீ விருதும் , 2002 ல் பத்ம பூஷன் மற்றும் 2014 ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார் .2004இல் நூறு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்னும் பட்டியலில் பி.கே.எஸ் ஐயங்காரும் ஒருவராக தேர்ந்தெடுத்து டைம் இதழ் அவரைக் கௌரவித்தது. 2001 இல் சீன அரசு அஞ்சல் துறை இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது.
நம் நாட்டின் பொக்கிஷமான யோகக் கலையை மேற்கத்திய நாடுகளிலும் பரப்பிய ஐயங்கார் தான் இறக்கும் வரை யோகாசனப் பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சியும் செய்து வந்தார். அவர் கடந்த 2014ம் ஆண்டு தனது 96வது வயதில் காலமானார்.
இன்று அவருக்கு 97வது பிறந்தநாள். இந்த மாமேதையை கௌரவிக்கும் வகையில் கூகுள் செயல்பட்டுள்ளது நமக்கும் பெருமையே!
No comments:
Post a Comment