Friday 11 December 2015

ஆலய பிரவேசம் - நாராயணவனம்

ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம். 




பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,



 திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர்.
பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

தல வரலாறு: ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம். முழு தல வரலாறு அறிய இங்கே சொடுக்கவும்.

தல சிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி.

எங்கு இருக்கிறது? ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்சானூரிலிருந்து 31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.

கோயில் நேரம்:
காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம். இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. சென்னையிலிருந்து முதலில் சுருட்டப்பள்ளி, அடுத்து நாகலாபுரம், நாராயண வனம், திருச்சானூர் மற்றும் திருப்பதி என திட்டமிட்டு வார இறுதி நாட்களில் ஆன்மிகச் சுற்றுலா சென்று வரலாம்.

No comments:

Post a Comment