Wednesday 16 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 1


பாசுரம் 1
மார்கழி(த்) திங்கள் பாடல் வரிகள்:
மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:
மார்கழி மாதமும் முழு நிலா நாளுமான இன்று செல்வப் பெருக்கையுடைய ஆய்ப்பாடியில் செல்வம் நிறைந்த இளம்பருவ பெண்களே நீராட வருவீர். கூர்மையான வேலும், கண்ணனுக்கு தீங்கு நினைப்பவருக்கு கொடியவனுமான நந்தகோபனுடைய குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கம், மேகம் போல உடல், செந்தாமரையை ஒத்த கண்கள், கதிரவன் போன்ற ஒளியையும் சந்திரனை போன்ற முகம் கொண்டவனான நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்(பறை தருவான்). எனவே உலகோர் புகழ இந்நோன்பில் ஈடுபடுவோம்.

விளக்கம்
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

No comments:

Post a Comment