Monday, 21 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் - 5

பாசுரம் -5



"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."

பொருள்:

மாயங்கள் புரிபவனை வட திசையில் உள்ள துவாரகையின் அரசனானவனை, தூய்மையான நீர் விளங்கும் யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கினை, யசோதையின் வயிற்றில் தோன்றி அவள் வயிற்றை பிரகாசிக்க செய்த தாமோதரனை, நாம் தூய்மையோடு மலர் தூவி தொழுது, அவன் பெயரினை பாடி, மனதினால் அவனையே சிந்தித்தால் இது வரை செய்த பிழைகளும் இனி வரப் போகும் பாவங்களும் தீயிலிட்ட தூசியாய் அழிந்துவிடும்

விளக்கம்:

பாற் கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை என்ன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோர் புகழும்படி செய்த தாமோதரன். அப்படிப்பட்ட அந்தப் பெருமாளை நாம் தூய மனதுடன், நல் மலர்கள் தூவி வாழ்த்தி வணங்குவோம், மனதால் அவனை நினைப்போம். காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரக் காத்திருக்கும் பிழைகளும் கூட தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கிப் போய் விடும். ஆகவே, அந்த தூய பெருமானின் புகழ் பாடுவோம், அவன் குறித்தே பேசுவோம்..

No comments:

Post a Comment