Friday 18 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 3

பாசுரம் 3


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய நெய்தல் மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி இடையர்கள் குடம் குடமாக பால் கறக்கும் பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க வேண்டும்.

விளக்கம்:
இந்தப் பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்கிறாள் ஆண்டாள்.

No comments:

Post a Comment