Friday 18 December 2015

மெட்ராஸ் ஐ தடுப்பது எப்படி?

சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் என வந்து ஊரையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இப்பொழுது இயல்பு நிலை மெள்ளத் திரும்பிக்கொண்டிருந்தாலும் மழை வெள்ளத்தின் நண்பர்கள் இப்பொழுது படையெடுத்துக் கொண்டுள்ளனர். ஆம். பல மழைக்கால நோய்கள் பரவி வருகிறது. அதில் ஒன்று மெட்ராஸ் ஐ.



மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது. 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை  மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடிநோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

மெட்ராஸ் ஐ வகைகள்: பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் இருக்கிறது.

அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ: பெருகி வரும் மாசினால் வெகு சுலபமாக நம்மை வந்தடைவது அலர்ஜி. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் செய்யும்.

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ: இந்த வகை சளிப் பிடித்தல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது. இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும்.

பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ: இதில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்ததுப் போன்ற ஒரு உறுத்தல் இருக்கும்.

ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகமிருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதல் இருக்காது.

சிகிச்சை: மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து செயற்கை கண்ணீர் (Artificial tears) ஏதேனும் பரிந்துரைப்பார்கள். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும்.

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். கண்ணைத் துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி/கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களை கூச செய்யாத வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க: மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதுப்போல நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு செல்வதைத் தடுக்கலாம். மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம். கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.

No comments:

Post a Comment