Friday 18 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 2

பாசுரம் 2


"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே,நாம் பாவை நோன்புக்கு செய்யும் செயல்களை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும்,பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுப்போம்.


விளக்கம்: பாவை நோன்பு நோற்பவர்களுக்கு இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் தெரிவிக்கிறாள். கண்ணன் பிறந்த இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே, திருப்பாற்க்கடலில் துயிலும் அந்த பகவானின் நாம சங்கீர்த்தனங்களை அன்புடன் பாடி, நெய் உண்ணாது, பால் பருகாது, அதிகாலையில் நீராடி, கண்களுக்கு மை இடாமல், மலர்களை நாம் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாது பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற அளவு வழங்கி, நாம் உய்யும் வகையை நாடி, மகிழ்ந்து, நாம் நோன்பு நோற்கவேண்டும் என்கிறார் ஆண்டாள் நாட்சியார்.

No comments:

Post a Comment