Tuesday, 29 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 14

பாசுரம் 14



"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்"

பொருள்:

உங்கள் புழக்கடை தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் விரிந்து ஆம்பல் மலர்கள் குவிந்து விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான பற்களை உடையவருமான தவம் செய்யும் துறவிகள் தங்கள் திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை 'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்ட நங்கையே!எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும் இல்லாதவளே ,நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியுள்ளவனும், முழங்காலளவு நீண்ட கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!

விளக்கம்:

உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் எல்லாம் பூத்து விட்டன. ஆம்பல் மலர்களின் இதழ்கள் குவிந்து வாய் மூடி விட்டன. பொழுது விடிந்து விட்டதே. அது உனக்கு இன்னும் புரியவில்லையா? தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர். உங்களுக்கு முன்பு நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று வாய் சவடால் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நீண்ட நாவுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை பாடுவோம், வா!

No comments:

Post a Comment