Thursday 24 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 7

பாசுரம் 7



"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப்பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலையில் ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் கீசுகீசு என்று தமக்குள்ளே பேசும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ பெண்ணே? கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கலகலவென்று ஒலியெழுப்ப, நறுமணமுள்ள கூந்தலை உடைய இடையக்குல(ஆய்ச்சியர்) பெண்கள் மத்தினால் தயிர்கடையும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ? நாராயணனான கேசவனின் புகழ் பாடுவதை கேட்டும் நீ இன்னும் உறங்குகிறாயோ பெண்ணே? நீயே எழுந்து வந்து கதவை திறவாய்!

விளக்கம்:

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

No comments:

Post a Comment