நாம் குழந்தைகளாக இருக்கும்போது அம்மா கதை சொல்லியிருப்பார். அதில் விலை மதிக்கமுடியாத புதையல் ஒன்று ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும். அதை மிக சிரமப்பட்டு போய் எடுக்க வேண்டும் என கதை நீளும். அது சொல்லும் நீதி எப்பவுமே மிக அரியப் பொக்கிஷம் சுலபமாக கிடைத்துவிடாது. மிக முயற்சி செய்து ஏழு மலை தாண்டி சென்றால்தான் கிடைக்கும். அந்தக் கருத்து கூட மிக சரிதான் போலிருக்கிறது.
ஏனெனில் இங்கே எம்பெருமான் ஏழுமலையான் ஏழுமலை தாண்டிதானே இருக்கிறார். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் அம்சமான திருப்பதி பாலாஜியை காண கண்கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலகளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இங்கே ஏழுமலையானைக் காணவரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருப்பதை பார்த்தால் நம் பாட்டிமார்கள் கூறியது போல கிடைத்தற்கரிய பொக்கிஷம் ஏழுமலை தாண்டி சென்றால்தான் கிடைக்கும்.
நம் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இயேசு பிறப்பதற்கு முந்தைய கால இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ’திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும்போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த க்ஷேத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய ‘நாடகம்’தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று.
ஸ்தல புராணம்: கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர். பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார். அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிப்பாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதில் தேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக்கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதி தேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின்போது முனிவர் குறுக்கிட்டதை விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்படலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார். முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக் அமுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணைப் பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.
இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோல்காபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார்.
அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள். அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.
ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அங்கே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு ஏதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செயத குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாச ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.
ஸ்ரீ வராகசுவாமி ஆலயம்: இந்த சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் திருப்பதிமலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக க்ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு நியதி உள்ளது.
பத்மாவதி தாயார்: இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்குல் பிள்ளைப் பேறு இல்லை. அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்பொழுது அதை எடுத்து வளர்த்தால் சகல சௌபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.
இதனிடையே ஸ்ரீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் ஸ்ரீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இத்திருமணச் செலவுகளுக்காக ஸ்ரீனிவாசனுக்கு கடன் தருகிறார். இருவீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ ஸ்ரீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைப்பெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைப்பெற்ற இடம்தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. அதுமட்டுமின்றி இப்பொழுதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியிலிருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.
கோயில் வரலாறு: தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன்முதலாக கோயில், பிரகாரம் கட்டி தினசரி வழிப்பாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோயிலுக்கு பல வசதிகளை செய்துக்கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோயில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
கோயில் அமைப்பு: திருப்பதி திருமலையின் மலை கடல்மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது. திருமலை ஏழுமலைகளைக் கொண்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் வீற்றிருப்பது ஏழாவது மலையான வெங்கடாத்ரியின் உச்சியில். மற்ற மலைகளின் பெயர்கள், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, ஆகும். ஏழாவது மலைதான் வெங்கடாத்திரி. இந்த மலைகளின் மொத்த பரப்பளவு 10.33 சதுர மைல்கள்.
திருப்பதியில் மொட்டையடிப்பது ஏன்? மகாவிஷ்ணு மாடு மேய்ப்பவனால் தாக்கப்பட்டப்போது அவரது தலையில் இருந்த கேசம் உதிர்ந்து வழுக்கை விழுந்தது. பின்னர் அங்கே முடி வளரவேயில்லை.அதை ஒருமுறை கவனித்த கந்தர்வ இளவரசி நீலா தேவி ‘இத்தனை அழகான முகத்தில் வழுக்கை ஒரு குறையாக இருக்கிறதே’ என வருந்தி தனது கூந்தலை வெட்டி விஷ்ணுவின் வழுக்கையில் ஒட்டி முடி வளர செய்தாள். கண் விழித்து பார்த்த மகா விஷ்ணு அவளது பக்தியையும் தியாகத்தையும் கண்டு மெச்சி இனி தன்னை காண வரும் பக்தர்கள் தரும் முடி காணிக்கைகள் அனைத்து நீலா தேவியையே சேரும் என வரமளித்தார். அவளது பெயரில் இருக்கும் மலைதான் நீலாத்திரி.
சேவைகள் மற்றும் பூஜைகள்: நாம் ஒரு பேச்சு வழக்கிற்கு ‘நித்ய கல்யாணம் பூரணத் தோரணம்’ என்போம். அது எங்கு சரியாகப் பொருந்துகிறதோ இல்லையோ திருப்பதிக்கு மிகச் சரியாகப் பொருந்தும். ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் என்பதால் இங்கு தினமும் கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. மேலும், டோலோற்சவம், வசந்தோற்சவம், அர்ச்சித பிரமோற்சவம் என பல உற்சவங்கள் தினசரி நடைப்பெறுகிறது. சேவைகளில் சுப்ரபாத தரிசனம் அதிகாலை 2 மணிக்கு தினந்தோறும் நடைப்பெறுகிறது. தோமால சேவை மற்றும் அர்ச்சனைகள் செவ்வாய், புதன், வியாழன்களில் மட்டும் நடக்கிறது.
உற்சவங்கள்: திருப்பதியில் தினமுமே உற்சவந்தான் என்றாலும் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில், தமிழில் புரட்டாசி மாதத்தில் நடைப்பெறும் பிரம்மோற்சவம் மிக முக்கியமானது. 9 நாட்கள் நடைப்பெறும் இந்த உற்சவம் முதன்முதலில் படைப்புக் கடவுள் பிரம்மாவால் கொண்டாடப்பட்டது. தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப் பெருமாள் சிறப்பாகப் பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மர் உற்சவம் நடத்தினார். அதுதான் இன்று அவரது பெயராலேயே ‘பிரமோற்சவம்’ என அழைக்கப்படுகிறது.
திருப்பதியிலும், திருமலையிலும் ஏராளமான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளன. திருப்பதியிலிருந்து திருமலை செல்லவும், மீண்டும் திரும்ப வரவும் இலவச பேருந்து வசதிகள் உள்ளன.
-எல்லோரா விஜயா
அருமையான தொகுப்பு.
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
ReplyDelete