Tuesday 29 December 2015

ஆன்மீகம் - திருப்பாவை பாசுரம் 13

பாசுரம் 13



"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகாசுரன் என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், மற்ற பொல்லாத அரக்கர்களை அழித்தவனும், இராவணின் பத்து தலைகளையும் புல்லை கிள்ளி எறிவது போல் எறிந்தவனுமானவனின் புகழைப் பாட நாங்கள் எல்லாரும் கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்)உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது.

பறவைகள் எல்லாம் இரை தேட புறப்பட்டு விட்டன, அழகிய தாமரை மலரில் மீது வண்டுகள் உறங்குவது போன்ற கண்களை உடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில் கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!

விளக்கம்:

நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!

No comments:

Post a Comment