Tuesday 24 April 2018

சிறுகதை – மன்மத லீலை



ன்று கூரியரில் வந்த திருமண பத்திரிக்கையைப் பார்த்ததும் வக்கீல் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக்கு என்ன பெயர் என்று அவருக்கேத் தெரியவில்லை.
     ”என்னங்க கூரியர்? யார்ட்டயிருந்து வந்திருக்கு?” எனக் கேட்டவாறு அவர் மனைவி கோகிலா வந்தாள்.

     ”என் ப்ரெண்ட் ராமமூர்த்தியோட பொண்ணுக்குக் கல்யாணமாம். பத்திரிக்கை அனுப்பியிருக்கான்.”
     ”நல்ல விஷயந்தான! அதுக்கு ஏன் பேயறஞ்ச மாதிரி நிக்கறீங்க?”
     ”ம். நல்ல விஷயந்தான், ஆனா இந்த ரெண்டு பேரும் ஏற்கெனவே கல்யாணமானவங்க.” ஆச்சர்யம் விலகாமல் பேசினார் விஸ்வநாதன்.
     ”என்ன உளர்றீங்க? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க…”
     ”அட! இந்த ரெண்டு பேரும் ஏற்கெனவே கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒருத்தருக்கொருத்தரு பிடிக்காமப் போயி விவாகரத்து செஞ்சிகிட்டாங்க. அவங்களுக்கு கல்யாணத்த ரத்து செஞ்சு வச்ச வக்கீலே நான் தான்.”


     இதைக் கேட்டதும் கோகிலாவிற்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
”அப்படியா! என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்…”
அவள் கேட்க, அவரும் பதிலளிக்க ஆர்வமாய் பத்திரிக்கையும் கையுமாக வந்து ஹால் சோபாவில் அமர்ந்தார்கள்.

     மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரம். இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. விஸ்வநாதனுக்கு அன்று அவ்வளவாக பணி ஒன்றும் இல்லாததால் வீட்டிற்கு கிளம்பலாம் என யத்தனித்துக் கொண்டிருந்தார்.
     அப்பொழுது, “எக்ஸ்க்யூஸ் மீ! மே ஐ கம் இன்?” எனக் கேட்டவாறு ஒரு இளம் தம்பதியினர் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்த உடனே இது தன் நண்பன் ராமமூர்த்தியின் மகள் வித்யாவும், மாப்பிள்ளை கோபாலும்தான் என அடையாளம்  கண்டுவிட்டார்.
     ஆனால் அவ்விருவருக்கும் தெரியவில்லை. யாரோ ஒரு வக்கீல் என்று நினைத்தே அங்கு வந்திருந்தனர். சற்று யோசித்த விஸ்வநாதன், எடுத்த எடுப்பில் தெரிந்தவாறுக் காட்டி கொண்டால், அவர்கள் பிரச்சினை என்னவென்று கூறாமல் நழுவிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் எதையும் வெளிக்காட்டாமல்,
     ”வாங்க… என்ன விஷயம்?” என்றார்
     ”ஒரு கேஸ் விஷயமா பேசனும்.” என்றால் கோபாலன்.
     ”சரி. உட்காருங்க. என்ன பிரச்சினை?”
     ”எங்களுக்கு விவாகரத்து வேணும் சார்.” தீர்மானமாக சொன்னார்கள்.
ஒரு நொடி அதிர்ந்த விஸ்வநாதன் மேலும் சில கேள்விகளைத் தொடுத்தார்.
     ”எப்ப கல்யாணம் ஆச்சு?”
     ”ரெண்டு வருஷம் ஆகுது.”
     ”குழந்தை இருக்கா?”
     ”நல்ல வேளை, அப்படி ஒண்ணும் பொறந்து தொலைக்கல.” இருவரும் ஒருமித்துக் கூறினர்.
     ’இந்த விஷயத்துல நல்லா ஒத்துமையாத்தான் இருக்காங்க.’ என நினைத்துக் கொண்டார். இலேசாக புருவத்தை மட்டும் நெரித்த விஸ்வநாதன், மற்றபடி தன் உணர்ச்சிகளை வெளியேக் காட்டிக் கொள்ளாமல்,
     ”சரி, எதனால விவாகரத்துக் கேட்கறீங்க?”
“என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா சார். எப்ப பாரு சண்டை போடறா” என்றான் கோபால்.
     ”அதெல்லாம் இல்ல சார். அவர் தான் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு. எனக்காக நேரமே ஒதுக்குறதில்ல. என் முகத்த சரியாப் பாத்துக் கூட பேசறதில்ல.” வித்யாவும் தன் பங்குக்கு பொரிந்து தள்ளினாள். சற்று நேரம் இருவரும் மாற்றி மாற்றி குற்றம்சுமத்திக்கொண்டனர். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதன்,
     ”நீங்க பில்டிங் காண்டிராக்டர் ராமமூர்த்தி பொண்ணுதான? என்று கேட்டார்.
அதை சற்றும் எதிர்பாராத வித்யா அதிர்ச்சியுடன், ‘ஆம்’ என தலையசைத்தாள்.
     ”உங்க இந்த முடிவு உங்க வீட்டுப் பெரியவங்களுக்குத் தெரியுமா?”
“நாங்க சண்டை போட்டுக்கறது தெரியும். டைவோர்ஸ் பண்ணப் போறது தெரியாது.” என்றாள்.
விஸ்வநாதன் இதை வருமானம் ஈட்டித் தரும் வழக்காகப் பார்க்காமல் தந்தை ஸ்தானத்தில் சிந்தித்துப் பொறுப்புடன், தன் நண்பர் ராமமூர்த்திக்குத் தெரியப்படுத்தினார்.
அடுத்த சில தினங்களுக்கு இரு குடும்பங்களும் பரபரத்தது. இருவர் வீட்டிலும் இருவரையும் கூப்பிட்டு அறிவுரை கூறினார்கள். ‘ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரியாய்டும்’ என்றனர். வித்யாவின் அம்மா திட்டினாள். அவளுடன் பேசாமல் இருந்து மிரட்டிப் பார்த்தாள். இருவரும் எதற்கும் மசியவில்லை.
“சரி, கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னால கவுன்சிலிங் போகட்டும். அவங்க பேசி, இவங்க மனச மாத்திடுவாங்க.” என ஆலோசனை வழங்கினார் விஸ்வநாதன்.
சென்னையின் பிரபல மனநல நிபுணரிடம் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் முதலில் இருவரையும் தனித்தனியே பேசச் செய்தார். முதலில் வித்யாவிடம் பேசினார்.
இருபத்தைந்து வயதுதான் இருக்கும் வித்யாவிற்கு. அழகாக இருந்தாள். நன்கு படித்தப் பெண்.  அவளுடைய நடைஉடை பாவனங்களில் அவளின் படிப்பு, அந்தஸ்து மற்றும் தன்னம்பிக்கை மிளிர்ந்தது.
“என்ன பிரச்சினை உங்களுக்கு?”
“பிரச்சினைன்னு தனியா ஒன்னும் இல்ல, எல்லாமே பிரச்சினைதான்.” விவர்ணையாக பதில் சொன்னாள் வித்யா.
“எனக்கு வேண்டிய சுதந்திரம் தர மாட்டேங்குறாங்க. என் இஷ்டத்துக்கு ஒரு டிவி கூட பாக்கமுடியல. எனக்காக நேரம் ஒதுக்க மாட்டேங்குறாங்க. எப்பப் பாரு மொபைல் போன்ல எதையாவது நோண்டிக்கிட்டே இருக்காரு. நா மொபைல் எடுத்து வச்சுக்கிட்டா மட்டும் முகம் சுளிக்கிறாரு, என்னோட அவுட்டிங் வர்றதை விட, அவங்க ப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தறதுதான் பிடிக்குது…” என வண்டிவண்டியாக குற்றங்களை அடுக்கினாள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கவுன்சிலிங் நிபுணர் முருகேசன் அடுத்து கோபாலிடம் பேசினார். அவனுடைய குற்றச்சாட்டுகளும் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது. கடைசியாக இருவரையும் சேர்த்து வைத்து பேசி புரிய வைக்க முயன்றார்.
“டிவி பாக்குறது, மொபைல் பாக்குறதுல்லாம் ஒரு பெரிய விஷயமா? உங்களுக்குள்ள பெருசா ஒரு பிரச்சினையும் இருக்கற மாதிரி தெரியல. ஈகோதான் நிறைய இருக்கு. விட்டுக் கொடுத்துப் போறதுதான் வாழ்க்கை…
முருகேசன் இதை ஒரு கருத்தரங்கில் பேசியிருந்தால் கைதட்டலாவது கிடைத்திருக்கும். இவர்களிடம் பேசியதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒரு நல்ல சுபமுகூர்த்த வேளையில் இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.
பரஸ்பரக் காதலே இல்லாமல், தான் என்ற அகங்காரம் மட்டுமே கொண்ட இருவரது திருமண வாழ்வு முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பொழுது அவ்விருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்றால் யாருக்குத்தான் ஆவல் இருக்காது!
ற்கெனவே மணந்து, பிரிந்தவர்களின், மறுமண வரவேற்பு என்பதால் எளிமையாகவே இருந்தது. சம்பிரதாயதுக்கு நடத்தும் விழா அல்லவா! இருப்பினும் வித்யாவும், கோபாலும் உற்சாகமாகவே இருந்தனர். அவர்களுக்கு முதன்முதலாக திருமணம் நடந்த போது கூட இவ்வளவு பொலிவு இல்லை. இப்பொழுது இருவரையும் ஜோடியாகப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
வரவேற்பும் அதைத் தொடர்ந்து விருந்தும் முடிய பத்தரை மணியாகி விட்டது. இருவரிடமும் தனியாகப் பேச விரும்பி விஸ்வநாதன் பொறுமையாகக் காத்திருந்தார்.
“வாழ்த்துக்கள் வித்யா கோபால். கலக்கிட்டீங்க போங்க. சரி, என்ன நடக்குதுன்னே புரியல. ஏன் பிரிஞ்சீங்க? ஏன் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எல்லாத்தையும் விளக்கமா சொல்லுங்க. இல்லன்னா எனக்கு மண்டையே வெடிச்சிரும்.”
விஸ்வநாதனின் இந்தப் பரபரப்பைப் பார்த்து இருவரும் புன்னகைத்தனர். நகரின் ஆடம்பர ஹோட்டலின் தோட்டத்து பெஞ்சில் அமர்ந்து நிதானமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
“எங்களது அரேஞ்சுடு மேரேஜ் சார். அப்ப எங்க இரண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணிக்கிறதுல அவ்ளோ ஈடுபாடு இல்ல. கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க சுதந்திரம் பறிபோயிடும்னு ஒரு பயம். ஆனா பெரியவங்க விட்டு வைக்கல, பொண்ணு பாக்கப் போனதும், பாக்க அழகா க்யூட்டா இருந்தா… வயசுக் கோளாறு… ஓகேன்னு சொல்லிட்டேன்” என வித்யாவைப் பார்த்து கண் சிமிட்டியவாறேக் கூறினான்.
வித்யாவின் கன்னங்கள் சிவந்தாலும் சற்றுப் பொய் கோபம் காட்டினாள்.
“கல்யாணம் முடிஞ்சுது. கொஞ்ச நாள்ல எங்களுக்குள்ள சண்டை ஆரம்பிச்சிடுச்சு. அவ எதப் பேசினாலும் கோவம் வரும். ‘சும்மா தொணதொணங்காத.. பாட்டு கேட்க விடு’ன்னு அலுத்துக்குவேன்.
என் பிரெண்ட்ஸ் கிட்டயிருந்து என்னைப் பிரிக்கிறான்னு தோணும். அதனால் ஆபிஸ் முடிஞ்சா நேரா பிரெண்ட்ஸ பார்க்க போயிடுவேன், வீட்ல இருந்தா எப்படியும் டிவி விஷயத்துல, சாப்பாட்டு விஷயத்துலன்னு ஏதாவது ஒரு சண்டை வந்துடும்…”
“சரி இந்த மாதிரி ஒரு மனநிலை இருந்ததுக்கு என்ன காரணம்?”
“ரொம்ப சிம்பிள் சார். பேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள்தான் காரணம்.”
புரியாமல் புருவத்தை நெரித்தார் விஸ்வநாதன்.
“ஆமா சார், நீங்க பேஸ்புக், வாட்ஸ் அப் யூஸ் பண்ணீங்கன்னா இத கவனிச்சு இருப்பீங்க. இன்னைய டிரெண்டே நகைச்சுவைங்கிற பேர்ல திருமணத்தை ஒரு மிகப் பெரிய விபத்தாகவும், மனைவியை மிகக் கொடுமைக்காரியாகவும் சித்தரிக்கறாங்க. பெண்களை ராட்சஸி, தீவிரவாதி, ஆண்கள் பாவம்னு சொல்லி வர்ற ஜோக்ஸ்தான் அதிகம். இதுல கொடுமை என்னன்னா இதோட வீரியம் தெரியாம இதெல்லாம் காமெடின்னு சொல்லி பெண்களே கூட இதை ஷேர் செஞ்சுக்குறாங்க…”
“இந்த மாதிரி பதிவுகளையேப் பார்த்துப் பார்த்து கல்யாணம்னா ஒரு ஜெயில் வாழ்க்கைங்கிற எண்ணம் என் மனசுல நல்லா வளந்துடுச்சு. அதனால அவ நியாயமா ஏதாவது பேசினாக் கூட சண்டைப் பிடிக்கிறா, அடக்கப் பாக்கறான்னுதான் தோணும். அதனால யோசிக்கவே மாட்டேன்… எடுத்த எடுப்புல ஆர்க்யூ பண்ணி அவ வாயை அடைச்சிடுவேன்.”
தொடர்ந்தவனைக் கையமர்த்தி வித்யா தொடர்ந்தாள்.
“அது மட்டுமில்ல, இன்னொரு பக்கம் பெண்ணியல், பெண் சுதந்திரம், புரட்சி இது மாதிரி பதிவுகள். எனக்கு திருமணம்னா என் சுதந்திரம் போய்டும், புருஷங்கிற பேர்ல ஒரு ராட்சசன் வந்து என்னை அடிமைப்படுத்திடுவான், நாமதான் ஜாக்கிரதையா இருக்கனும்னு எனக்கு ஒரு எண்ணம் வந்திடுச்சு. அதனால அவர் வீட்டுக்கு வந்தா ரெண்டு பேருமா சேர்ந்து ஒற்றுமையா டிவில ஏதாவது ஒரு நிகழ்ச்சியப் பார்கலாமேன்னு தோணாது. எனக்கு எது விருப்பமோ அதைப் பார்க்கறதுதான் என் சுதந்திரம்னு தோணும். அவர் எப்பவும் மொபைல் பாக்கறாரு, ப்ரெண்ட்சோட சுத்தறாருன்னு கோவம் வருமே தவிர, அவர என் பக்கம் இழுக்கனும்னா அவர் வீட்டுக்கு வர்றதுக்கு ஆசைப்படற மாதிரி ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கிக் கொடுக்கனும்னு தோணினது இல்ல.”
“ஆக மொத்தம் அன்பு, காதல் இதெல்லாம் பத்தி யாரும் பேசறதில்ல?” அங்கலாய்த்தார் விஸ்வநாதன்.
“ஊஹூம்.  திருமணம்னா ஒரு கசப்பானப் போராட்டம். பாங்ல லோன் வாங்கிட்டுத் திரும்ப கட்டலன்னா வண்டிய திருப்பி எடுத்துட்டுப் போற மாதிரி திட்டம் ஏதாவது இருந்தா மனைவியையும் திருப்பி அனுப்பிடலாம்; இல்ல பொண்டாட்டிய கடிச்சுக் கொல்ற நாய் கிடைச்சா வாங்கி வளக்க எல்லா ஆம்பளைங்களும் வரிசைக் கட்டி நிக்கறாங்கங்கிற மாதிரி ஜோக்ஸ்தான் முழுக்க முழுக்க…”
“சரி… ஓகே… இதெல்லாம் காரணமா வச்சு விவாகரத்துப் பண்ணிட்டீங்க சரி… இப்ப எப்படி? அதே கோபால், அதே வித்யா; அதே மாதிரி போஸ்ட்ஸ்தான் இன்னும் வர்ற மாடர்ன் சமூக ஊடகங்கள்… அப்ப இது எப்படி நடந்துச்சு?” காற்றில் இலேசாக குளிர் ஏறியிருந்தாலும், அதையெல்லாம் கவனிக்கக் கூடத் தோன்றாத வகையில் விஸ்வநாதனின் ஆர்வம் பொங்கி வழிந்தது.
“டைவோர்ஸ் ஆன கையோட நா வேற ஜாப் பாத்துக்கிட்டு துபாய் போயிட்டேன். ஒரே சந்தோஷம், சுதந்திரப் பறவையாயிட்டேன்னு. புது ஊரு, புது வேலை… எல்லாமேப் புதுசு. அதனால பழைய பேஸ்புக் அக்கவுண்ட் டீஆக்டிவேட் செஞ்சுட்டு புதுசா ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சேன்.”
“அதே வேலையத்தான் நானும் செஞ்சேன்…” அவசரமாக இடையில் நுழைந்தாள் வித்யா.
“டைவோர்ஸ் ஆனதும் எனக்கு ஒரே நிம்மதி. அப்பா அம்மா என் மேல செம காண்டுல இருந்ததால வீட்ல யாரும் என்கிட்ட மொகம் குடுத்துப் பேசல. அதனால நானும் மும்பைல ஒரு வேலைத் தேடிக்கிட்டு அங்கப் போயிட்டேன். நானும் பேஸ்புக்ல புது அக்கவுண்ட் ஆரம்பிச்சேன்.”
“ம்… மறுபடியும் ப்ரெண்ட் ஆயிருப்பீங்க. ஊரு வேலை எல்லாம் மாறினாலும், பேரு, முகமெல்லாம் அதேதானே…? அப்புறம் எப்படி ப்ரெண்ட்ஸ் ஆனீங்க? – விஸ்வநாதன்.
“அங்கதான் சார் விதி விளையாடிடுச்சு… சாரி… சாரி… அப்பதான் மன்மதன் அம்பு விட்ருக்கான்…” எனக் கூறியவாறு வித்யாவைப் பார்த்துப் புன்னகைத்தான் கோபால்.
“ஆமா சார்… அதுதான் மன்மதனோட லீலை போலிருக்கு. அவரு செஞ்ச கிறுக்குத்தனங்களையே நானும் செஞ்சேன்…” என்றவளை
“ஹேய்…” என்றவாறு செல்லமாக அடிக்க கையோங்கினான் கோபால்.
அடி தன் மேல் விழாதவாறு சற்று வளைந்து ஒதுங்கி கொண்ட வித்யா சிரித்தவாறே, “புது அக்கவுண்ட் ஆரம்பிச்ச நா வித்யான்னு எம் பேர போடாம, வித்யா லக்ஷ்மிங்கிற முழு பேர்ல அடுத்த பாதியைப் போட்டு ‘லக்ஷ்மி ராம்’னு பேரு போட்டேன். என் போட்டோவுக்கு பதிலா லட்சுமி மேனன் போட்டோ போட்டேன்… அங்க பாத்தா அவரும் ‘மதன் மோகன்’னு பேர் வச்சு தன்னோட நிழலைப் படமா போட்ருந்தாங்க. யாரோ தூரத்து… தூரத்து… ப்ரெண்ட் மூலமா, நாங்க மறுபடியும் ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். காலப்போக்குல பேஸ்புக் மூலமாவே பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்.”
ஒரு நொடி இருவரும் காதல் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.
“பேஸ்புக், வாட்ஸ் அப்னு சாட்டிங் பண்றப்ப இரண்டு பேருமே விவாகரத்து ஆனவங்கன்னு தெரிஞ்சு, உள்ளுக்குள்ள ஒரு மெல்லிய காதல் உருவாச்சு.”
“இப்ப நாங்க பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்ங்கிறதனால ஒருத்தருக்கொருத்தர் மத்தவங்ககி்ட்ட விட்டுக் கொடுக்கக்கூடாது, சப்போர்ட்டிவ்வா இருக்கனும்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. அதனால வித்யா அவ ஹஸ்பண்ட் பத்தி திட்டினா, அது என்னைப் பத்திதான் திட்டறான்னே தெரியாம நானும் சேர்ந்து திட்டுவேன்… வித்யா எவ்ளோ பாவம்! அவ பக்கம் எவ்ளோ நியாயம் இருக்கு, அவ புருஷந்தான் சரியில்லன்னு நம்ப ஆரம்பிச்சேன்.”
”அதே கதைதான் இங்கயும். அவர் குறிப்பிடற அவர் முன்னாள் மனைவி தான் தான்னு தெரியாம நானும் அவருக்கு பரிஞ்சு பேசுவேன். நானும் என் கணவர்கிட்ட இந்த மாதிரி சமயங்கள்ல இதே மாதிரிதான் சண்டைப் போட்டேன்னுல்லாம் யோசிக்க முடியாத அளவு காதல் கண்ண மறச்சுது.”
“ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியேப் பாக்காம லவ் பண்ணோம். அங்கதான் ஒரு ட்விஸ்ட் ஆச்சு.” சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள் வித்யா.
“ஒருநாள் போட்டோ அனுப்பிக்கிட்டப்ப பயங்கர அதிர்ச்சி. மறுபடியும் ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்கிட்டு, கொஞ்ச நாள் மொறப்பா பேசிக்கவே இல்ல. இந்த இடைவெளில எங்க ப்ரெண்ட்ஷிப் கொடுத்த இனிமையான நினைவுகள் எங்கள நிதானமா யோசிக்க வச்சது.”
“ஒரு புரிதலும் நட்பும் இருந்ததால பழைய மாயைகள் எங்கள விட்டுப் போயிருச்சு. நீயா நானான்னு உரிமைப் போராட்டம் நடத்த கல்யாணம் பண்ணிக்கிறதுல்ல. நகைச்சுவைங்கிற பேர்ல ஒரு ஸ்லோ பாய்சன் பரப்பிட்டு இருக்காங்க, அது நாளடைவுல இளைஞர்கள் மனசை, திருமண வாழ்க்கையை எப்படி பாதிக்கும்னு யாருக்கும் கவலையில்ல. நாங்க இத மாதிரி பதிவுகளுக்கு இரையாயிட்டோம்னு தெரிஞ்சது.”
“காதல் கல்யாணமோ, இல்ல பெத்தவங்க பாத்து செஞ்சு வக்கிற கல்யாணமோ எதுவானாலும், ஆண், பெண் இருவருமே, திருமணத்துக்கு முந்தைய பழைய வாழ்க்கைமுறைய தேவைக்கேற்ப கொஞ்சம் மாத்தியமைச்சுக்கிட்டாதான் புது வாழ்க்கை இனிமையா இருக்கும்.
பரஸ்பர அன்பும், காதலும், நம்பிக்கையும் இருந்தாலே ஒருத்தருக்கொருத்தர் தேவையான சுதந்திரமும், உரிமையும் இருக்கும், குடும்ப வாழ்க்கை சுவையா இருக்கும்னு தெரிஞ்சிக்கிட்டோம். இப்ப மறுபடியும் சேர்ந்துட்டோம்.” என இருவரும் கைகோர்த்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
வானில் விடிவெள்ளி முளைத்திருந்தது.



                

No comments:

Post a Comment